புதன், 31 அக்டோபர், 2018

கடை வடையை நிறுத்து.

கடை தினம்தந்த வடை
காசுச் செலவினை உடை;
வடை தினம்வாங்கி நானும்
வாழ்வில் நொடித்தது காணும்

இனியேது செய்வேன் என்று
நான் ஏக்கம்கொண்டது முண்டு.
தனியாக நான்படு துயரைத்
தடுத்திட வேண்டேன் வடையை.

என்னினும் அவனுழைப் பாளி
எடுத்த வேலையில்பப் பாளி;
தன்னுள் பலவிதை வைத்தான்
தன்னையே மேல்வர உய்த்தான்.

மாலைதொறும் இனிப் பிசைவேன்
மாவொடு வடைசெய இசைவேன்;
காலையும் மாலையும் உழைத்தே
காசுச்செலவினைப் பிழைப்பேன்.

கடை என்பது  சீனா.  நான் என்பது அமெரிக்கா.
சீனாவின் பொருள்களை மிகுதியாக வரவழைத்து
அமெரிக்கா கடனாளி யாகிப் பலர் வேலையில்லாது
துன்புறுகின்றனர்.  அதைமாற்ற இப்போது வணிகப் போர்
நடைபெற்றுக்கொண்டு உள்ளது. கடனை அல்லது
கட்டவேண்டியதை எப்படிச் சமன்செய்வது. அந்தக் கேள்விக்கு
இந்தக் கவி பதில்தருகிறதா என்று பாருங்கள்.

இல்லையென்றால் உங்கள் பதிலைத் தாருங்கள்.

பிழைத்தல்:  இதன் பொருள் வேறுபடுதல் என்பதே.
அறிஞர் க.ப, மகிழ்நன் இதை விளக்கியுள்ளார்.
நூல்: தமிழ்களஞ்சியம் (1945 வெளியீடு). இங்கு மாற்றுவேன்
என்பது பொருள்.

உலகில் பிழைப்பதென்பதும் வறுமையை மாற்றிக்கொள்வதுதான்.

கருத்துகள் இல்லை: