ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

கம்பி - சொல்லுக்கு எளிய விளக்கம்.

கம்பி என்ற சொல் மிக்க விரிவாக விளக்கப்பட்டுள்ளது,  முன்னர் நாம் கண்ட இடுகையில்.  அஃது:

கம்பி   https://sivamaalaa.blogspot.com/2021/06/blog-post_13.html

ஆனால் இதை இன்னும் எளிதாக உணர்ந்துகொள்ளலாம். இது ஒரு குறுக்கென்றே சொல்லவேண்டும்.:

கடு + பு + இ  >   கடும்பி.  இது இடைக்குறைந்து கம்பி   ஆகிவிடும்.

இது மெலித்தல் உத்தி ஆகும்.

[  இங்கு,  பி என்ற இறுதிக்கு  ஒரு விகுதியென்னும் தகுதியை வழங்கலாம்.  அவ்வாறாயின்  பு + இ என்று பிரித்து இடைநிலை + விகுதி என்று விவரிக்க வேண்டியதில்லை. விவரிப்பது  என்றால் விரித்து வரிப்படுத்துவது .  இந்தப் பயிலாக்கத்தில் அடிச்சொல்லைக் கண்டுபிடிப்பதே நோக்கம். விகுதி இடைநிலைகள் எல்லாம் ஆக்கிய சொல்லை வேறுபடுத்தும் ஒலிகளின் உருக்களே.   அவற்றில் பெரிதும் பொருண்மை இருப்பதில்லை .  இது சொல்லாக்கத் தத்துவம்.  உணராதோன் உண்மை அறிந்து மேலெழுவதில்லை ] 

பல சொற்களில் கடின இடையொலிகள் குறைந்துள்ளன.  இன்னோர் எடுத்துக்காட்டு:  கட  வினைச்சொல்.  : கடப்பல் >  கப்பல்.  கடந்துசெல்ல உதவும் மிதப்பூர்தி. மற்றொன்று:  அடங்கு + அம் = அடங்கம், இடைக்குறைந்து அங்கமானது. ( உடல்).

இதில் வந்த புணர்ச்சித் திரிபு:

கடு + கை >  கடுங்கை என்பதுபோலுமே இது.  கடுங்கை என்றால் கடுமையானது என்று பொருள். எமன் என்னும் உயிர்குடிப்போன்,  கடுங்கைக்கூற்றுவன் என்பதும்  காணலாம்.  இது  தேவாரத்தில்  (. 167, 1)  வந்துள்ளது.

கொடு + கோல் +  அன் என்பது கொடுங்கோலன் ஆகும்.  கொடு> கொடுமை,  மை விகுதி கெட்டுப்புணர்த்தல் என்பது இலக்கணியர் உரைப்பது.

இனி, கடு > கடும்பு > கடும்பி என்பது எளிதான விளக்கம்.

கடும்பு +இ  = கடும்பி >  கம்பி.

கடுமையானது என்பதே பொருள்.  பு, இ என்பன வெறும் விகுதிகளே.

இகர இறுதி இல்லாமல் கடும்பு என்று இடைக்குறையாமல் வருங்கால் அது  வேறுபொருள் கொள்ளும்

இதற்கு இன்னொரு காட்டு.   மை என்பது ஒரு கரிய கறைநீரைக் குறிக்கிறது. அது அப்பொருளை இழந்து, இர் என்ற விகுதி பெற்று மை இர் > மயிர் என்னும் போது  தலைமுடியைக் குறிக்கும், பிற மயிரும் குறிக்கும்.   மை + இல் என்று இல் இணையும்போது மை இல் > மயில் என்று மைதெளித்தது போலும் இறகுகளின் நிறமுள்ள ஒரு பறவையைக் குறிக்கும்  மை என்ற தனிச்சொல்லுக்குள்ள பொருள் மற்ற அமைப்புகளில் இல்லை.  ஆனால் ஒரு பொருள் தொடர்பு இருக்கிறது. அது கருமைநிறம் என்பது..  கடும்பு என்பது தனிச்சொல்லாய்,  கடும்புப் பால் குறிக்கும்.   அது இகர விகுதி பெறுகையில் அந்தப் பொருள் தொலைந்து,  கடுமைப்பொருள் மட்டுமே எஞ்சியபடி " கம்பி" ஆகி, கடும் இரும்புத் தடி  என்ற பொருள் பெறுகிறது. பல்வேறு விகுதிகளை ஏற்கையில் மூலப்பொருள் மட்டும் எஞ்சும்.

இவற்றுள் பெரும் வேறுபாடுகள் எவையும் இல்லை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.



1 கருத்து:

SIVAMALA சொன்னது…

இன்னும் கொஞ்சம் விளக்கத்தைச் சேர்த்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணி, சில சேர்த்துள்ளோம். படித்தறிந்து மகிழ்வீர்.