சனி, 20 அக்டோபர், 2018

சற்றிருப்பதும் வைத்திருப்பதும்.

இக்காலத்தவர் வேலையிலிருந்து விடுப்பு எடுத்தமகிழ்வுடன் பயணச்சீட்டையும் வாங்கிக்கொண்டு தாம் எங்கு சென்று ஓய்வெடுக்க முடியுமோ அங்கு பறந்து சென்றுவிடுகின்றனர். வானூர்திகள் இல்லாத பழங்காலத்தில் எங்காவது போகவேண்டுமென்றால் இவ்வளவு வசதிகள் இல்லை. யாரிடமும் பயணச்சீட்டுகள் வேண்டிப் பெறவேண்டியதுமில்லை; அவர்கள் இல்லையென்று சொல்லி அதனால் மனம் தொல்லைப் பட வேண்டியதும் இல்லை. இப்போது கிடைப்பவைபோல் தூக்குப் பெட்டிகளும் அப்போது இல்லை.  மாட்டு வண்டிகள் மட்டும் இருந்தன. அவற்றுள்ளும் பல சொந்தப் பயன்பாட்டுக்கே கிட்டின.

ஔவையார் போன்ற புலவர்கள் பாவம். பயணம் செல்கையில் தங்குவதற்கு இடமின்றி, கேட்டறிந்துகொண்டு, ஒரு பாழடைந்த வீட்டில் சென்று தங்கினார்.  இரவில் முதல் யாமம்,  இரண்டாம் யாமம், மூன்றாம் யாமம் என்று ஒவ்வொரு யாமத்துக்கும் பேய் வந்து தொல்லைகொடுக்க,  "எற்றோமற் றெற்றோமற் றெற்று" என்று முடியும் சில அழகிய வெண்பாக்களைக் கொண்டு பேயினிடத்தும் பேசினார்.   அந்த வெண்பாக்கள் இன்னும் நம்மிடை உள்ளன. இவை சுவையான வெண்பாக்கள். 

யாமம் என்ற சொல் யாத்தல் என்ற சொல்லினின்று வருகிறது.  யாத்தலாவது கட்டுதல்; பிணித்தல்; இறுக்கித் தொடர்புறுத்தல் ஆகும்.  இந்த யாமங்களில் உயிர்கள் உறக்கத்தில் இறுகப் பிணிக்கப்பட்டுக் கிடக்குமாதலால் , யாமம் என்ற சொல் அதைக் காட்டப் பிறப்பிக்கப்பட்டது.   யா (பகுதி) + ம்+ அம் =  யாமம் ஆனது.   அது பின்னர் அயல்திரிபுகளும் அடைந்தது.  உங்கள் வீட்டு ஆட்டுக்குட்டி அடுத்தவீட்டில் கட்டிக் கிடந்தால் -  அவ்வீட்டானும் கொடுக்க மறுத்தால் -  நீங்களும் காவல்துறையிற் புகார் கொடுத்தால் -  அவர்கள் எப்படி முடிவு செய்வார்கள்.  இருவருக்கும் பொதுவான ஒரு நடு இடத்தில் ஆட்டுக் குட்டியை விட்டு அது எங்கு போகிறது என்று பார்த்து அப்புறம் அந்த வீட்டில் ஒப்படைத்தார்களாம்!!  அதுவே சொல்லாக இருந்தால்....?

யாமம் என்பதில் ம் ஒற்று ஓர் உடம்படு மெய் என்றே சொல்லவேண்டும், இது எப்படித் தோன்றி   உள்வந்தது?   யாக்கும் + அம் =  யா(பகுதி மட்டும் எடுக்கப்பட்டது ) + ( உ ) ம் + அம் =  யா+ ம் + அம் = யாமம்.  மகர ஒற்று இப்படிச் சிந்தித்துத்தான் பெறப்பட்டது.   உம்மையில் (  உம் இடைச்சொல்லில்) பெற்றதே இந்த மகர உடம்படு மெய் ஆகும்.  அம் என்பது அமைப்பு என்பதன் தரவு,   அல்  அன் என்பனவும் அம் என்று திரியும். எல்லாம் தமிழில் உள்ளனவே.

 புகார் என்ற சொல்:  https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_31.html
அரண்மனைக்குள் புகுவார் அனுமதி உடையவர்.  அரசன் வீற்றிருக்கும்போது உள்ளுக்குப் போகலாம்.  புகார் -  அனுமதி கிட்டினன்றிப் போக முடியாதவர்கள்.  அவர்கள் கொடுக்கும் மனு புகார்மனு.  நாளடைவில் புகார் என்பதற்கு நடவடிக்கை கோரும் மனு என்ற பொருள் ஏற்பட்டுவிட்டது.

இவை நிற்க.

பயணம் போகும் போது  ஓர் இரவு அல்லது கொஞ்ச காலம் தங்கிச் செல்லுமிடமே சத்திரம்.  இது சற்று இரம் என்பதன் திரிபு.  சற்று :  சத்து. இரு என்பது அம் விகுதி பெற்று  இரம் ஆகிற்று.   சத்து இரம் --  சத்திரம்.

இவர்கள் பெரும்பாலும் ஒரு சிறு மூட்டை துணியுடன் சென்றனர்.  அவர்கள் வைத்திருந்தது அந்தத் துணிமூட்டைதான்.  அதையே தலைக்கு வைத்துக்கொண்டு தூங்கினர்.  அதுவே வைத்திரம் எனப்பட்டது.   வைத்து இருப்பது வைத்திரம்.  வைத்திரம் >  வத்திரம் > வஸ்திரம்.

இந்த வத்திரம் என்பது இப்போது இலத்தீன் மொழிமுதல் பல மொழிகளிலும் பரவி மருட்டுகிறது.    vest. invest. investiture. divest.  இன்னும் பல.  பெரும்பாலும் இந்தப் பயணிகள் சிறிய துணிமூட்டையே வைத்திருந்ததால் உலக மொழிகள் அடைந்த ஊதியம் பெரிதே.

உலகம் வாழ்க!




கருத்துகள் இல்லை: