செவ்வாய், 19 ஜூலை, 2016

நாதன், நாதம் பின் புலத்தை ............

நாதன், நாதம் என்ற சொற்களை நாம் முன்னரே ஆய்ந்து அறிந்துள்ளோம்   இவை நா அல்லது நாக்கு என்ற சொல்லினின்று பிறப்பிக்கப்பட்டவை ஆகும்.  இதையும் விளக்கியுள்ளோம்.

இதன் தொடர்பில் இவை எழுந்த பின்புலத்தை அறிந்துகொள்ளலாம்.
நாவிலிருந்து எழுபவையே மந்திரங்கள். இறையுருவம்  அல்லது இறைவன் இவற்றுக்கு இன்றியமையாதவை அல்ல. இறையுருவை மந்திரம் சொல்பவர் ஏற்படுத்திக்கொள்ளலாம்.  ஒரு பிள்ளையார் வேண்டுமென்றால் கொஞ்சம் அரைத்த சந்தனத்தை எடுத்துப் பிள்ளையார் பிடித்து ஒரு தட்டில் வைத்துக்கொண்டு  அதில் பூக்களை இட்டுத் தண்ணீர் தெளித்து மந்திரம் சொல்லத் தொடங்கிவிட்டாலும், மந்திரங்களின் ஆற்றலால் பிள்ளையாருக்கு ஒருவகையில் உயிர் உண்டாகிவிட்டது  அல்லது  அவர் எழுந்தருளிவிட்டார் ( ப்ரசன்னம்) என்றுதான் கொள்வர். ஆகவே மந்திரத்துக்குப் பிள்ளையார் பிடித்தோம் என்பதே சரி; அன்றி பிள்ளையாருக்கு மந்திரம் உண்டாக்கப்படவில்லை. வாய்மொழி மந்திரங்கள் முன்னரே முழு ஆற்றலுடன் இருந்துகொண்டிருப்பவை. இப்படிச் சொல்லும்காலை, இதில் பல கேள்விகள் எழவேண்டும். அவற்றை இங்கு விளக்காமல் விட்டுவிடுகிறேன்.  ஏனெனில் அவை சொல்லாய்வுக்குத் தேவையில்லை என்பதனால்தான்.

இது இங்கு ஏன் சொல்லப்படுகிறது  எனில், நாவின் முன்மையை அல்லது முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவே. நாவில் எழுவது நாதப் ப்ரம்மம் .  பிறமம் > ப்ரம்மம்.  நாவினின்று பிறந்தது.

நா> நாமம்
நா> நாதம் ( தம் நாவு)  ஆகுபெயராய்  ஓலி  குறிக்கும் .
நா > நாதன் ( தன் நாவில் எழுபவன் ).

நாவினின்று எழும் மந்திரங்களில்தாம்  நாதன் வாழ்கின்றான்.  நாவில்
நாதம் எழுகின்றது.

மீமாம்சம் என்பதில், ஓர் இறைவனின்றி மந்திரங்கள் உருக்கொள்ளும்.
மந்திரங்களுக்கு இறைவன் தேவைப்படுவதில்லை. மந்திரங்களில் கூறப்படும் தேவர்கள் அல்லது இறைவர்கள், வாழ்வது அந்த மந்திரங்களில்தாம். மந்திரங்களில் அல்லாமல் அவை வேறெங்கும் இருப்பனவுமில்லை, தேவைப்படுவனவுமில்லை.

இங்கு கூறப்பட்ட சொற்கள் அத்தகு பின்புலத்தில் எழுந்தவை.  மந்திரங்களுக்கு மூர்த்தி கட்டுப்படும் என்று இக்கொள்கையில் ஊன்றியோர் சொல்வர். இறைவனைப் பற்றிய கவலை இல்லாமல், மந்திரங்களையும் உரிய சடங்குகளையும் செய்துகொண்டிருந்தாலே தாம் எய்தவேண்டியவற்றை எய்திவிடலாம்  என்பது இக்கொள்கை. இச்சொற்களின்  அடிப்படை இது என்பதன்றி இக்கொள்கையின்  உண்மைபற்றிய தருக்கத்தில் ஈடுபடுதற்காக இதைச் சொல்லவில்லை என்பதறிக.

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என்ற சிவவாக்கியர் போன்ற சித்தர்கள் இதற்கு மாறான கொள்கையர்  எனினும் சொல் அமைந்த சுற்றுச் சார்பினை  நீங்கள் அறிந்துகொள்ளல் வேண்டுமென்பதே ஈண்டுத்  தந்த விளக்கத்தின் குறிக்கோள் ஆகும் ,

Will edit. (polish up ).  Some editing has been accomplished.






கருத்துகள் இல்லை: