புதன், 13 ஜூலை, 2016

சிவ போ பா.12 சிவனடியாரைப் போற்றுதல்


இனிச் சிவஞான போதத்தின் இறுதிப் பாட்டினை ( பாடல் 12) பாடிப் பொருளுணர்ந்து  உளமகிழ்வோம்.

பலவாறு முயன்றாலும் சிவத்தை அறிதல் எளிதில்  கிட்டுவதில்லை. அவன் என்னில்; நான் அவனில் என்னும் உணர்வுகூடத் தோன்றுவதில்லை. மும்மலங்களும் வந்து தடை செய்கின்றன. மாயை குறுக்கே நிற்கிறது. என்ன செய்யலாம் என்றால், ஒரு குரு தேவைப்படுகிறார். இறையன்பர்கள்  அருகில் நின்று  வழி காட்ட வேண்டியுள்ளது. கோவிலும் ஆங்கு  இறையை
அடுத்து நின்ற உருத்திராட்ச முதலிய அணிந்தோரும் தேவைப்படுகின்றனர். அவர்களுடன் பழகி, ஏற்ற அறிவுரைகள் பெற்று, இறையை இறுதியில் உணராலாம். அடையலாம். இதை இவ்விறுதிப் பாடல் விளக்குகிறது.

செம்மலர் நோன் தாள் சேரல் ஒட்டா
அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ
மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே.


செம்மலர் ‍:   செந்தாமரை மலர் போன்ற;
நோன் தாள் :  பெருமை பொருந்திய திருவடிகளை;
சேரல் ஒட்டா:  சென்று சேருவதைத் தடுக்கின்ற;
அம்மலம் :  அந்த கரிய வினைகளை;
கழீஇ :  விலக்கி;
அன்பரொடு மரீஇ :  இறைப்பற்றுடையாருடன் சேர்ந்து நின்று;
மால் அற :  மயக்கம் இல்லாத‌
நேயம் மலிந்தவர் :  இறையன்பு மிகுந்தார் பால் சென்று;
வேடமும் :  அவர் வேய்ந்திருக்கும் இறைப்பற்று குறிக்கும்
அணிகலன்களையும்;
ஆலயம் தானும் :  கோவிலையும்;
அரன் எனத் தொழுமே:  சிவம் என்று எண்ணித் தொழ வேண்டும்;
அப்போது சிவத்தை அடையலாம் என்றவாறு.

சிவனடியாரைப் போற்றுதல் சிவத்தைப் போற்றுதலேயாகும்.  சிவத்தை வணங்குதற்கும்   வணங்கி அடைதற்கும்  அடைந்து கலத்தற்கும்  வழி காணா  நிலையில்  சிவனடியாரைப் போற்றிச்  சிவத்தை அடைக   என்பது ஆசிரியர் கூறுவதாகும் .

சிவத்தின் தன்மையையும் ஆன்மாவின் தன்மையையும்  மும்மலங்களையும்  ஏனை விளக்கங்களையும் அறிந்திருந்தாலும்  சிவத்தை அடைந்துவிட இயலுவதில்லை.

பற்றுக பற்றற்றார் பற்றினை  அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு .

என்று கூறினது  அதனால்தான் என்றுணர்க.

உருத்திராட்சமும்  காவியும்  பகிரங்கம்.  மனவுணர்வே  முன்மையானது.  என்றாலும்  மனம் ஈடுபாடற்றுக்  கிடக்கிறது.  ஆகவே பகிரங்கத்திலிருந்து மனத்திற்கு முன்னேற வேண்டும்.  உருத்திராட்ச முதலியவை  யாவருடனும் பகிர்ந்து கொள்ளும்படியாகத் தெரிய நிற்பது.  பகிர் + அங்கம்.  பகிரப்  படுவதைப்  பெற்று  மேல் செல்க    என்றபடி .



கருத்துகள் இல்லை: