வியாழன், 4 அக்டோபர், 2018

வதந்திக்கு வேறு வடிவங்கள்.

வதந்தி என்ற சொல் உண்மையில் தமிழ்ச்சொல்லே என்பதை வெளிப்படுத்தினோம்.  இதை எப்படியெல்லாம் அமைத்திருக்கலாம் என்பதை இப்போது பயிற்சி செய்வோம்.

வரு+  தரு + தி =  வருதருதி.

பொருள் அதுவேதான்:   வருகின்றவர் தருகின்ற செய்தி.

இத்தகு செய்திகள் பொய்யாகவும் இருக்கலாம்; மெய்யாகவும் இருக்கலாம். அது உரிய செய்தி அறிவிப்பு நிறுவனத்தின் வழியாக வரவில்லை என்பதுதான் இதன் உட்கருத்து.

வருதருதி என்பது  இனிமையாக அமையவில்லை. அருவருப்பாக உள்ளது!  ஆனால் அருவருப்பு என்பதில் இரண்டு ருகரங்கள் இருந்தாலும் நன்றாகவே உள்ளது.  வருதருதி என்பது நீளமாகவும் உள்ளது.

இரண்டு ருகரங்களையும் எடுத்துவிட்டால்,  எப்படி இருக்கும்?

வ+   த +  தி.

இதைச் சேர்த்து ( புணர்த்தி ) எழுதினால்  :

வத்தத்தி.

வத்தச்சி என்று ஒரு சொல் வழக்கில் உள்ளது போலும்.  இது அதுபோல் ஒலிக்கிறது.  வத்தி தத்தி என்பவெல்லாம் பாட்டில் நன்றாக இருக்கும்.  இங்கு
ஒலித்தடை உண்டாவதுபோல் உள்ளது.

தகர ஒற்றுக்களை மெலித்து நோக்குவோம்:

வந்தந்தி.

இதுவும் அவ்வளவு நன்றாக இல்லை.   இன்னும் அறுவை தேவைப்படுகிறது.

வதந்தி:  இப்போது நன்றாக உள்ளது.  வழக்கில் இது  நன்றாகவே செயல்புரிகிறது.

கருத்துகள் இல்லை: