இளி என்னும் சொல்லைச் சுட்டுச் சொற்களுடன் தொடர்புறுத்தி இதுபோழ்து ஆய்வுசெய்வோம்.
அடிக்கடி சிரித்துக்கொண்டிருப்பவனைப் பார்த்து என்ன இப்படி இளித்துக்கொண்டிருக்கிறான் என்று சிலர் கடிந்துகொள்வதுண்டு.
இளித்தல் என்பது சிரித்தல் என்றே பொருள்படுமேனும் அது இப்போதைய உலக வழக்கில் சற்று தாழ்நிலை அடைந்துவிட்டதென்று கருதலாம். இருந்தபோதும் அதன் பொருள் மறைவுற்றுவிட வில்லை.
இ என்பது அண்மைச் சுட்டு. இடத்தாலும் காலத்தாலும் அண்மை உணரப்படும்.
இன்று: இது காலத்தால் அண்மை.
இங்கு: இது இடத்தால் அண்மை.
இரண்டிலும் முதலாய் இகரமே நிற்றல் அறிக.
இனி, இளித்தல் என்ற சொல்லில் ஒட்டிக்கொண்டிருக்கும் தாழ்வு நிலையினைக் கழற்றி அப்பால் வைத்துவிட்டு அதனை அதன் தொடக்க நிலைக்குக் கொண்டுசெல்வோம். செல்லவே, அதனில் இரண்டு இகரங்கள் வந்திருத்தலை உணரலாம்.
இ(ள்) + இ.
இளிக்கும்போது ( தாழ்வான கருத்தை எடுத்துவிட்டோம், நினைவிலிருத்துக ) இங்கிருந்து இங்குவரை உதட்டின் வெளிப்பகுதி விரிந்து சுருங்குகின்றது. இங்கு அதாவது முதல்சொன்ன இங்கு என்பது ஓர் இறுதியையும் இரண்டாவதாய்ச் சொன்ன இங்கு மறு இறுதியையும் குறிப்பது தெளிவு ஆகிறது. இவ்விரு இறுதிகளையும் விரலால் சுட்டி நன் கு உணர்ந்துகொள்ளலாம்.
ஆகவே இச் சுட்டுச் சொல் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் உணரப்படும்.
உணரவே, இச்சொல் ஒலிசெயல் காரணமாய் அமையவில்லை என்று புலப்படும். இடம் காரணமாகவே அமைந்துள்ளது. ஓர் இறுதியிலிருந்து இன்னோர் இறுதிக்குச் சென்று விரிந்திருக்கும் இதழ்கள். இவ்விறுதி இட இறுதியாகும்.
இரண்டையும் இறுதியென்றே குறித்தோம் - அப்படிக் குறிப்பது விளக்கத்தை எளிதாக்கும் பொருட்டு.
ஒன்றை முதலாகவும் இன்னொன்றை இறுதியாகவும் மாறிமாறி நீங்கள் வைத்துக்கொள்ளலாம். எமக்கு இது வெறும் சொல்லீடே அன்றி வேறில்லை. ஆதலின் இறுதி என்ற ஒருசெல்லைக் கொண்டே விளக்கினோம்.
அகர வருக்க எழுத்துக்களில் இகரமும் ஒன்று. இவ்வருக்கதன பின் சகர வருக்கத்தனவாய்த் திரியும் என்பதனை முன்பெய்த இடுகைகளில் விளக்கியுள்ளோம். எடுத்துக்காட்டு: அமண் - சமண் என்று திரிபு கொள்ளும். அடு> சடு > சட்டி என்று சொல்லமையும். அடுதலாவது சமைத்தல். சடு + இ= சட்டி.
இதனியற் படி இளி என்பது சிளி என்று திரியவேண்டும். ஆனால் காலப்போக்கில் இவ் ளிகரமும் ரிகரமாய்த் திரிந்தது. ளகரம் ரகரமாய் மாறும் இடனும் உண்டு. மாள் > மார் > மாரகம். வாள் ( நீட்சி)
> வார் (நீட்சி ). வருக்க எழுத்துக்களிலும் இஃது அமையும். ஆகவே ளி என்பது ரி ஆயிற்று. இச்சொல்
( சிரி ) என்பது இருமடித் திரிபுடைத்தாம். போதுமான ஈடுபாடின்மையால் ஐயமுடையோர் எம் பற்பல இடுகைகளையும் கண்டு தெளிவடைவீராக.
இள் இ என்பவற்றில் வந்த ளகர ஒற்று யாது? இல் என்பது ஒரு சுட்டுச்சொல்லே. இதுவும் இகரத் தொடக்கத்ததே. இடப்பொருளே இதன் பொருளும். இதுவே இள் என்று மாறி நின்று இடம் குறித்தது. இதனை ஆங்குக் கூறாமைக்குக் காரணம் குழப்பம் தவிர்க்கவேயாகும். ஆகவே இல் + இ > இலி > இளி என்று அமைந்ததன் சுவடே ளகர ஒற்று ஆகும். லகர ஒற்று ளகர ஒற்றாய் உருமாறி இன்றளவும் உள்ளது என்பதைக் காண்க.
தொடக்கத்தில் லகரமு ளகரமு வேறுபாடின்றி இருந்தன. இஃது மொழியின் வரலாறு ஆகும். இவ்வரலாற்றின் சுவடாக இன்னும் நம்மிடையே சில சொற்கள் இருமாதிரிகளிலும் எழுதப்பெறும் தகையனவாய் உள. அவற்றைச் சில இலக்கண நூல்களில் கண்டும் படிக்கும்போது அறிந்தும் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். யாம் ஓர் உதாரணம் தருவோம். செதில் > செதிள் என்று இருவகையிலும் வருதல் கண்டுகொள்க. காணவே இல் என்பது பண்டை இள் என்று நின்றதன் காரணம் விளக்கம் வேண்டாமலே உணரலாம். சொற்களின் தொகை பெருகவே ளகர லகர வேறுபாடுகள் வலிவுற்றன. மிகுதியான சொற்களின் தேவைக்கு இவ்வேறுபாடுகள் அரணாகின. ஆனால் சில முன்போல் வலம் வந்தன. இவற்றைப் போலி என்ற விளக்கத்தலைப்பில் வைத்து இலக்கணம் தத்து ஏற்றது.
அறிக இன்புறுக.
திருத்தம் பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக