htps://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_17.html
மேற்கண்ட இடுகையிலிருந்து நாம் தொடர்கிறோம். நாம் சுவைத்துக் கொண்டிருப்பது குறுந்தொகை என்னும் சங்க இலக்கியத்தில் உள்ள சத்திநாதனார் என்னும் புலவர் இயற்றிய ஒரு பாடலை.
சிறுவெள் அரவின் அவ்வரிக் குருளை
கான யானை அணங்கி யாஅங்கு
இளையள் முளைவாள் எயிற்றள்
வளையுடைக் கையளெம் அணங்கி யோளே.
இஃது பாங்கன் பால் ஒரு தலைமகன் கூறியதைக் கொண்ட பாடல்.
இதன் பொருளை முதலில் அறிவது நல்லது.
வெள் அரவின் = வெள்ளைப் பாம்பின்; சிறு அவ் வரிக் குருளை =
அழகிய வரிகளை உடைய ஒரு சிறிய குட்டியானது ; கான யானை = காட்டகத்தே உள்ள ஒரு பெரிய யானையை; அணங்கியாங்கு பிடித்துக்கொண்டு கடித்துத் துன்புறுத்தியது போல; இளையள் சிறு அகவையினள்; முளைவாள் = முளைத்து ஒளியுடன் விளங்கும்; எயிற்றள் = பற்களை உடையவள். அதாவது: பல்லழகி;
வளையுடைக் கையள் = வளையல்கள் அணிந்த கையை உடையவள்;
எம் = எம்மை; அணங்கியோளே = வருத்தியவள் ஆவாள்.
என்றபடி.
அவள்தன் ஈர்க்கும் இளமையும் அழகிய பளிச்சிடும் பல்வரிசையும்,
கைவளைகள் எழுப்பும் ஒலியும் தம்மை வருத்தித் தாக்குவனவாகி,
தம் ஆண்மை அவளுக்கு அடிமைப்பட்டதனால் "தந்நிலை தடுமாறித் திரிகின்றேம்" என்கிறான் தலைவன் பாங்கனிடம்.
அவள் நிறம் வெண்மை. அவன் வயதிற் சிறியவள். அவள் வரிகளை
உடைய குட்டிப்பாம்பு. வீரிய்த்தில் யாம் காட்டு யானை ஆயினும் அவள் கடிக்கு ஆளாயினேன். வரிகள் அவள் அழகினை உறுதிப்படுத்தும் குறிப்பு. வீழ்ச்சி எமதே என்கிறான்.
அவன் வீழ்ந்தபின், அவள் தேடி வரவில்லை போலும். மேலும்
வந்து சந்திக்கவில்லை போலும்.
வெள்ளைப் பெண்ணிடம் ஒரு சந்திப்பில் கெட்டான் அவன்.
அவன் பரிதவிப்பைப் காட்டுகிறது இப்பாடல்.
குட்டிப்பாம்புபோலும் ஒருத்தியிடம் தன் கட்டிளமை இழந்தவன் கதை இது.
அவள் அலையவில்லை; அவன் அலைகிறான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக