செவ்வாய், 2 அக்டோபர், 2018

சனி தனி; தங்கு சங்கம்.

சிலர் சனி என்ற பெயரைச் சொல்லவும் அஞ்சுமளவிற்கு சனி மிகுவலிமை பெற்ற கோளாகும். இதன் நிறம் கருப்பு ஆகும். அதனால் தமிழில் இதற்குக் காரி என்றும் பெயருண்டு.  சில சோதிடப் பாடல்களில் காரி என்ற சொல் பயன்படுத்தப்படுவதுண்டு.

எந்தக் கோளுக்கும் ஈசுவரப் பட்டமில்லை. ஒரு விதிவிலக்காக சனிக்குமட்டும் ஈசுவரன் என்பர்.  சனீசுவரன். ஏழரை நாட்டான் என்றால் எல்லோருக்கும் அச்சம்தான்.

ஒரு தனிமதிப்பு உடைய கோளாதலின் தனி என்ற சொல்லே திரிந்து சனி என்று அமைந்தது.

அத்தன் என்ற அப்பனைக் குறிக்கும் சொல், அச்சன் என்று திரிந்து தகரம் சகரம் ஆயினது காண்க.  இனி தசை > சதை என்பதும் காண்க. இதன்படியே தனி என்பதும் சனி என்று திரிந்தது. வியத்தற்கு ஒன்றுமில்லாத் திரிபு இதுவாகும்.

இதேபோல் பல புலவர்களும் வந்து தங்கி  அரசன் இட்ட உணவினையும் உண்டு பின் அவனைக் கண்டு கவிபாடிப் பரிசில் பெற்றுச் சென்ற இடம், சங்கம் ஆனது.  தங்கு > சங்கு > சங்கம்.

ஒரு நத்தைபோலும் உயிரி, தங்கிவாழும் கூட்டுக்குச் சங்கு என்ற பெயர் மிக்கப் பொருத்தமன்றோ. பின்னர் வெறும் சங்கை எடுத்து ஊதி  அவ்வொலியையும் சங்கொலி என்றனர்.  நாவு, சங்கு வாய் என எல்லாம் இணைந்து எழுப்பிய ஒலி, சங்கொலி, சங்க நாதம் எனப்பட்டது.

சிறிய சங்குகளைக் கோத்து மாலைபோல் கழுத்தில் அணிந்தனர். பிற்காலத்தில் போதுமான சங்கு கிட்டாததாலோ அல்லது வேறு காரணத்தாலோ சங்கு இல்லாத மாலைகள் அணிந்தனர். அது சங்கு இல்லாதது ஆகையினால் சங்கிலி  சங்கு இலி  ஆனது.  சங்கும் அம் விகுதி பெற்றுச் சங்கமானது. அப்போது ஒலி என்றும் கழகம்  என்றும் பொருள்பெறும்.

சங்கிலிக் கறுப்பனுக்கும் சங்கிலிக்கும் வந்த தொடர்பென்ன?

தாம் சேருமிடத்தில் இருப்பதைத் தங்குதல் என்றனர்.  தம்+கு.    தன் என்பது ஒருமை; தம் என்பது பன்மை ஆகும்.  கு என்பது சேர்விடம் குறிக்கும் உருபு.

தான் தான் என்று இரு தான் கள் சேர்ந்து தாம் ஆகி,  தாம் சேர்விடம் தம்+கு  என உருவாகும்;  இது தங்கு ஆனது.  தங்கு> சங்கு > சங்கம். தான்-கள் பல தங்கிய இடம் சங்கம். இதில் என்ன அயல்மொழி? ஒன்றுமில்லை. இது இனிய சொல்லாதலின் பலரும் பயன்படுத்திக் கொண்டமை தமிழின் உயர்வையும் வழங்கலையும் உலகுக்கு உணர்த்தும்.



கருத்துகள் இல்லை: