திங்கள், 27 ஜூன், 2016

உச்சரிப்பு.

‍‍‍முதலில் உச்சரிப்பு தமிழா என்போர் உண்டு. உச்சரிப்பதென்பது தொன்று தொட்டு பேச்சு மொழியில் வழங்கிவரும் சொல் என்றே தெரிகிறது. இது சங்கதமொழியிலும் இருக்கிறது. உடலிலிருந்து வெளிப்படுத்துதல் என்பதே இச்சொல்லின் பொருளாதலின், மலங்
கழித்தல் உட்பட விரிந்த பொருளுடையதாய் உள்ளது. தமிழில் இது
நாவினால் ஒலித்தல் என்ற பொருளே உடையதாய் ஆளப்படுகிறது.

இதை நுணுகி ஆய்வோம். சரிதல் என்பதன் பிறவினை சரித்தல். சரிதலாவது சாய்வாக வீழ்தல். மலை சரிந்துவிட்டது, மண்சரிவில் சிக்கி மாண்டனர் என்றெல்லாம் வழக்கு இருப்பதை அறிவோம். சரித்தல் ‍ சாய்வாய் விழும்படி செய்தல்.

உச்சரித்தல் என்பதில் முன் ஓர் உ அல்லது உகரம் உள்ளது, இந்த உகரம் ஒரு சுட்டு. முன்வந்து விழுதல் என்பது தோன்ற உகரம் வருகிறது. சமஸ்கிருதம் என்றும் பேச்சுமொழியாய் எங்கும் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆரியர் என்போரும் சிறந்தோர், அறிந்தோர் என்ற பொருளில் வருதலன்றி ஓர் இனப்பெயராய் வருவதில்லை. பேச்சில்லாத இலக்கிய மொழியில் சுட்டுதல் தோன்றியதென்பதினும் அவை பேச்சுமொழியான தமிழில் தோன்றியதென்பதே பொருத்தமுடையதாம். .இடங்களில் நடமாடுவோரே அங்குமிங்கும் சுட்டிப்பேசுவர். இதனால்தான் சுட்டுக்கருத்துகளைத் தமிழில் எடுத்துக் காட்ட முடிகிறது.

சமஸ்கிருதம் சந்த அசை மொழியாக முன் அறியப்பட்டது. அதனால் அதன் முந்துபெயர் சந்தாசா அல்லது சந்தசைவு. அதாவது சந்தம் வெளிப்பட வாயை அசைக்கப் பயன்பட்ட மொழி. மொழி என்பதைவிட அதனை அசைகளின் தொகுப்பறை எனலாம். இன்ன கூட்டத்தார் பேசிய மொழி என்றில்லை. இன்று இதில் மந்திரம் பலுக்குவோரும் பல்வேறு தாய்மொழியினர்; கூட்டத்தினர். மங்கோலியப் பரம்பரையில் வந்தோர்கூட உள்ளனர் என்று அறிக.

பிராமணருள் பல சாதியாரும் பல மொழியினரும் பல நிறச்சாயல் உடையோரும் உள்ளனர். சமஸ்கிருதம் அவர்களின் அலுவல் மொழி.

தொடக்கத்தில் இதில் இலக்கியங்கள் படைத்தோர் ‍ வால்மிகி: தாழ்ந்த சாதியினன். ( அப்போது அவர்கள் சாதி உயர்ந்ததாய் இருந்திருக்கலாம், அல்லது சாதிகள் வரையறைப் படாமல் இருந்துமிருக்கலாம்.) வேதவியாசன் ‍ ( இது இவன் இயற்பெயரன்று, காரணப் பெயரே) மீனவன்; வேதங்களில் உள்ள பல பாடல் பாடியோரும் உயர்சாதியினர் அல்லர். இவர்களைப் பிராமணர் என்பது அவர்கள் பிரம்மத்தை உணர்ந்தவர்கள் என்பதனால். பிறப்பில் வந்த சாதியால் அன்று. பாணினி என்னும் சங்கத இலக்கணம் பாடியோன் ஒரு பாணன், அவன் பெயரும் காரணப் பெயரே. பாண் என்ற சொல்லோ பாணத் தொழிலைக் குறிப்பது. இசைஞர்களான பாணர் பெரும் புலவராயிருந்தனர். சாணான் ஆகிய சாணக்கியனும் பிராமணன் அல்லன், ஆனால் பிராமணன், அது பிரம்மத்தை உணர்ந்ததனால்.

துணைக்கண்ட முழுதும் பேசப்பட்ட தமிழ், பல்வேறு திரிபுகளை அடைந்தமை சொல்லித் தெரியவேண்டாதது. சமஸ்கிருதத்தில் உள்ள மூன்றில் ஒரு பங்கு சொற்கள் தமிழ் அல்லது திராவிடத் திரிபுகள். இன்னும் ஒரு பங்கு, திராவிடச் சொற்களோ என்று ஐயுறத் தக்கவை.
இறுதி ஒரு பங்கு ஏனை இந்தோ ஐரோப்பியச் சொற்களோடு தொடர்புற்றவை. இவ்விறுதி இரு தொகுதிகளிலும் தமிழ் மூலங்கள் இல்லை என்பது இதன் பொருளன்று. சமஸ்கிருதச் சொற்றொகுதி, தமிழிலிருந்தும் ஏனைப் பாகதங்களிலிருந்தும் கல்லி எடுக்கப்பட்ட தொகுதி என்பதறிக. அப்படித்தான் அது நன்றாகச் செய்யப்பட்டது.

சமஸ்கிருதத்தில் ஏன் தாழ்த்தப்பட்டோர் எழுதியவை முந்து நூல்களாய் உள்ளன என்பதை ஆய்ந்தறிந்தால், அது ஆரிய மொழி, வெளியிலிருந்து வந்தது என்பது ஆட்டங்கண்டுவிடும். \\

அதனால்  உச்சரித்தல் என்பது  எப்படி வந்த சொல்  என்பதே கேள்வி . முன் சரிந்து வந்து  வீ ழ்ந்ததே ஒலி, அதுதான்  உச்சரிப்பு.

continued at : https://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_58.html







கருத்துகள் இல்லை: