திங்கள், 22 அக்டோபர், 2018

தீனர் என்ற சொல். (திரிசொல்)

தின்,   தீன் என்ற சொற்களை இன்று அறிந்துகொள்வோம்.

மக்கள் சாப்பிடுவது, " உண்பது"  என்று  சொல்லப் படும்.  பெரும்பாலும் விலங்குகளின் உட்கொள்ளுதலே தின்பது என்ற சொல்லால் குறிக்கப்பெறும்.என்றாலும்  சில வேளைகளில் மனிதனையும் "தின்னு" என்று ஏவுதல் உண்டு  .

ஏழைகளின் உணவு இரங்கத் தக்க தரத்தினதாய் உலகெங்கும் இருப்பதனால் அதற்கு ஏழ்மை என்ற பொருள் ஏற்பட்டது.

தின் + அம் =  தீனம்.  எளிமை, வறுமை இன்ன பிற.

இது முதனிலை திரிந்து அம் என்னும் விகுதி பெற்ற பெயர்ச்சொல் ஆகும்.  இது தின்னுதல் (  விலங்குபோல் உட்கொள்ளுதல் )  என்னும் கருத்தினின்று  அமைந்ததே ஆம். இதைப் போல முதனிலை நீண்டு அமைந்த இன்னொரு சொல்:

படு >  பாடு. (  இது விகுதி பெறவில்லை.)

விகுதி பெற்றது:

நடி  +  அகம் =  நாடகம்.  ( இங்கு ந  என்பது  நா என்று நீண்டது.   அகம் என்ற
விகுதி பெற்றது.   நடி என்பதன் இறுதி    இகரம் கெட்டது , அல்லது வீழ்ந்தது ).

இவை போல்வன பழைய இடுகைகளில் ஆங்காங்கு காட்டப்பெற்றுள்ளன.

இவற்றையும் அறிக:

தின் + இ =  தீனி.   (முதனிலைத் திரிபு;  இகரம் விகுதி ).
தின் + இ  =  தின்னி.   ( ஒருனகர ஒற்று தோன்றல்;  இகரம் விகுதி. முதனிலை  இயல்பு ஆனது ).   "இவன் ஒரு பலகாரம் தின்னி." (  வாக்கியம் )
தின் + அர் =  தீனர்.  ( முதனிலை நீட்சித் திரிபு;  அர் விகுதி).  ஏழைகள்.
தின் > தீன்:   உட்கொள்பொருள்.

தின் > தீனன்:  விலங்குட்கொள்வது போன்றவை  உட்கொள்ளும் ஏழை,
பின் பொதுப்பொருள்:  ஏழை, வறியோன்.

தீனி

மக்கள் என்பது உயர்திணையாகவும் மாக்கள் அஃறிணையாகவும் கொள்ளப்படும்.  மாக்களாவர்,  மக்கள் போல் உருவில் மக்கள் அல்லாதவர்.   தீனி என்பது மாக்கள் உட்கொள்வதும் விலங்குகள் உட்கொள்வதும் ஆகிய தாழ்ந்த பொருள்.  இம்மாக்கள் பலர் ஏழைகளும் ஆவர். இவர்களே தீனரும் ஆவார்கள்.
.

இறைவன்முன் தன்னைத்  " தீனன்" என்று பற்றன் சொல்லிக்கொள்வது  ஓர்
அடக்கமாகும்

அடிக்குறிப்புகள்:

1.   தீனரைத் தியக்கறுத்த திருவுடையார்:  தேவாரம், 477.
2.    தீனன் : மிகுதியாய் உண்போன் என்பதுமாம்.
3.   தீனம்:  நோய்.( என்பதுமாகும்)
4     தீனவத்சல, எளியோர்க்கிரங்குதல்;  தீனநுகம்பன.
5.   தின்பண்டம் - தீன்பண்டம் என்பதும் ஆகும்.
6     உணவு என்ற அடிப்படையில் எழுந்து பின்னர் பொருள்மாற்றமடைந்து  ஏழை என்று பொருள்கொண்டதனால் இது திரிசொல் ஆகிறது.  (  இயற்சொல் அன்று ).

7. "ஞானகுருபரன் தீனர்க்கருள் குகன்"   ( இசைப்பாடல்)

8 தீன தயா பரனே தேவனே (பாட்டு ) :  விலங்குணவுபோலும் உட்கொள்ளும் ஏழையர்க்கு அருள் தந்து  காப்பாற்றும் தீபோலும் தூயவனே - இறைவனே என்று விரிந்த பொருளைச் சொல்லாய்வின் மூலமே கூறலாம்.  பிறவழிகளிட் பொருள் குறுக்கம் பெறும்.

தீ > தே > தேவன்:   தீ என்ற சொல்லினின்று தே என்று திரிபு ஏற்பட்டதால் தேவன் என்பதற்கு இவ்வாறு விரித்துப் பொருள் கூற இயல்கின்றது. தே எனற்பாலதற்கு தீ போலும் தூயவன் என்றே பிறரும் கோடி காட்டுவர்.





   

கருத்துகள் இல்லை: