வியாழன், 16 ஜூன், 2016

திருலோக சந்தர் மறைவு .

திருலோக சந்தரவர் மறைந்து   விட்டார்
திரைகளிலே பெயர்கண்டு தெரிந்தோர் பல்லோர்
பரலோகம் படர்தலுக்கும் வயதும் உண்டோ
பார்ப்போருள் நான்நீஎன் றியார்க்கும் நன்றே
இருலோகம் கால்வைத்தும் இருக்கும் தன்மை
இதுபிழையா தென்பதுவே உளது காண்பீர்
தரவேணும் மரிநாள்மேல் தாவும் காறும்
தமிழுக்கோர் நலம்தன்னைச் செய்தார் என்பர்

காணொளியில் யாமறிந்தார் கருதும் காலை
கல்விகலை நலம்செய்தார் கணக்கில் நண்பர்
மாணுறவே ஆள்கண்டோர் உளரோ இல்லை
மடிக்கணினி தாளிகைக்குள் மண்டி நிற்பார்
வீணுறவே பூண்காலம் கழிந்தி டாமல்
விளைத்திட்டார் கலை யின்பம்  இன்னோர்  எல்லாம்;
சாணளவே பயனெனினும்  முழமாய்க் கொள்வோம்
சாவினையே மேவுறினோ வீழ்புன் கண்ணீர்.


மாணுறவே ஆள்கண்டோர் உளரோ -அதாவது  என் வட்டாரத்தில் இவரை நேராகக் கண்டோர் யாருமில்லை.
பூண்காலம்:  பூணும் காலம் . நாம் பொருந்தி வாழும் இக்காலம் .
அதாவது   நாம் காலத்தின் வாயில்  அகப்பட்டது   -  அகவை;   நாம் வயப்பட்ட  அல்லது  நமக்கு வைக்கப்பட்ட காலம் வயது.  அதன்பின் நாம் சென்றுவிடுவோம்.  காலம் நம்மை இப்போது அணிந்துகொண்டிருக்கிறது,  பூணுதல் -  அணிதல்.  அல்லது நாம் காலத்தை அணிந்துகொண்டிருக்கிறோம் . அதனால் நாம் வயது குறித்துக்கொள்கிறோம்.  இந்த   இரு கருத்தும் பொருந்துவது  "பூண் காலம் "  என்னும் தொடர்.

புன்கண்ணீர்  -  துன்பக் கண்ணீர் .

தலைப்பு: திருலோக சந்தர் மறைவு 





கருத்துகள் இல்லை: