சனி, 6 ஆகஸ்ட், 2016

அஞ்சிவாழும் சிறுமீண்கள்

அஞ்சிவாழும் சிறுமீண்கள்  அலைகடலிற் பலவே
அவைதம்மை மிரட்டிவைக்கும் பெருமீன்கள் உளவே!
பஞ்செனவே பறந்தொளியும் நிலைமேவும் குஞ்சுப்
பறவைகளை பரமன்வந்து பாதுகாத்தல் அரிதே
நெஞ்சகமே திடம்கொண்டு நிமிர்நின்ற போதும்
நேற்றுவரை  நின்றதெல்லாம் இன்றோழிந்த துண்டே
துஞ்சுங்கால் துஞ்கெனவே துயர்மறந்து வாழத்
தோன்றியவர் புகழ்காண்பர்  பிறர்க்கில்லை ஞாலம்.

கிருமி ....how formed?

கிருஷ்னன் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு உண்மையில் கருப்பன் என்று பொருள்.. சில குடும்பங்களில் கிருஷ்னன் செட்டியார்  என்று பெயர் வைத்துக்கொள்ளாமல் கறுப்பன் செட்டியார்   என்றே வைப்பது தனித்தமிழ் நெறியைப் பின்பற்றியதுபோல் தோன்றுகிறது.

நிலவுக்கு இருட் பக்கம் என்றும் ஒளிப் பக்கம் என்றும்  பக்கங்கள் இரண்டு உள்ளன.   இருட் பக்கமானது "கிருஷ்ண  பக்ஷம்" என்று வழங்குகிறது.  கிருஷ்ண  பக்ஷம் என்றால் கருப்புப் பக்கம் என்பதே பொருளாகும்.

புழுக்கள் பலவும் வெண்மை நிறமானாலும், அவை பெரும்பாலும் தீமையே செய்கின்றன.  செய்யும் வினையைப் பொறுத்து அவற்றைக்  கருப்பாகக் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாகும்.

ஒரு திருடன் வெள்ளையாகவே இருந்தாலும்கூட  அவன்   செய்வது " கருப்புத்" தொழில்." இதன் காரணமக, அவன் கள்ளன் எனப்பட்டான்.  " பிளாக் மார்க்கட் "  என்பது தமிழில் "கள்ளச் சந்தை "  ஆகின்றது.
கள் என்பது கருப்புக் குறிக்கும் அடிச்சொல். கள் என்பதே கரு என்றும் கறு என்றும் திரிந்தன. இதை இன்னோர் இடுகையில் விளக்குவோம் .

கரு என்ற அடிச் சொல் கிரு (கிருஷ்ண ) என்று திரிவதால்,   கிருஷ்ண, என்ற வடிவுக்கு ஒப்ப,  கருமி என வரற் பாலது கிருமி என்று வந்துள்ளது.  கருமி என்பதும் உலோபியைக் குறிப்பதுடன் ஒரு நற்செயல் அன்மையையே குறிக்கிறது என்பதையும்  அறிதல் வேண்டும்.

கரு > கருமி
கரு .> கிரு > கிருமி

Different outcomes from the same root word/

எனவே கரு> கிரு > கிருமி ஆயிற்று என்பது தெளிவு

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

சொல் வடிவங்கள்

சொல்லியல் நெறிமுறை  தொழிற்பெயர் ஆக்கம் 

இதுவரை நம் இடுகைகளைப் படித்து வந்த நேயர்களுக்குச்  சொற்கள் அமையும்போது  அவை நீளுதலும் குறுகுதலும் பற்றி நன்கு தெரிந்திருக்கும். இருப்பினும்  புதிதாக வருகை புரிவோருக்காகச்  சில எடுத்துக் காட்டுகளைத் தருதல் நன்று என்பதை யாவரும் ஒப்புவர் என்பது எம் துணிபு ஆகும்.

நாகரிகம் என்ற சொல்லைக் கவனிப்போம். இது நகர் அகம் அல்லது   நகர் இகம்  என்ற சொற்களின் புணர்வில் தோன்றிய சொல்லாம். நகர் + இகம் என்பது பின் நாகரிகம் என்று ஆனது. அதாவது முதலெழுத்து நீண்டு அமைந்து சொல்லானது. நகர வாழ்வின்  நடை உடை பாவனை
இவற்றின் மொத்த வெளிப்பாடே நாகரிகம் ஆகும்.  இதற்கு நேரான ஆங்கிலச் சொல்லும் இது காரணமாய்  அமைந்ததே ஆகும்.  நகரகம் என்பது நாகரிகம் என்று  அமைந்தது  எனினுமாம்/ .  வள்ளுவர் வலியுறுத்தும் நாகரிகம் இயல்பான நாகரிகம் அன்று, அது புத்தர் ஏசு நதர் போன்ற பெரியோரால் கடைபிடிக்க இயல்வது ஆகும்.

சொல் குறுகி அமைவது இதற்கு நேர் மாறானதாகும்.  சாவு + அம் = சாவம் 
எனற்பாலது  சவம் என்று குறுகி அமைவது காண்க.   தாவு  +  அளை 
என்பது தாவளை என்று அமையாமல் தவளை என்று வருவதும் 
இத்தகைய குறுக்கமே அகும்.  அளை  என்பது ஒரு விகுதி    கூ +அளை  = குவளை :  இதை இப்போது கொவளை என்கின்றனர்    மேற்பகுதி  கூம்பினது குவளை  என்பது அறிக. தற்காலத்து மேல் கூம்பாததும் குவளையே இது பொருள் மாற்றம்.   கூ > கூம்பு   இங்கு  பு வினையாக்க விகுதி என்பதறிக ,சொல் மிகுந்து அமைவதால்  மிகுதி .> விகுதி   இதில்  மகர வகரப் பரிமாற்றம் உள்ளது.  யாப்பில் மகர வகர மோனையும் அமையும்,  பழைய இடுகைகளை  நன்கு கவனிக்கவும்.
\
சவம்  என்பது  இரு விகுதிகள் பெற்றுக் குறுகிய சொல்.  சா > சாதல் ;  சா> சாவு + அம் ,   இங்கு  வு  அம்  என்பன விகுதிகள் .  

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

ஊண் பித்தையார் பாடலை....

ஊண் பித்தையார் என்ற சங்கத்து நற்புலவர் பாடிய பாடலை இப்போது நாடியும் பாடியும் மகிழ்வோம். இவர் பெயர் சாப்பாட்டின் மேல் இவர் மிகுந்த ஆர்வமுள்ளவர் என்று காட்டுகிறது. பித்தை என்பது விருப்பம் என்று பொருள்படுமாதலாலும் பித்தை என்பதிலிருந்து திரிந்த பிச்சை என்பது பிறருக்கிடுதலைக் குறித்தலாலும், இவர் பிறருக்கு ஊண் வழங்கற்குப் பெரிதும் விரும்பியவர் என்று நாம் கொள்ளலாம்.

இவர் பெயர் பிறர் இவர்க்கு இட்டு வழங்கிய பெயர், ஊண் பிச்சை வழங்கிய காரணத்தாலென்று கொள்க. இயற்பெயர் அறியோம்.


பிச்சை  பித்தர் முதலிய சொற்கள் பற்றி அறிய:



பாடல் வருமாறு:

உள்ளார் கொல்லோ தோழி உள்ளியும்
வாய்ப்புணர் வின்மையின் வாரார் கொல்லோ
மரல் புகா அருந்திய மா எருத்து இரலை
உரற்கால் யானை ஒடித்துண்டு எஞ்சிய‌
யாஅ வரி நிழல் துஞ்சும்
மாயிருஞ் சோலை மலை இறந்தோரே.

உள்ளார் கொல்லோ தோழி ‍: தோழியே, நம் தலைவர் நம்மை நினைத்துப் பார்க்கமாட்டாரோ? என்ற தலைவிக்கு;


தோழி உரைத்தது:

(நினைத்து இருப்பார்!)

உள்ளியும் வாய்ப்பு உணர்வு இன்மையின் : நினைத்தும் வருவதற்கான வாய்ப்பு அவர் மேற்கொண்ட தொழிலால் இல்லாமையினால்,

வாரார் கொல்லோ : இன்னும் வரவில்லை; அவ்வளவுதான்,

மரற் புகா அருந்திய : மரலென்னும் (மான்கள் வழக்கமாக உண்ணும்) கொடியைத் தின்ற;

எருத்து இரலை : ஆண் கலை மான்;

உரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய : உரல்போலும் காலை யுடைய யானை துண்டுபடுத்தித் தின்று மீதமாகிய;

யா வரி நிழல் துஞ்சும் : யா மரத்தின் நிழலிலே படுத்து (ஆண்மான் )உறங்கும்;

மா இருஞ் சோலை மலை இறந்தோர் : இருள் கூடிய பெருஞ் சோலையை உடைய மலையினைக் கடந்து சொன்றோர்.

என்பது தோழி தலைவிக்களித்த பதில்.

எப்போது மீண்டும் ஊர் திரும்ப வேண்டுமென்பது தலைவன் தான் மேற்கொண்ட வேலையில் ஏற்படும் ஓய்வுகொள்ளும் இடைவேளைகளை உணர்ந்து அவனே நோக்கினாலே அறியலாகும். அவன் திரும்புவான். அதுவரை பொறுத்திரு என்கிறாள் தோழி. அவன் அவ்வேலைக்குச் செல்லும் பயணத் தொடக்கம் அவ்வளவு எளிதாய் இருந்திடவில்லை.
சோலைகள் மலைகள் இவற்றைக் கடந்து சென்றவன். இடர்ப்பட்டு அங்கு சென்று சேர்ந்தவன், வேலையை முடிக்கவேண்டுமே. அந்த வாய்ப்பு ஏற்படுங்கால் அவன் உணர்ந்து திரும்புவான் என்றபடி. இது "பொறுமை மேற்கொள்க" என்ற அறிவுரை.


குறுந்தொகை 232.  

புத்த பிக்குகளும்,,,,,

அச்சன் என்ற சொல் எனக்கு மிகவும் பிடித்தமானது. இதற்குக் காரணம், எழுத்தச்சன் மட்டுமின்றி,  அது அச்சன், அப்பன், அத்தன் எனறு மூன்று வடிவங்களிலும் விளங்குவதுதான். பொருள் மாறுபாடு இல்லை; இவை, போலி எனத்தகும். போல இருப்பது போலி; எழுத்துக்களில் மாற்றம் இருப்பினும் பொருளில் இல்லை.

இதே போன்ற தோற்றரவுகள் (அவதாரம்) எடுக்கும் இன்னொரு சொlல்   பித்தன். பித்தம் அதிகமானால் பைத்தியம் ஏற்படும் என்கின்றனர். பைம்மைத் தொடர்புடைய சொல் பைத்தியம். இதனை முன்னரே ஓர் இடுகையில் விளக்கினோம்.

அத்தன் அச்சன் ஆனது போல பித்தன் பிச்சன் ஆகவேண்டும். பித்தர்கள் அல்லது  பைத்தியக்காரர்கள் பிச்சையும் எடுப்பர். பிச்சாண்டி என்ற சொல் உள்ளது. பித்து > பித்தன்; பித்து> பிச்சு > பிச்சை. பித்தன் பெறும்
உணவு அல்லது பொருள். இவை அப்பன்> அச்சன் போன்ற திரிபுகள்.  வைத்து > வச்சு (பேச்சு)

குத்துதற்குப் பயன்படும் மரக்கோல் குச்சி என்பட்டது. குத்து> குத்து > குச்சு > குச்சி.  இது அத்தன் > அச்சன் போலும் திரிபுகள்.

ஆனால் பித்து> பித்தினி > பிச்சினி என்பதுமுண்டு. பிச்சினிக்காடு என்பது ஓர் ஊர்.   பித்து > பிச்சு>  பிக்கு > பிக்குணி என்பதும் காண்க.
பிக்கு:  புத்த பிக்கு.

நல்ல நிலைமை, குடும்பம் முதலிய துறந்து, அலைந்தவர்கள் பித்தர்கள்
என்று கருதப்பட்டனர் என்று தெரிகிறது. இவர்கள் பிச்சையும் புகுவர் .

பித்தர்கள், பைத்தியங்கள் வரிசையில் புத்த பிக்குகளும் பிக்குணிகளும்
கருதப்பட்டமை இச்சொற்களால் விளக்கமாகிறது,

பிசத்துதல் > பிதற்றுதல் .
பிச்சு = பித்து .

திரிபுகள்

ப > த  > ச
ச  > க  not language specific.

  

இரேணுகாதேவி பொதுமைக் கடவுள்

முருகு என்றால் தமிழில் இளமை, அழகு என்றெல்லாம் பொருள்தரும். இதைப்பற்றி எழுதப்பட்ட நூல்கள் பல, சிலவற்றை நாம் படித்திருக்கிறோம்.
இயற்கையெல்லாம் அழகுதான். முதுமையும் இளமையும் மாறிமாறி வருகிறது. ஓர் இளம் மாந்தனே ஒருத்தியைத் திருமணம் செய்து இருவரும் ஒரு பிள்ளையைப் பெறுகிறார்கள்.  ஆக முதிர்ந்த இருவரிடமிருந்து இளமை தோன்றுகிறது. மரம் செடி கொடி எல்லாம் அப்படித்தான். எனவே உலகில் முதிர் சிவத்திடமிருந்து இளம் முருகன் தோன்றுவதென்பது இயற்கைக்கு மாறானதன்று. உண்மையில் முதுமையென்றும் இளமையென்றும் வேற்றுமை ஒன்றுமில்லை. இவை ஒரே பொருளின் வெவ்வேறு நிலைகள். அன்று ஊமைப் பெண்ணாகவும் இன்று பாடும் பெண்ணாகவும் இருப்பது ஒரே பெண்ணின் வெவ்வேறு நிலைகள்.  சிவமும் முருகும் ஒரே இறைமையின் Divinity வெவ்வேறு நிலைகள். பொருள்கள் பலவாயினும் தன்மை, இயக்கம், தொடக்கம், முடிவு எல்லாம் ஒரே மாதிரி செல்கின்றன.

கடவுள் என்பது எல்லாம் கடந்ததாயினும், எல்லாவற்றிலும் உள்ளதாகும்.
இதில் ஒரு மாறுபாடு காணலாம். வேறுபாடு ஒன்றுமில்லை என்று கண்டுகொண்டால் கடவுளை உனர்ந்துவிட்டோம் என்று பொருள். இதற்கு
நம் பகுத்தறிவு நமக்கு உதவும்.

கடவுள் யாவர்க்கும் பொது என்பதை உணர்த்தவே, வெட்டியாரப் பெண்ணின் தலையும் இரேணுகா தேவியின் தலையும் மாற்றி ஒட்டப்பட்டதாக நம் தொன்மக் கதைகள் கூறுகின்றன. இரேணுகாதேவி  தீட்டு என்பதை விலக்கிய கடவுள்.  பொதுமைக் கடவுள். சமதர்மக் கடவுள்.

எப்படிச் சொன்னால் மக்களுக்கு எளிதில் புரியவைக்கலாம் என்று சிந்தித்த தொன்ம  ( புராண )  ஆசிரியர்கள், இப்படிக் கூறிமுடித்தனர். இரேணுகா ஒரு தேவனை விரும்பியதும் முனிவனை மணந்ததாகவும் உள்ள‌ கதை, கடவுள் அல்லது தேவி, மனிதனை விரும்புகிறார், விரும்புகிறாள் என்று பொருள். விரும்பவில்லையாயின் எல்லாருடைய கதையையும் ஒரே ஆட்டாக பூமியை ஆட்டி அழித்திருப்பார் அல்லரோ?  அவள், அவன், அது  என்றெல்லாம் நாம் கடவுளை குறிப்பதற்குக் காரணம் நம் மொழியில் , பேச்சில் எழுத்தில் உள்ளில் உள்ள குறைபாடு. கடவுள் பெயரிலி, ஒரு நாமமும் இல்லாதவன். அவனுக்கு எந்த நாமம் இட்டாலும் அது திருநாமம் தான்.  திருவிற்கு இட்ட நாம் திரு நாமம்  ஆகிவிடும் .

அன்றை  அரசுக்கு  சாதிப்  பகுப்புகள் தேவைப்பட்டன.  நெடிது அரசு செலுத்த
மக்களைப் பிரித்தாளுவது அரசனுக்குத் தேவை  கடவுளுக்குத் தேவை இல்லை. மக்களைப் பிரித்துச் சாதிகளை உண்டாக்கியதில் கடவுளுக்குக் கிட்டிய ஊதியம்தான் என்ன?  மேலும் சாதிகள் கடவுளுக்குத் தேவைப்பட்டிருந்தால் உலகில் எல்லா நாடுகளிலும் ஏன் ஏற்படுத்தவில்லை?  இந்தியா மட்டும்தான் கிடைத்ததோ?  ஆகவே கடவுள் ஏற்படுத்தினார் என்று எழுதிவைத்தது, அற்றை அரசியலார் ஏற்பாடு. அவர்கட்கு தெய்வச் சேவை புரிந்த பிராமணர்கள் இதை எதிர்க்கும் வலிமை இல்லாதவர்கள்.  எதிர்ப்பதால் பிராமணர்க்கும் தொல்லையே அன்றி நலம் விளையாது. இறைவன் விட்டவழி என்று இருந்து  விட்டனர்.  " சாதிகள் இல்லாத சமுதாயம்" என்ற பழைய  தமிழ் நேசன்   தாளிகைக்கட்டுரை இதை நன்கு விளக்கியது.

வெள்ளையர் வந்து இந்தியாவைப் பார்க்கையில் பல சாதிகளைக் கண்டனர். இது போன்ற விரிவான பழந்தொழிலடிப்படைக் கட்டுகள் அவர்கள் நாட்டில் இல்லை. பெருமகன்  Lords, பொதுமகன் Common(s) என்ற பிரிவு இருந்தது,  தீட்டு முதலியவை இல்லை.இந்தியா  பிளவு பட்ட நாடு,  நெடுங்காலம் நல்லபடியாக ஆளலாம் என்று அமர்ந்துகொண்டனர். அதாவது, அரசியலுக்கு அது நல்லது என்று அவர்களுக்கும் தெரிந்தது. Well if  there is opportunity, facility, right in front of you,  you  as a politician or ruler would be damn stupid if you throw it away and lose the benefits........ They were not concerned with idealism.  They were concerned with practicalities, இவர்களெல்லாம் எப்போதும் ஒன்று சேரமாட்டார்கள். ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்பதைக் கண்டனர். சாதிக் கட்டுக்களை  மாற்றாமல் வைத்துக்கொண்டனர். சாதிகள் இருந்தால் நல்லது, அதனால் வெள்ளையர்க்குத் தீமை ஒன்றுமில்லை.  இதை ஏற்படுத்திய பண்டை இந்திய அரசுகளை அவர்கள் மனத்தினுள் பாராட்டியிருப்பார்கள்.

அம்பேத்கார்கூட, சாதிகள் மூலம் கீழ் நிலை மக்கள் எப்படிப் பயன்பெறலாம் என்று ஆய்ந்து, அவைகளை வைத்துக்கொண்டாரே!  அப்புறம் ஏன் ராஜ ராஜனை  யெல்லாம் குறைகூறவேண்டும்?

இவற்றையெல்லாம் நோக்க, ஒரு கடவுளின் தலையும் ஒரு வெட்டியான் தலையும் ஒன்றுக்கு மற்றொன்று நிகர்  என்று எழுதிவைத்த தொன்ம உரைஞன் (புராணீகன்) பெரிய சீர்திருத்தவாதியல்லனோ? யாம் போற்றுவோம்.


The flaw if any  in paragraphing and justification of this material is inherent in the  format mechanism  of the post. We have tried our best but could not better the same further than this.  "Justify" feature has been tried. Manual regroup has been tried too.   Sorry about it. This will  also apply to other posts, wherever applicable.  We do not know how this displays in your  screen.  It does not look too good in ours.

புதன், 3 ஆகஸ்ட், 2016

வானவரம்பன்

வானம் + வரம்‍பன் :   வானத்தை எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்தவன்;  வானவரம்பன்.  உயர்வு நவிற்சி.  விரிந்த அரசு என்பதாம்.

வானவர் +  அன்பன் :  வானவர் என்று அறியப்பட்ட ஆட்சியாளர்களுடன்
நட்பாய் இருந்த அரசன்.  இதுபின் வானவரம்பன் என்று மாறிற்று என்கின்றனர்.

வன வரம்பன் என்பது வான வரம்பன் என்று திரிந்தது ?


வானவர் அல்லது தேவர்கள் போலும் திறமுள்ள அம்பினைத் தான் வைத்திருந்தவன்:  வானவர்+ அம்பு+ அன் =  வானவரம்பன்!!

அரம்பு என்பது குறும்பு என்றும் பொருள்தருவது.
வான + அரம்பு + அன் = வானவரம்பன் என்றும் வருதலும் உண்டு.
அப்படியானால் உயர்ந்த குறும்புகள் செய்வோன், அதிகமான குறும்புகள் செய்வோன் என்றும் பொருள் தரும். ஆனால் இது வரலாற்றுடன் பொருந்தவில்லை! இப்பட்டம் தாங்கிய அரசர்கள் நல்லவர்கள் என்றுதெரிகிறது.


உங்கள் கருத்தையும் பதிவு செய்யலாம்.

Edited


நாகரிகம் கோரி.......


https://sivamaalaa.blogspot.sg/2016/08/blog-post_88.html

தொடர்ந்து:

அடிப்பதுவும் அறைவதுவும் குற்றம்  ஆகும்;
ஆனாலும் அடிதந்தால் என்ன செய்வோம்?
துடிப்பதுளம் அறிகின்றார் சுற்றி நிற்போர்
தொடர்ந்துவந்து நிகழ்த்தாரே வல்ல மற்போர்!
படித்தவர்கள் நடப்பதுபோல் செய்யும் எல்லாம்
பாரித்த நாகரிகம் கோரிச் செல்லும்
அடிப்படைகள் குமுகத்தில் ஆக்கம் காணின்
ஆகாத செயல்களெலாம் போகும் தாமே.


செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

வாடிவிடும் பூமனமே

தொண்டனெனில் தலைவன்பாங் கறிந்து செய்க;
தொல்லைவரும் இல்லையெனில் தெரிந்து கொள்க!
முண்டனைப்போல் மூர்க்கமலி நடக்கை மேவி
மூடமதி கூடிவரும் முயற்சி கொண்டால்.
கண்டபடி கழறுகின்ற உரைகள் விண்டால்,
காய்சினத்தில் தலைவனுதை  கொடுப்பான்  கண்டாய்
வண்டமரும் மலர்போலும் தலைவன் தொண்டன்;
வாடிவிடும் பூமனமே சாடல் உண்டேல். 

முந்தன் தாய் பிதா

தாய் தந்தையரிடமிருந்து நாமறிந்துகொண்டது தெய்வத்தை.  தெய்வம் உயர்திணைச் சொல்லாலும், அஃறிணை வடிவச் சொல்லாலும் சுட்டப்படலாம்.  தெய்வம் என்ற சொல்லுக்குத் திணை இல்லையாயினும் அது அஃறிணை என்றே கொள்வர்.  அது என்றும் சுட்டுவர். பொருளில் உயர்திணையாவது அச்சொல். தமிழில் திணை, சொற்சுட்டுப் பொருளுக்கு என்க.

நாம் இப்போது கவனிக்கப் போவது கடவுள், தாய், தந்தை ஆகியோரையே ஆகும்.  தாய் நம்மை ஈன்றவள் ஆயினும், இறைவன் தாய்க்கு முன்னாகச்
சொல்லப்படும். அதனால் அவனுக்கு "முந்தன்" என்ற சொல் அமைந்தது.
தன் தாய் தந்தை இருவருக்கும் முந்தியோன் என்பதாம். முன் குந்தியிருப்போன் என்ற பொருளில் " மு‍+ குந்தன்" (முகுந்தன்) எனவும்
படுவான்.  குந்து > குந்தன்.  குந்துதல் ‍ அமர்தல்.  மு> முன்.  கடைக்குறைச் சொல்.

தாய் என்ற சொல், தம் ஆய் என்பதன் குறுக்கம்.  த(ம்) + ஆய் = தாய். இங்கு த் + ஆய் ‍ =  தாய், இதில் அகரமும் மகர ஒற்றும் போயின.
தாய் இறைவனுக்கு அடுத்து.

தாய்க்குப் பின் அப்பன்,  அவன் பின்+ தாய். பின்னால் வரும் தாய்போன்றவன். பின் தாய் என்பதன் இரு ஒற்றுக்களும் மறைந்து, பிதா என்பது அமைந்தது.

முந்தன்  தாய் பிதா


பெற்றமகன் மனைவியிடம்...

பெற்றமகன் மனைவியிடம் வளர்ந்தால் என்ன‌
பின் தாயாம் தாய்ப்பின்னே பிதாவே என்றார்.
அற்றுறவு போமுன்னே அமைந்த வாழ்வில்
அன்பினொரு சின்னமென விளைந்த‌ செல்வம்!.
உற்றுவிரி இறத்தான வழக்கு முற்றி
ஒருநிலையில் மனமின்றி மகனைக் கொன்றான்;
பற்றுவெறி ஆனதுவே புவியின் மேலே
பாவமிதைச் செய்திடவும் துணிகின்றானே

குறிப்புகள்:  முன் இடுகைகளில் உள்ளன :

பின் தாய்  > பிதா என்பது தாய்க்குப் பின் தந்தை என்ற பொருள்.
ஒற்றுக்கள் நீங்கிய சொல். திருப்பிப் போட்ட தமிழ்.
இரத்து  -  இறத்து  இறு :  முடிதல்.   து  :  விகுதி.   அ :  சாரியை.  அற்று  என்பது அத்து  ஆனதெனினும் ஆம் .


உற்று = காதலுற்று; விரி = அது மண‌வாழ்வாக விரிந்து; இறத்து ஆன = மணவிலக்கு ஆகிவிட்ட ;  வழக்கு : நீதிமன்ற வழக்கு; முற்றி : குழந்தை யாருக்கு என்ற நீட்சிப் போராட்டமாக முதிர்ந்து;   இவற்றைச்  சில சொற்களில்  புகுத்தியுள்ளேன்,

ஒரு நிலையில் மனமின்றி = மனம் பேதலித்து;

Read news at  http://www.chinapost.com.tw/asia/singapore/2016/08/02/474168/Belgian-who.htm

முயற்சியும் அயர்ச்சியும்.


எனது கடவுச்சொல்லைக் கொண்டு அல்லது மூன்றாவது நபரின் மென்பொருளைக் கொண்டு கீழ்க்கண்ட விதமாக என் கவிதைகளில் திருத்தம்  செய்துள்ளனர். அந்தத் திருத்தங்கள் பிழையானவை.

முயற்சி. இதன் வினைப்பகுதி முயல், முயலுதல். இதனோடு சி விகுதி சேர்த்தால் முயல்+ சி = முயற்சி ஆகும்,   ஆனால்

அயர்ச்சி என்பது அயர்தல் என்ற வினையினின்று வருகிறது. ஆகவே அயர்+ சி = அயர்ச்சி ஆகும்.  அயற்சி ஆகாது, காரணம் அயல் என்பது பகுதியன்று.

இதைக் கண்டு திருத்தியதில் அரைமணி நேரம் கழிந்தது. உலாவியும்
ஒத்துழைக்கவில்லை. எப்படியோ இந்த ஊடுருவல்கள் மாற்றம்பெற்றன.

இவை முன்னாள் அதிபர் நாதன் பற்றிய கவிதையில் நிகழ்ந்தவை.

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

சிங்கை முன்னாள் அதிபர் நாதன்

முயற்சிக்கு முற்காட்டு;
மூத்தமக்கட் கொருகூட்டு;
மூலமணிச் சிந்தனைகள்;
மூவாத சிங்கை நாதன் ,

அயர்ச்சி இலா நல்லதிபர்
ஆயிருந்தார்; ஓய்வுபெற்றார்,
அமர்ந்திட்டார் அழகாக‌
அவைகளிலே நல்ல செல்வர்;

தளர்ச்சியுற்று மருத்துவர்கள்
உழைச்சென்றார் நலம்வேண்டி;
அவர்க்கருளே  நீசெய்வாய்;
அருள்மிகுந்தோய் துர்க்கை  யம்மா


பிறழ்ச்சியிலா நல்லாட்சி
பெருமக்கள் அரவணைப்பு;
பெருந்தலைமைப் பண்பாளர்
அருந்துணையாய் நீ நிற்பாய் ,.......



முன்னாள் அதிபர் நாதன்  நலம் பெறுக .


பொருள்:

முற்காட்டு :  முன் உதாரணம் ,
கூட்டு:  நண்பன் 
மூல  மணிச் சிந்தனைகள் :  சிறப்பான சொந்தச் சிந்தனைகள் 
மூவாத  :  இளமை பொருந்திய,  வயதாகிவிட்டாலும் இன்னும் செயலாற்றுகிறவர்   இளைஞரைப் போல‌

ஆயிருந்தார்: அவ்வாறிருந்தார்.
மருத்துவர்கள்  உழை :  மருத்துவர்களிடம்  (சென்றார்,)




Some third party software has introduced some changes in spelling, These were errors
and we have reverted this poem to the original. Third party had also accessed our
email. Please  report interferences. Thank you.

கோலாட்டக் கண்டு...... நம்பிக்கை

கோலாட்டக் கண்டு குரைக்கும்நாய் கூடத்தன்
வாலாட்டிக் கொண்டு வருமன்றோ === மாலாட்டித்
துண்டப்பம் யாம்நீட்டத் தோன்றியதோர் நம்பிக்கை
உண்டொப்பும் நச்சின்மை கண்டு.


மாலாட்டி - ( அதற்கு ) மயக்கம் அல்லது ஐயப்பாடு தோன்ற .
நச்சின்மை  -  விடம்  இல்லாமை .

அவதூறு

அவதூறு என்ற சொல் நாம் அவ்வப்போது காண்பதும் கேட்பதும் ஆகும்;

இதில் தூறு, பரவலாகத் தூவுதல்.  மழை தூறுகிறது என்பர். யாரையும் கெடுதலாகப் பேசுகையில்  மனிதனும் தன் சொற்களைப் பரவாலாகத் தூ(ற் )றுகிறான் அல்லது தெளிக்கிறான்.  இது ஓர் அணிவகையான வழக்கு ஆகும். தானியங்கள் அல்லது கூலங்களைக் காற்றில் தூற்றி உமி முதலியன போக்குதலும் தூற்றுதலே.  கெடுதலான  பேச்சு இதனுடன் ஒப்பிடப்படுவதுமுண்டு.

அவம் என்பது: அவி + அம்,  இதில் வி என்பதில் உள்ள இகரம் கெட்டு, வ் என்று ஒற்றாய்  நின்று, அவ்+ அம் =  அவம் என்றாகும். அவிசலான பேச்சு அல்லது தூற்றுதல்.  அவித்தல், நன்மை அழிதல்.  அவதூறு ,  அவம்பட்ட வாய்ப்பேச்சு. பிறரைத் தாழ்த்திப் பேசுதல்.  அவி = அழி,  அவி  சமை என்பது மற்றொரு பொருள்.

அவி  > அவம்

இகரம் கெட்டது போல தவம் என்பதிலும் உகரம் கெட்டுள்ளது காண்க.
தபு > தபம்;  தபம் > தவம்.  இன்னொன்று: அறு > அறம்.

தவி > தாவம் > தாபம் > தாகம். இது பன்மடித் திரிபு : அறிக. (தேவனேயப் பாவாணர்.) வி என்பதன் இகரம் கெட்டது.

Will review for changes made by third party after posting. Will edit.

ஞாயிறு, 31 ஜூலை, 2016

பவனி ஒரு தாக்கத்தை .....

பவனி என்ற சொல் எப்படி வந்தது?

பவனி செல்வதில் ஓர் அணியாகப் பரவுவர் அல்லது ஓரிடத்திருந்து இன்னோர் இடம் செல்வர்.

பரவு + அணி = பரவணி.இதில் ரகரம் எடுத்துவிட்டால், பவணி ஆகிவிடும்.
சொல்லைச் சுருக்கிவிட்டனர்.  அதுவும் ஒரு தந்திரமே.

ணி என்ற எழுத்து தமிழில் இருந்துகொண்டு பிறருக்குத் தொல்லை தருவது.
அதை  னி என்று மாற்றுவதும் சரிதான்.

பவணி > பவனி ஆகிவிட்டது.

ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு மனிதர்கள் மட்டுமா பரவுகிறார்கள்?

பவனி செல்வதே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத்தான். செல்வோர் கொள்கைகள், பழக்கங்கள், சடங்குகள், அணிகலன்கள்  அணி  முறைகள்    எல்லாம்
பரவுவதற்கே. ஆகவே பர என்பது பொருத்தமே பொருத்தம்.


சனி, 30 ஜூலை, 2016

நந்தா என்ற சங்கதச் சொல்லை....



நந்தா என்ற சங்கதச் சொல்லைக் கவனிப்போம். ஒரு சங்கதச் சொல் என்றால் அது தமிழிலிருந்து வந்ததாக வேண்டும்.  அல்லது பாகதங்களிலிருந்து போந்ததாகவேண்டும். அல்லது அவஸ்தான் உள்ளிட்ட மேலை மொழிகளில் ஒன்றிலிருந்து வந்ததாக இருக்கவேண்டும். நன்றாகச் செய்யப்பட்ட சமஸ்கிருதப் பொதுமொழி, தனக்கென சொந்தச் சொற்கள் இல்லாதது. தொடக்கத்தில் அரமாயிக் எழுத்துக்களை அது பயன்படுத்தியதாக ஜான் கே என்னும் வரலாற்றாசிரியர் கூறுவார்.

நந்தா என்னும் சொல்லோவெனின், சங்கதத்தில் பெருவழக்கு உடையது.
அதைத் தமிழினோடு தொடர்புறுத்த எந்த ஆய்வாளனும் கொஞ்சம் நடுங்கவேண்டுமே!

பின்+ தி > பிந்தி என்றும் முன்+தி = முந்தி என்றும் சொற்கள் அமைந்துள்ள படியாலும்  , அல்>அன்>அந்தி என்று வருவதாலும்
நந்தன் என்பதை எளிதாகவே கண்டுபிடிக்கலாம்.

நல் > நன் > நந்தன். அதாவது நந்தா என்பது, மகிழ்வு, நன்மை முதலியன அடிப்படையாக எழுந்த சொல்.  மகிழ்வு நன்மையாம், கொண்டாட்டம், களிப்பு, புல்லாங்குழல் முதலியன அடிப்படைப் பொருள்கள். குழலினிது என்று வள்ளுவம் கூறுவதால், அதுவும்  மகிழ்வின்   * தரவேயாகும் என்பதறிக.  *derived meaning from happiness.

இச்சொல் பலருக்குப் பெயராகவும், கண்ணனுக்குப் பெயராகவும் பயன்பட்டுள்ளது நீங்கள் அறிந்ததுதான். இதன் முழு விவரம் (கீழே) அடிக்குறிப்பாகத் தரப்பட்டுள்ளது.

அல் :  இரவு நேரம்.   அல் > அன்.  லகர  னகரத் திரிபு.  இன்னோர் எடுத்துக்காட்டு:  திறல் > திறன்.  ல் >ன்   பலமொழிகளில் காணலாம்.
சீனமொழியிலும் உண்டு.

இதைப் போலவே நல் (  நல்லது ) என்பதிலிருந்து  நன் வந்தது. பின்
தன் என்ற விகுதி பெற்று  நந்தன் ஆயிற்று. இதன் தன்மையை இங்கு
தொடக்கத்திலேயே விளக்கினோம்.

இந்தியச் சொற்கள் பலவும் தமிழிலிருந்தும்  முன்னைப் பாகதங்களிலிருந்தும் திரிந்தன.  முன்னை என்றால் சங்க‌தம் உருவாகுமுன் வழங்கிய பழம் பாகதங்கள்.

நன்மை மகிழ்வு. இதுவே அடிப்படை என்றுணர்க.




1nandam. joy , delight , happiness  a flute
. of one of Yudhi-shthira's  drums
of one of Kubera's  gems . ;
a son {nandana}) ;
of Vishnu
of one of Skanda's attendants
of a Na1ga  (also {-ka}) ;
of a Buddh. deity Lalit. ; of an attendant on Daksha . ;
of a son of Dhrita-rashtra (also -ka}) ;
 of a step-brother and disciple of Gautama Buddha  ;
of a son of Vasu-deva . ;
of the foster-father of Krishna and ancestor of Durga {-ka}.) ;
of a leader of the Satvatas  ; of a king of Patali-putra and founder of a dynasty consisting of 9 successive princes . Pur. Kathas. Pan;
of the number 9 (because of the 9 Nandas) Jyot. ;
of sev. scholars and authors
of  a mountain (cf. {-parvata} and {nandi-giri}) ; (A}) f. Delight , Felicity (personified as wife of Harsha ; cf. %{nandi}) MBh. i , 2597 ; prosperity , happiness L. ; a small earthen water-jar (also %{-dikA}) L. ; a husband's sister (cf. %{nanAndR}) L. ; N. of the 3 auspicious Tithis (1st , 6th , and 11th day of the fortnight) VarBr2S. ic , 2 (also %{-dikA} L.) ; of the 7th day in Ma1rgas3i1rsha Hcat. ; (in music) of a Mu1rchana1 ; of Gauri1 Hcat. ; of an Apsaras Hariv. ;
of a daughter of Vibhishan2a . ;
of a girl connected with Sakya-muni Buddh. ;
of the mother of 10th Arhat of present Ava-sarpini. ;
of the wife of Gopa1la-varman Rajat. ;
of a river flowing near Kubera's city Alaka ;
a kind of song or musical instrument ManG. ;
N. of the 6th day in a month's light half . ;
of Durga1 Devi1P. ; of Indra's city W. ;
a kind of house 

வெள்ளி, 29 ஜூலை, 2016

ரேணுகாவுக்கு தமிழல்லாத நூலோர் கூறுவது

சங்கத மொழியில் ரேணு என்பது தூசு என்று பொருள்காணப்படுகிறது. எனவே ரேணு ‍  தூசிலிருந்து தோன்றியது  என்று நினைத்துக்கொள்வர்.
இர்+ ஏண் (ஏணு) = இரேணு என்பது, இருள்தோன்றும்படி மேலெழுவது என்று தமிழ் அடிச்சொற்களின்மூலம் பெறப்படுவதால், தூசு என்று அவர்கள்  கூறும் ரேணுவும் தமிழ் தந்த சொல்லே ஆகும். இதில் தப்பி ஓட முடியவில்லை.

தேவி தோன்றுங்கால் மனிதன் பார்த்துக்கொண்டிருந்து, தேவியானவள் புழுதியினின்று தோன்றியதாகக் கூறுவது, இவள் உண்மையில் தொழிலாள‌
மக்கள் வழிபட்ட கடவுள் என்பதை உறுதிப்படுத்துகிறது. அவர்கள் வணங்கினர், அவர்களிடம் நாம் அறிந்து உண்மை கண்டு நாமும் வணங்கினோம் என்பதை மறைத்துக் கூறும் வழி இதுவாகும்.எப்படியாயினும் ரேணுகா தொழிலாளர் கடவுளே. அரசர்களும் பிறரும் அங்குபோய்ப்  புழுதியில்1 நிற்பது இயல்புக்கு மாறானதே.


----------------------------------------------------------------------------------------------------------------------------------

1  சில ஆலயங்களில், பூசைக்குப் பின் குங்குமம் தருவதில்லை;   வெட்டி எடுத்த மண்ணே தரப்படுகிறது. இவ்வம்மன் புழுதியிற் தோன்றியவள் (மண்ணில் வேலைசெய்வோரிடைத் தொழப்பட்டவள்) என்ற  தொன்மத்திற்கு ஏற்ப இது தரப்படுவது காண்க. ) இஃது இவ்விடுகையின் கருத்தை வலியுறுத்துவதாகிறது/.    அரிமாவிற்கு (சிங்கத்திற்கு)ப் பதில்

ஆ (பசு) போற்று விலங்காகிறது.  Also see: temple.dinamalar.com/New.php?id=594

2  https://www.facebook.com/rangammal/posts/422957651149491?stream_ref=10

3 இரு+ ஏணு + கா :  இது முன் இடுகையில் கூறப்பட்டது. இருகைகளும் இடுப்பில் வைத்திருக்கும் நிலை (மஹாராஷ்ரா – பண்டரிபுரம், கர்நாடகா – உடுப்பி)..  கா  - கை  என்பதன் திரிபு  எனினுமாம் ,

3    http://hinduspritualarticles.blogspot.sg/2015/10/blog-post_30.html?view=sidebar



4    எல்லையம்மாள்  > எல்லம்மாள் .  ஐகாரக் குறுக்கம் 


5    வெட்டியாரத் தொடர்பு:

      Easy further reading at : 

      http://tamil.thehindu.com/society/spirituality/புராணத்தைப்-போற்றும்-கெங்கையம்மன்
"      கட்டளையை நிறைவேற்றிய பரசுராமன் தந்தை முன்னால் நின்றான். மகனின் செயலை மெச்சிய ஜமதக்னி முனிவர், என்ன வரம் வேண்டும் கேள் என்றார். தந்தையே, உங்கள் கட்டளையை நிறைவேற்றி விட்டேன். இறந்த தாய் எனக்கு வேண்டும். அவரை உயிர்ப்பித்துக் கொடுங்கள் என்றான். மகனின் ஆசையை நிறைவேற்றப் புனித நீர் கொடுத்து உன் தாயை உயிர்ப்பித்துக் கொள் என்றார். தாயின் உயிர் கிடைக்கும் ஆசையில் ஓடிவந்த பரசுராமன், வெட்டியான் மனைவியின் உடலில் தனது தாயின் தலையை வைத்தும், தனது தாயின் உடலில் வெட்டியானின் மனைவியின் தலையை வைத்து அவசரத்தில் உயிர்ப்பித்துவிட்டான். இந்த புராணக் கதையை விளக்குமாறு, கெங்கையம்மன் சிரசு திருவிழாவாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  "









புதன், 27 ஜூலை, 2016

அயம். அயச் செந்தூரம்.



இந்தச் சொற்களையும் தொடர்களையும் ஆயுமுன்,  இரும்பின் மேன்மையை அறிந்துகொள்ளுதல் வேண்டும்.  பொன்னைக் கண்ட மனிதன், அதனால் நகை, ஏனை அணிகலன்களையே செய்தற்கு  இயன்றது என்பது  அறிந்தானோ ?மாந்தனின் நாகரிக வளர்ச்சிக்குப்  பொன் செய்த புண்ணியம், நகை வளையல்கள் என்று உடலில் தொங்கியதும் பணம் எனப் பயன்பட்டதுமாகும்.

ஆனால் இரும்பால் விளைந்த பயன் மிகப் பலவாம். அதனால் கற்காலம் என்று ஒதுக்கிய  வரலாற்றாசிரியர்கள் இரும்புக் காலமும் மேலானதே  என்று முடிவு செய்தனர்.இரும்பால்  ஆயுதங்கள் செய்து மனிதன் முன்னேறினான், இல்லாவிட்டால் மனிதன் எங்கேயோ பிற்போக்காய்க் கிடந்திருப்பான்,   தமிழில் சொல் அமைத்தவர்கள் இதை நன்குணர்ந்து
பொன்னினும் பெரிதான இரும்பை இரும்பொன் என்றனர். அதுபின் இரும்பு என்று திரிந்துவிட்டது என்று அறிஞர் கூறுவர்.

ஆகவே மனிதன் இரும்பை  வியந்து போற்றினான் என்று உணர்க‌

ஐ என்பது வியப்பு,  வியப்புக் குரியதை அய் அல்லது ஐ என்பதும் காணலாம். மேன்மையும் அதுவாம் .

ஐ > அய்>  அயம்,    அய் +அம்  =  அயம் .


வியந்து போற்றற்குரித்தாகிய இரும்பு. இரும்பொன் என்ற கருத்து
இங்கும் இலங்குகின்றது.

செந்தூரம் என்பது செந்தூளம் என்பதன் திரிபு ஆகும்,,

சிவப்புத் தூள் என்பதாகும்.  இதைப் பிற அறிஞர் கூறியுள்ளனர்.

செவ்வாய், 26 ஜூலை, 2016

"ரேணுகா" என்ற பெண்ணின் பெயரை....

இப்போது "ரேணுகா" என்ற பெண்ணின் பெயரை ஆய்வு செய்வோம்.
இது தமிழ்ப் பெயர். இந்தியப் பெயர் என்றும் வைத்துக்கொள்ளலாம். தமிழ் நாடு மட்டுமின்றிப் பிற மாநிலங்களிலும் வழங்கும் பெயர். அம்மன் பெயர்.

காளி என்றால் கருப்பம்மை என்று பொருள் என்பது உங்களுக்குத் தெரியும்.
கள், காள் என்பன கருப்புக் குறிக்கும் அடிச்சொற்கள். அதுபோலவே, இரேணுகா என்பதில் முன் நிற்கும் அடிச்சொல் இர் என்பது.

இர் ‍ >  இருள்.
இர்  > இரவு.

இர் > இராம(ன்)
இர் >  இராவண்ணன் > இராவணன். இடைக்குறை : ண்.

இப்போது ரேணுகா.

முதல் அடிச்சொல்; இர்.
அடுத்து: ஏண் >  ஏற்றம்;  கூடுதல்;  அதிகம்.
ஏணி என்ற சொல் இங்கிருந்து வந்தது,

கா என்பது அக்கா என்பதன் முதற்குறை.  (அக்)கா.  மூத்தவள்,

இர்+  ஏண் + கா ‍  :  கருப்பு மிகுந்த பெண்.  காளி அம்மன்.

ஏண் > ஏணு : உகரம் சாரியை.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இது வெட்டியான் கூட்டத்தினர் வணங்கிவந்த  அம்மன் என்பது தெரிகிறது,  இத்தெய்வத்தை வணங்கும் முறைகளில்  அவர்களின் பங்களிப்பு முன்னிற்கிறது.  சாவின் திரமறிதலே ( திறம்  அறிதலே ) சாத்திரம்  என்ற எம் முன் இடுகை காண்க.  மேலும் ஜமதக்நி
என்பதும்  சம+ தக்கவன+ நீ  என்ற தொடரின் வெட்டுச் சேர்க்கையும் வலிதிரிபும்    ஆகுமென்பது தெளிவாகும்.புராணத்தினால் வெட்டியான் தொடர்பை நீக்க  இயலவில்லை.

மாரி : மா= கருப்பு.     .மாரியும் கரிய கடவுளே ஆகும் .

வேறு சொன் முடிபுகள் 

இரேணுகை என்பது  இரண்டு உயர் கைகள் என்றும் பொருள் தரும். பின் விளிவடிவில் " இராணுகா"  ஆகுதல் கூடும் . இச் சொற்கோவை  பொருளில்   "  இரண்டு அருட் கைகள் ".- இரு + ஏண் + (உ )+ கை   அதுவாம்.   . உகை ‍-  எழுச்சி எனினுமாம்  இப்படிக் கொண்டால்  "இரு (அருட் ) கைகளின் உயர் எழுச்சி"  என்றாகி  ஆகுபெயராய்  அம்மனுக்காகும் ,


திங்கள், 25 ஜூலை, 2016

கிடையாது காதலென்று.............

திரையினிலே காதலிலே தேனாறே  ஓடும்;
தேர்ந்தெடுத்த நாயகியோ ஆணோடு பாடும்.
சிறைவீட்டுக்  கைதியெனச் சீர்கெட்டு வாடும்
சிறு அகவை ஆடவரும் பெண்களுமே தேடும்
ஒருசரக்கும் உளதென்றால் அதுதானே காதல்;
ஓடுகின்ற படச்சுருளில் கூடுவதாம் காதல்.
பெருநகரம் சிற்றூர்கள் யாங்கணுமே காதல்.
பெறவேண்டும் அதுவாழ்க்கை என்கின்ற ஆவல்.

பிள்ளைக்கும் பெண்ணுக்கும் முறைப்படியே பார்த்து,
பிறந்தநாளும் கோத்திரமும்  அறிந்தபடி சேர்த்து
நல்லநாளில் மணம்வைக்க பெற்றோர்கள் முந்த
நாங்களவை பேசிவிட்டோம் என்றுரைத்த‌ மக்கள்.
உள்ளபடி  அகத்துக்குள் எமன்புகுந்த நேரம்
ஒருவாறு தொடங்கியதே எனப்புகல வேண்டும்.
கள்ளத்துக் காதலென்று பெற்றவர்கள் சொல்ல‌
உள்ளத்துக் காதலென்று பிள்ளைபெண் சொன்னார்.

முடியாதென்  றேபெற்றோர் மணவினைந டாத்த‌
மூடியவாய் திறவாமல் மணமகளும்  காத்தார்
இடியாமல் குடிபுகுந்து படிபோற்றி  வாழ்ந்தார்
என்பதுபோல் உலகுக்கு வெளிக்காட்சி செய்தே
உடையாத காதலனோ டொன்றுபட்டுச் சூழ்ந்தார்
உள்வந்த புதுக்கணவன் உயிர்பிரிய வீழ்ந்தான்!
கிடையாது காதலென்று கிழித்துவைத்த கோடு
கேடென்றே உணர்த்தியதோ காதலரின் பாடு?

edited.26.7.16  TM 25.7.16 some words changed. reedited 2607160853

There have been several murders of  such plot occurring recently/  In these cases. the couples went
through mostly arranged marriages and later one party in the wedlock    tried to rectify the mismatch by killing the spouse to attain the desired life with the lover.  Parents arranging marriages should think carefully and should not imagine such events would not occur to their children.

ஞாயிறு, 24 ஜூலை, 2016

கலாம் ஐயாவின் சிலைநிறுவுதல்

நபிதந்த கொள்கைகளில் எபிரேய நூல்களில்
நாம்சில கண்டதில்லை;
தபுவழிகள் பிறழ்நிலைகள்  ஒருபோதும் இணையாத‌
தனித்தன்மை இசுலாமளித்
தபரமே தொழுதகவு நெறிபிறரும் தமிழரும்
தகுந்தபடி மதித்தல்கடனே;
விபரமே யாதெனில் வியன்புகழ் கலாமையா
சிலைநிறுவு செயல்காண்பிரோ.

தபு  - தப்பு  இடைக்குறை 
இசுலாமளித் தபரமே  : இசுலாம் அளித்த பரமே. என்று பிரிக்கவும்.

வியன்  மிகவிரிவு, பெருமை.
பரமே தொழுதகவு ‍--  இறைவன் ஒருவனே தொழற்கு உரியன் என்னும்கொள்கை
கலாம் ஐயாவின் சிலை நிறுவுதல்  :  கலாம் அவர்களுக்குச் சிலை வைக்கக்கூடாது என்பது இசுலாமிய‌
சமயத்தார் நிலைப்பாடு.  இதை மதிக்க வேண்டும் என்பது இப்பாட்டின் பொருள்

நிறுவுதல்

A footnote has been found deleted.  It will not be restored.

மந்த நிலவினில்

மந்த நிலவினில் என் தன்  புன்சிரி
கண்டு மயங்கினையோ கண்ணனே!
வந்த வனத்து வண்ண மலர்களில்
வாய்த்த இன்பம் மகிழ்வாய்
தந்த மணந்தனில் தலைகிறு
கிறுப்பினில் என்னில் இணைந்துருகி
செந்தமிழ் மலை ஊற்றில் கலந்திடத்
தீதொன்றும்  வந்திடாதே.

முன் கண்டிராத காணொளிகள்

மூவா  யிரத்துமுந் நூற்றின்மேற் பட்டரிய
முன்கண்டி ராதபடக் காணொளிகள் கைவரவே
யாவும் பார்த்துமகிழ் வெய்திடுதல் யாங்கினுமே
யார்க்குமிய  லாததுவே யாமும்சில பார்த்தறிந்தேம்
மேவும் வாழ்வினிலே மீதமின்றி இவைபார்க்க
மின்னலென விரைந்திடுதற் கெம்மிடமோர் திறனில்லை
நாவும்  நன்றியன்றி யாம்பகர யாதுளதோ
நல்லவுள்ளம் கொண்டவர்கள் நலம்பெறுக நனிவாழ்க.


முன்  கண்டிராத காணொளிகள்

பட்டரிய :   பட்ட அரிய
செய்யுளில் இது தொகுத்தல் .
கை வர : கைக்குக் கிடைக்கவே
நனி - நன்றாக


சனி, 23 ஜூலை, 2016

எழுத எதுவும் இயலாமை

எழுத எதுவும் இயலாமை  ஏனேன்
பழுதுறு மென்பொருள்  பாய்ந்துலவி உள்ளிருக்க
ஆங்கவை  தேய்த்தே அகற்றினோம் அன்பர்காள்
தாங்கித் தருகநெஞ் சம்.

பழுதுறு -  பழுதுறுத்தும்.  பழுது  உறு மென்பொருள் என்பது
வினைத்தொகை.  தேய்த்தே - அழித்தே.   தாங்கி - பொறுத்து.


அட்டவணை தன்னை அணுகியாம்  தொட்டதுமே
கொட்டிய பக்கத்தைக்  கூட்டியுள் சேமிக்கும்
செட்டுச் செயலே  இழந்ததே  இக்கணினி
நட்டுயாம் நாட்டியவை இல்.

அட்டவணை-  பட்டியல். இது இங்குள்ள பக்கங்களைக் (pages) குறிக்கிறது. தொட்டதுமே -  தொடங்கியதுமே. கொட்டிய - பகர்ப்புச் செய்து மேலேற்றிய. ( copy and pasted) கூட்டி - ஒன்றுபடுத்தி. ( collected from editing applications ) சேமிக்கும் - வைத்துக்கொள்ளும். (save)   செட்டு -  நேரத்தைச் செலவாக்காமல் நன்கு பயன்படுத்தும் முறையைக் குறிப்பது.  (time save measures)  நட்டு - வேறிடத்தில் இருந்து எடுத்துப் புகுத்தி.  நாட்டியவை - இடுகையாக்கியவை.  இல் - இல்லை.



1.Kindly report any errors generated by viruses and any typos/errors you may find. Thank you.
2.  நட்டு யாம் என்பதை நட்டியாம் என்று எழுதுவர். இங்கு யாம் அப்படி எழுதவில்லை.

வெள்ளி, 22 ஜூலை, 2016

"வம்மிசையம்" சுருங்கும் : "வம்மிசம்".

ஒரு குடியில் பிறக்கும்  குழந்தைகள்  வளர்ந்து வயது (அகவை) வந்தபின்பு திருமணம் செய்துகொண்டு, அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்து, பின் அவர்களும் மணவயதுடையவராகிப்  பின் அவர்களும் பிள்ளைகள்  பெற்றுக்கொண்டு, பின் அந்தப் பிள்ளைகளும்  அகவை எய்தி...........

இப்படியே வந்துகொண்டிருப்பதுதான் வம்மிசம்.

வருமின் >  வம்மின் என்று சுருங்கும். இடையில் உள்ள "ரு" மறைந்துவிட்டது. அவ்வளவுதான்.
வ+ மின் =  வம்மின்.
மின் ஒரு ஏவல் விகுதி. இதை வியங்கோள்  வினைமுற்றுக்குரிய விகுதி என்பார்கள்.  வரு+க = வருக என்பதில் ககரம் இறுதியில் வந்ததுபோல.

நாம் மின் என்ற விகுதியை இங்கு ஆய்வு செய்யவில்லை. ஆதலால் அதை விடுப்போம்.

வரு என்பது பகுதி; அது வ-  என்று சுருங்கும்.

மேலும் மேலும் தலைமுறையில் குழந்தைகள் பிறந்து அவர்கள் பிறப்பிக்கிற படியால் "மிசை" என்பதைச் சேர்க்க வேண்டும்.

ஆக, வ+ மிசை = வம்மிசை ஆகிறது.

அம் என்ற சொல்லமைப்பு விகுதி சேர்த்தால்:  வம்மிசையம்
என்று வரும். இங்கு மிசை என்பதில் வரும் "ஐ"காரத்தைக் குறுக்கலாம். அப்போது

வம் மிச் அம் என்றாகும்.   ச்+ ஐ = சை.  அதில் ஐயைக் எடுத்துச் சையைக் குறுக்கினால்,  ச் மிஞ்சுகிறது.

வம் மிச் அம் =  வம்மிசம் ஆகிறது.

இது ஒரு பேச்சு வழக்குச் சொல். திட்டும்போது உன் வம்மிசம்
கருவத்துப் போக என்று கிழவி கத்துவதுண்டு. கொஞ்சம் பழங்காலக் கிழவிகளைச் சொல்கிறேன்.

இதுபின் "வம்ஸ"  என்று மெருகேற்றப் பட்டது.

மலாயில் வங்ஸ என்றிருக்கும். புத்திரி வங்ஸ என்றால்
குலமகள் இளவரசி.

வரு என்பது இறந்த காலத்தில் வ  என்று குறுகும். வந்தான், வந்தாள், வந்தது.

வம்மின் ஈங்கு ( புறநானூறு. 294.)  [  நினைவில் இருந்து.] தேடிப் பார்க்கவும்.   வம்மின் = "வா'ங்க"   (என்பது).

மிசை என்பது எளிய சொல்தான். மிசை > மீசை. உதட்டின் மீதிருக்கும் முடி.  மித : தண்ணீரின் மேல் நில் அல்லது உலவு என்று பொருள். மிதம் = பளு அற்ற நிலை; மிதப்பது.  மிதை > மிசை  த> ச போலி.  இது மோனையாகவும் வரும்.

மே ,  மேல் ,  மீ  மி  means up.

மலர்மிசை ஏகினான் ......குறள்.

தமிழ்  "வம்மிசையம்" வளர்க.

திருட்டில் திளைத்த

திருட்டில் திளைத்த உலகமென்றே  ஏசினாலும்
திருட்டை அகற்றித் தேர்கவெனப்  பேசினாலும்
கிடைத்த  பொருளைச் சுருட்டுவதில் பழக்கமுள்ளோன்
செவியில் இவையும்  சேர்பொழுதில்    திருந்துவானோ    ?




வியாழன், 21 ஜூலை, 2016

வசூல்

வசூல் என்ற சொல் நாம் அடிக்கடி கேள்விப்படுவதாகும். இது உருது மொழிச்சொல் என்றே நம் ஆசிரியர்கள் கற்பிப்பர்.

இதில்  நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால்,  வரி, வருமானம், வருவாய் முதலிய சொற்கள் வகரத்தில் தொடங்குதல் போலவே இதுவும்
தொடங்குகிறது. ஆகவே ஒரு சிறு தொடர்பு தெரிகிறது.

சூல் என்பது தோண்டுதல் என்றும் பொருள்படும்.

சூள் என்பது ஆணை. சூலுதல்   : தோண்டுதல்,  அறுத்தல், சூளுறவு  என்றால் ஆணையிடுதல் என்றும் பொருள்.

எனவே  வருவாய் ஆணை என்று பொருள் கொள்ளலாம்.   இச்சொல்
மேலும் ஆய்வதற்குரியது ஆகும். இச்சொல் உருது மொழிக்கு எங்கிருந்து
வந்தது என்பது உட்பட,  அரபி மொழியையும் ஆய்வு செய்தல் வேண்டும்.

புட்பக விமானம்/ வானூர்தி

பூக்கள் செடியிற் பிரிந்து வெகுதொலைவுக்குப் பறப்பதில்லை. வெறும் பூக்களால் ஆன வானூர்தி அல்லது விமானம் பறக்கவியலாதது.
கடவுள்கள் பறப்பதற்கு விமானம் அல்லது வானூர்தி தேவைப்படுவதில்லை. அவர்கள் எப்படியும் பறக்கலாம்.

ஆகவே இலங்கை சென்ற  புட்பக விமானம் ஓர் இன்றியமையாத கருவியாகச் செயல்பட்டிருக்கவேண்டும். வெறும் பூக்கள் அல்ல.

புள் + பகம் = புட்பகம் ஆகிறது.

புள் என்பது பறவை.

பகம் என்பது பகுதி. பகு+ அம் = பகம். இவ்விமானம் அல்லது வானூர்தி  முன்பகுதி பறவை போன்ற  உருவிலானது என்பது பொருள்.

இது புஷ்பக என்று பிறழ உணரப்பட்டு , புஷ்பம் என்பதனோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.  புள் என்ற சொல் தெரிந்த வான்மீகியும் தமிழனாதல் வேண்டும்.சங்கப் புலவன்.  இராமகாதையில் பல சொற்கள் தமிழினுடன் தொடர்பு உடையவை ஆகும். இது முன்னர் நாம் கூறியதேயாம்.

புதன், 20 ஜூலை, 2016

மகாமாயா

இன்று ஒரு வகைத் திரிபுபற்றி  உரையாடி மகிழலாம். சொல்லிறுதியில் ளகர ஒற்றில் முடியும் ஒருசொல், யகர ஒற்றாய்ச் சில வேளைகளில் முடியும் என்பதே அது.  இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு:

மாள் > மாய்

என்பதாகும்.

இச்சொல் வடிவங்கள் இங்ஙனம் மட்டுமின்றி  மடி, மரி என்றும் வருதலை உணரலாம்.  மாள்தல், மாய்தல், மடிதல், மரித்தல் என்று ~தல் தொழிற்பெயர் விகுதி பெற்றும் வரும்.

மடிதல், மரித்தல் என்று மகரக் குறிலில் தொடங்கிய சொல் மாகாரமாக முதனிலை நீண்டு திரிந்தும் சொல்லாவது கவனிக்க வேண்டியதொன்றாகும்.

இவை அனைத்தும் பொருள் மாறாமல் இன்றுகாறும் வழங்கி வந்திருத்தலை அறியும்போது தமிழ்ச் சொற்கள் பிற மொழியின்   சார்பின்றித்  தாமே திரிந்து தமிழ்மொழி உருவாக்கம் பெற்றிருப்பதைக் கண்டு மகிழலாம்.  பொருள் மாறியிருந்தால் நாம் ஒரு வேளை கண்டுகொள்ள இயலாது போயிருத்தல் கூடும்.

இந்த நாலு சொற்களும் மகரத்திலேயே தொடங்கின..

இவற்றில் சில பிற மொழிகளுக்குள் தாவிச் சென்றன,

கேட்க இனிமையாகவும் சொல்ல எளிமையாகவும் விளக்கமாகப் பொருள்படுத்தும் திறமும் உடைய சொற்கள் பிறமொழிகளில் சென்று
வழங்குவது நாம் கண்டு களிக்கத் தக்கதே என்போம். மிக்கப் பழங்காலத்திலேயே நம் பேச்சும் சொற்களும் தெளிவு பெற்றிருந்தமையை இத்தகைய தாவல்கள்  நமக்கு அறிவிக்கின்றன.

உடல் மாய்தலே மனிதன் தொடக்கத்தில் உணர்ந்த மாய்தல். இதன் பின் வெகுகாலம் கழித்தே  அவன்  ஒருவற்கு  அறிவு  மாய்ந்துபோய் மனிதன் மடைமை அடைகிறான்  என்பதை  உணர்ந்துகொண்டிருத்தல் தெளிவாகி றது. மொழிநூலில் அணியியல் வழக்குகள் காலத்தால் பிற்பட்டவை. பொருள் உண்டாகி உறுதியடைந்த பின்னரே அதனை அழகுபடுத்தும் வகைகளும் கலைகளூம் தோன்றுதல் கூடும். குயில் தோன்றிய பின் தான் அது பறக்கவும் பின் பாடவும் அறிந்துகொள்ளும்.

மாய் என்பதிலிருந்து மாயம் மாயை மாயா முதலிய சொற்கள் பிற்காலத்தில் உருப்பெற்றன.  அறிவு மாய்தல் என்னும் விரிவு பின்பு  உணரப்பட்டது.   மாயம் செய்வோன் மாயன், மாயக்காரன் என்றும் குறிக்கப்பெறுவானா யினன். மாய் என்ற சொல் தமிழில் தோன்றி ப்  பல ஆயிரம் ஆண்டுகளின் பின் தான்  மாயா என்ற சமயக் கருத்தும் மாமாயா என்னும்  மகாமாயா ஆகிய  அம்மனின் பெயரும் உருப்பெற்றிருத்தல் கூடும். இவை அணிவகையில் ஏற்பட்டவையாகக் கருதவேண்டும்.-

to edit

செவ்வாய், 19 ஜூலை, 2016

நாதன், நாதம் பின் புலத்தை ............

நாதன், நாதம் என்ற சொற்களை நாம் முன்னரே ஆய்ந்து அறிந்துள்ளோம்   இவை நா அல்லது நாக்கு என்ற சொல்லினின்று பிறப்பிக்கப்பட்டவை ஆகும்.  இதையும் விளக்கியுள்ளோம்.

இதன் தொடர்பில் இவை எழுந்த பின்புலத்தை அறிந்துகொள்ளலாம்.
நாவிலிருந்து எழுபவையே மந்திரங்கள். இறையுருவம்  அல்லது இறைவன் இவற்றுக்கு இன்றியமையாதவை அல்ல. இறையுருவை மந்திரம் சொல்பவர் ஏற்படுத்திக்கொள்ளலாம்.  ஒரு பிள்ளையார் வேண்டுமென்றால் கொஞ்சம் அரைத்த சந்தனத்தை எடுத்துப் பிள்ளையார் பிடித்து ஒரு தட்டில் வைத்துக்கொண்டு  அதில் பூக்களை இட்டுத் தண்ணீர் தெளித்து மந்திரம் சொல்லத் தொடங்கிவிட்டாலும், மந்திரங்களின் ஆற்றலால் பிள்ளையாருக்கு ஒருவகையில் உயிர் உண்டாகிவிட்டது  அல்லது  அவர் எழுந்தருளிவிட்டார் ( ப்ரசன்னம்) என்றுதான் கொள்வர். ஆகவே மந்திரத்துக்குப் பிள்ளையார் பிடித்தோம் என்பதே சரி; அன்றி பிள்ளையாருக்கு மந்திரம் உண்டாக்கப்படவில்லை. வாய்மொழி மந்திரங்கள் முன்னரே முழு ஆற்றலுடன் இருந்துகொண்டிருப்பவை. இப்படிச் சொல்லும்காலை, இதில் பல கேள்விகள் எழவேண்டும். அவற்றை இங்கு விளக்காமல் விட்டுவிடுகிறேன்.  ஏனெனில் அவை சொல்லாய்வுக்குத் தேவையில்லை என்பதனால்தான்.

இது இங்கு ஏன் சொல்லப்படுகிறது  எனில், நாவின் முன்மையை அல்லது முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவே. நாவில் எழுவது நாதப் ப்ரம்மம் .  பிறமம் > ப்ரம்மம்.  நாவினின்று பிறந்தது.

நா> நாமம்
நா> நாதம் ( தம் நாவு)  ஆகுபெயராய்  ஓலி  குறிக்கும் .
நா > நாதன் ( தன் நாவில் எழுபவன் ).

நாவினின்று எழும் மந்திரங்களில்தாம்  நாதன் வாழ்கின்றான்.  நாவில்
நாதம் எழுகின்றது.

மீமாம்சம் என்பதில், ஓர் இறைவனின்றி மந்திரங்கள் உருக்கொள்ளும்.
மந்திரங்களுக்கு இறைவன் தேவைப்படுவதில்லை. மந்திரங்களில் கூறப்படும் தேவர்கள் அல்லது இறைவர்கள், வாழ்வது அந்த மந்திரங்களில்தாம். மந்திரங்களில் அல்லாமல் அவை வேறெங்கும் இருப்பனவுமில்லை, தேவைப்படுவனவுமில்லை.

இங்கு கூறப்பட்ட சொற்கள் அத்தகு பின்புலத்தில் எழுந்தவை.  மந்திரங்களுக்கு மூர்த்தி கட்டுப்படும் என்று இக்கொள்கையில் ஊன்றியோர் சொல்வர். இறைவனைப் பற்றிய கவலை இல்லாமல், மந்திரங்களையும் உரிய சடங்குகளையும் செய்துகொண்டிருந்தாலே தாம் எய்தவேண்டியவற்றை எய்திவிடலாம்  என்பது இக்கொள்கை. இச்சொற்களின்  அடிப்படை இது என்பதன்றி இக்கொள்கையின்  உண்மைபற்றிய தருக்கத்தில் ஈடுபடுதற்காக இதைச் சொல்லவில்லை என்பதறிக.

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என்ற சிவவாக்கியர் போன்ற சித்தர்கள் இதற்கு மாறான கொள்கையர்  எனினும் சொல் அமைந்த சுற்றுச் சார்பினை  நீங்கள் அறிந்துகொள்ளல் வேண்டுமென்பதே ஈண்டுத்  தந்த விளக்கத்தின் குறிக்கோள் ஆகும் ,

Will edit. (polish up ).  
Some editing has been accomplished.






தெர் ( அடிச்சொல் ).

தெர் என்பது ஒரு தமிழ் அடிச்சொல். காணுதல், தெளிவு என்பது இதன் பொருள். இதிலிருந்து பிறந்த வேறு சொற்களைப் பார்ப்போம் :


தெர் > தெருள்.   (உள் என்னும் விகுதி).    எ -டு:  உர் > உருள் ,   கட>   கடவுள்
தெர் > தெரி       ( இ ‍ : விகுதி )    தெரி > தெரிதல்.
தெர் > தேர்        (முதனிலை நீட்சி பெற்றது.)  தேர்> தேர்தல்.
                   வினைச்சொல்லாகவும் வரும்)     தேர் :    "காட்சி ஊர்தி  "
தெர் > தெரி > தெரி+சு+ அனம் > தெரிசனம். சு, அனம் விகுதிகள்.  அன் +அம்                                           =அனம்
               தெரிசனம் >  தர்ஷன்.
தெர் > தெரிவை. (தெரிந்து நடக்கும் பெண்  அல்லது பிறருக்குத் தெரிய நடமாடும் அகவையுடைய பெண்..)
தெர் > தெருட்டு > தெருட்டம்.      (தெருட்டம் > திருஷ்டம்)
              தெருள் + து =    தெருட்டு.   (எ -டு : உருள் + து  =  உருட்டு.)

தெர் > தெர்சனம் >  நிதர்சனம்.   நில்  > நி .  ~ + தர்ஷன் .    "நீங்காமல்  நிற்கும்  காட்சி "  அல்லது தெளிவான  உண்மை.

தேரை  <  திரை (திரைதல் )  not from the same root.




ஞாயிறு, 17 ஜூலை, 2016

எண்டிசை இணையம்

குளம்பி குடிக்கும் குறுகுகடை  உட்கார்ந்த்
த‌லசியெடுப் பாரரசுச்  செய்தி  ‍‍‍==== தொலையவது
வெட்டும் முடிவினைஞர் பேசுவர் இப்போதோ
எட்டுத் திசையுமிணை யம்.          ( 1 ) -

குளம்பி -  காப்பி 
 தொலையவது -  அது நிற்க 


அந்தவிருள் காலத்தும்  வீழ்ந்த‌  அணிபல‌வாம்
உந்துபொருள் இக்காலும் உண்டேகொள்  ‍‍=== நொந்தனையோ
எந்தக் கலிகாலும்  இஃதுண்டே மாறுமோ
பந்தம் குலையா வரை.           (2)

இக்காலும் -  இப்போதும்.
கலி காலும்  -  எழுச்சி காலத்தும்

உலகத்தின் பால்  பந்தம் கொள்வதால்  மனிதன்  பிறருடன்  முரண்படுகின்றான் .

ஆன அரசியல்  மென்குடி  வன்படை
மானும்  அறம்பொருள்  மாறாடக்   === காணிடங்கள்
எங்கும்வாய்  மூளை  எடுத்துச்  செலும்மாந்தன்
தங்கும்  நிலையோ  முரண் .        (3)

மாந்தன்   வாய்  மூளை  எடுத்துச்  செலும்  -   மனிதன் எங்கு சென்றாலும்  
வாயையும்  மூளையையும் எடுத்துச் செல்பவன்;    ( ஆகையால் )
ஆன அரசியல்  மென்குடி  வன்படை மானும்  அறம்பொருள்  மாறாடக்    காணிடங்கள்  -  அரசியல்  மென்மை உடைய குடி வன்மையுடைய   படை  அறம்  பொருள்  என எல்லா விடயங்களும்   அவன் மாறுபடும் படியாகக்  காணுமிடங்கள்  ஆகும்;  தங்கும் நிலையோ  முரண் -   அதனால்தான் அவன்  எதிலும் முரண் படுகின்றான் . ( உலகில்  முரண்பாடு  தங்குகிறது ,)

வாய் மூளை  இல்லாமலும் வாழ முடியாது; ஆகவே அவனைக் கடிவதில் பொருளில்லை .என்றபடி .




    


பங்காள முத்து

பங்காள  முத்து

இப்போது இந்த முத்து ஏதும் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. மேற்கு வங்கம் உள்ளிட்ட முன்னைய  வங்காள தேசத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்த முத்துக்களையே  இது குறிக்கிறது. இவற்றைப்  பங்காள முத்து என்றனர். மன்னர்கள், குறு நில ஆட்சியாளர்கள் முதலானோர் இப்பெயரை இட்டிருத்தல் கூடும். (இவற்றை வாங்கினோர் என்பதால் )

தமிழ் நாட்டு முத்துக்களே உண்மையான மதிப்புமிக்க முத்துக்கள். முத்தாரம்  (முத்தியாரா )  என்ற சொல் இந்தோனேசியா மலேசியா முதலிய நாடுகளில் வழங்கும் மொழிகளிலும் ஊடுருவியுள்ளபடியால், தமிழக முத்துக்கள் உண்மையான உயர்ந்தவை என்பது பெறப்படும், மேலும் முத்து என்ற தமிழ்ச்சொல் மலாய் மொழியில் தகுதி என்றும் உயர்வு என்றும் பொருள்தருவது  இதை எடுத்துக்காட்டுகிறது.  பெர்முத்து திங்கி bermutu tinggi  (high quality ) என்ற மலாய்த் தொடர் இதனை வலியுறுத்தும்.

நாளடைவில் பங்காள முத்து என்றால் பொய் முத்து என்ற பொருள்
ஏற்பட்டுவிட்டது.  வங்காளம் என்ற சொல் பங்காளம் என்று திரிவது
வகர பகரப் பரிமாற்றமாகும். இதனைப் போலி என்று இலக்கணங் கூறும்.  போல இருத்தலின்  போலி.

வங்காளிகள் உண்மையில் "பங்காளிகள்" ; எப்படி எனில் இவர்கள் ஒரு பங்கு மங்கோலியக் கலப்பு உடையோர் என்பர். கூடிய மங்கோலியக் கலப்பு உடையோர் சற்று வெண்மையாகவும் குறைந்த கலப்பு உடையோர் சற்றுக் கருப்பாகவுமிருப்பதாகச் சொல்லப்படும். பங்கு  (part) 1 வெண்மைக் கலப்பினால் பங்காளிகள் ஆகி அது வங்காளிகள் என்றும் திரிந்ததென்ப. 3

ஆங்கிலேயர் வளையல்களை  அறிந்ததும்   வங்காள
நாட்டிலிருந்துதான். அதனால் வளையலுக்கு ஆங்கிலத்தில்
பேங்கிள்  bangle என்ற பெயர் உண்டாயிற்று.
Notes:
----------------------------------------------------------------------
1 அதாவது  தோல் மஞ்சள் நிறமும் இப்போது வெண்மையாகக்  கருதப்படுகிறது. வெளிறிய மஞ்சள்  என்பர் அறிஞர்   yellowish white.

2 edited.  will review.

3 திராவிட மொழி பேசிய  பங்கு  (bang) இனத்தவர் பெயரிலிருந்து இந்தச் சொல் வந்தது  என்பர்.   இவர்கள் பங்குத் (பாதித் )  திராவிடர்.  காலக்  கணக்கீடு  1000 BCE.   பங்கு பங்காளி முதலிய இன்னும் தமிழில் வழக்குடைய பதங்களாம்.


புதன், 13 ஜூலை, 2016

நல்ல ஓய்வே!

நாலினில் ஒன்று குன்றும்
நாட்களில் நல்ல ஓய்வே!
வாலினை ஆட்டும் நாயும்
வாய்மியாப் பூனை தானும்
சாலவே அன்பில் தோயும்
சலிப்பிலா நீக்கம்;  ஆக்கும்,
நூலினில் ஆடை போல‌
நுண்ணுணர் வொன்றாய் நண்பர்.

ஒவ்வொரு நாளும் வேறாய்
ஒழிந்திடில் உள்ளம் வேண்டும்
செவ்விய நன்மை; யாவும்
சேர்ந்ததே வாழ்க்கை ஆகும்.
துவ்விடும் ஊணில் நாளும்
தோன்றிடில் மாற்றம் நன்றாம்
அவ்விடுப் பெற்கே ஆற்றும்
அகவிரிக் கெல்லை இல்லை.


3 நாட்கள் ஓய்வு . நண்பருடன்
நீக்கம்  =  நாள்தோறும் நடப்பனவற்றிலிருந்து  விலகி இருத்தல். 
துவ்விடும்  =உண்ணும்   
எற்கே = எனக்கே .
அகவிரி -  மனத்தின் விரிவு .

சிவ போ பா.12 சிவனடியாரைப் போற்றுதல்


இனிச் சிவஞான போதத்தின் இறுதிப் பாட்டினை ( பாடல் 12) பாடிப் பொருளுணர்ந்து  உளமகிழ்வோம்.

பலவாறு முயன்றாலும் சிவத்தை அறிதல் எளிதில்  கிட்டுவதில்லை. அவன் என்னில்; நான் அவனில் என்னும் உணர்வுகூடத் தோன்றுவதில்லை. மும்மலங்களும் வந்து தடை செய்கின்றன. மாயை குறுக்கே நிற்கிறது. என்ன செய்யலாம் என்றால், ஒரு குரு தேவைப்படுகிறார். இறையன்பர்கள்  அருகில் நின்று  வழி காட்ட வேண்டியுள்ளது. கோவிலும் ஆங்கு  இறையை
அடுத்து நின்ற உருத்திராட்ச முதலிய அணிந்தோரும் தேவைப்படுகின்றனர். அவர்களுடன் பழகி, ஏற்ற அறிவுரைகள் பெற்று, இறையை இறுதியில் உணராலாம். அடையலாம். இதை இவ்விறுதிப் பாடல் விளக்குகிறது.

செம்மலர் நோன் தாள் சேரல் ஒட்டா
அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ
மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே.


செம்மலர் ‍:   செந்தாமரை மலர் போன்ற;
நோன் தாள் :  பெருமை பொருந்திய திருவடிகளை;
சேரல் ஒட்டா:  சென்று சேருவதைத் தடுக்கின்ற;
அம்மலம் :  அந்த கரிய வினைகளை;
கழீஇ :  விலக்கி;
அன்பரொடு மரீஇ :  இறைப்பற்றுடையாருடன் சேர்ந்து நின்று;
மால் அற :  மயக்கம் இல்லாத‌
நேயம் மலிந்தவர் :  இறையன்பு மிகுந்தார் பால் சென்று;
வேடமும் :  அவர் வேய்ந்திருக்கும் இறைப்பற்று குறிக்கும்
அணிகலன்களையும்;
ஆலயம் தானும் :  கோவிலையும்;
அரன் எனத் தொழுமே:  சிவம் என்று எண்ணித் தொழ வேண்டும்;
அப்போது சிவத்தை அடையலாம் என்றவாறு.

சிவனடியாரைப் போற்றுதல் சிவத்தைப் போற்றுதலேயாகும்.  சிவத்தை வணங்குதற்கும்   வணங்கி அடைதற்கும்  அடைந்து கலத்தற்கும்  வழி காணா  நிலையில்  சிவனடியாரைப் போற்றிச்  சிவத்தை அடைக   என்பது ஆசிரியர் கூறுவதாகும் .

சிவத்தின் தன்மையையும் ஆன்மாவின் தன்மையையும்  மும்மலங்களையும்  ஏனை விளக்கங்களையும் அறிந்திருந்தாலும்  சிவத்தை அடைந்துவிட இயலுவதில்லை.

பற்றுக பற்றற்றார் பற்றினை  அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு .

என்று கூறினது  அதனால்தான் என்றுணர்க.

உருத்திராட்சமும்  காவியும்  பகிரங்கம்.  மனவுணர்வே  முன்மையானது.  என்றாலும்  மனம் ஈடுபாடற்றுக்  கிடக்கிறது.  ஆகவே பகிரங்கத்திலிருந்து மனத்திற்கு முன்னேற வேண்டும்.  உருத்திராட்ச முதலியவை  யாவருடனும் பகிர்ந்து கொள்ளும்படியாகத் தெரிய நிற்பது.  பகிர் + அங்கம்.  பகிரப்  படுவதைப்  பெற்று  மேல் செல்க    என்றபடி .



சீனாவுக்கு எதிரான தீர்ப்பு

தென்சீனக் கடலினிலே தீவுகளும் திட்டுகளும்
தெள்ளொளியில்  திண்மைதரு குணக்கிலெழு சீனநாடு
வன்மையுடன் அவைதிருத்தி வளமுறுத்தி உரிமைபெற‌
வழக்கநிலை மாறுகொள வழங்கியபல் நடபடிகள்.

எல்லாமும் பிழைதோன்ற ஏலாத நிகழ்த்தினமை
எதிர்வந்த தீர்ப்பதனால் புதிர்நீங்கப் புரட்டிவிட‌
சொல்லாலே படுசினமாம்! சூடான முட்டுரைகள்
சூழுலகம் இவைகண்டு சோராமை காத்திருக்கும்.

சட்டப்படி வருதகவுச் சாய்தலிலாத் தீர்ப்புரையை
முட்டிமுகம் சுளிக்காமல் ஒட்டிவரின் விரிநெஞ்சம்;
குட்டியொப்ப முரண்டியற்றிக் குறுமைசெயல் தவிர்த்திடுதல்
முற்றுவளர் நெறிசெலவே முயன்றிடுதல் மூதறிவே.


வன்மை ‍: வலிமை
குணக்கு : கிழக்கு.
நடபடிகள் : செயல்பாடுகள்
ஏலாத : ஏற்றுக்கொள்ள இயலாதவை
முட்டுரைகள் :  statements of rejection against the tribunal
சாய்தலிலா:  non-partisan
விரி நெஞ்சம் :  magnanimous
குட்டியொப்ப : இளமையில் தெளிவின்மை போல‌
மூதறிவே:  maturity

சீனாவுக்கு எதிரான தீர்ப்பு 


ஔஷதம் ஒளடதம்


இச்சொல் எப்படி அமைந்தது என்பதை ஆய்வோம்.

சில பொருள்களை இடித்துத் தூளாக்கி மருந்து செய்வார்கள். இவற்றைச் சூரணம் என்பர். சிலவற்றை  காய்ச்சி எடுப்பார்கள்.  இன்னும் சில புடம்போட்டுத் தயார் செய்யப்படும். இங்ஙனம் மருந்து செய்யப் பல வழிகளைக் கையாளுவதுண்டு.

தயார் செய்தும் சில சற்று இளகிய நிலையிலேயே இருக்கும். இவை உண்மையில் "இளகியம்" ஆகும். இச்சொல் திரிந்து லேகியம் ஆகிவிட்டதுடன், இளகியம் மறைந்துவிட்டது.

அவிழ்தல் என்பது இளகுதல்.  சொரிதல், மலருதல், விரிதல், உதிர்தல்,  நெகிழ்தல் என்ற பொருளுடைய வினைச்சொல்.

இதிலிருந்து  அவிழ்+ அது+ அம் =  அவிழதம் என்று அமைத்தனர்.
அமைத்தகாலை, இச்சொல இளகிய அல்லது நெகிழ்வாக இருந்த‌
மருந்துகளைக் குறித்தது. தூளாக இருந்தது  தூளம்> தூரம் > செந்தூரம் என்று குறிக்கப்பட்டது போல, இளகிய நிலை மருந்துகளும் அவிழதம், இளகியம் எனப்பட்டன.

இவற்றுள் இளகியம் லேகியம் ஆனதுபோல, அவிழதம்? அவுடதம் >
அவுஷதம் ஆகிவிட்டது.  இச்சொல்  இப்போது மருந்து என்ற பொதுப்பொருளில் குறிக்கப்படுகிறது.