வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

நிதியும் நிலையும்.

 நிதி என்பது இப்போது பெரிதும் மக்கள் அறிந்துள்ளதாக உணரும் ஒரு சொல். ஒவ்வோர் அரசிலும் ஒரு நிதி அமைச்சர் இருப்பார். ஆண்டுக்கு ஒருமுறையாவது நாட்டிலுள்ள மக்களெல்லாம் அவரது கையையோ அல்லuது அதன் வழங்கு திறனையோ எதிர்பார்த்திருப்பர். நிதி என்பது எந்தமொழிச் சொல் என்று ஒரு சிலராவது தங்கள் உள்ளங்களில் எண்ணிக்கொண்டிருப்பர்.

நிதி என்பது நிலையான வைப்புத் தொகை என்று சிலர் பொருள் கூறுவர். சிலர் பெயரிலும் நிதி என்ற சொல் ஒரு பகுதியாய் இருக்கும்.

பணம் என்பதும் நிதி என்பதும் ஒருபொருட் சொற்கள் என்று சிலர் கருதினாலும் "பணநிதி"  என்ற சொல்லும் வழக்கில் உள்ளது. ( " அனைத்துலகப் பணநிதி நிறுவனம்" ).  இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது என்னவென்றால்,  நிதி என்பது பலவகைப்படும்.  எல்லாம் பொன்னாகவோ வெள்ளியாகவோ மான் குட்டிகளாகவோ தொகுத்து வைத்துக்கொண்டிருந்தால் அவையும் " நிதி "  என்றே கொள்ளவேண்டும்.  ஒரு குறிப்பிட்ட காலத்துக்  காகவாவது நிற்புடைமை இருக்கவேண்டும். என்றுமே இருக்கவேண்டிய ஒழுங்குமுறை அதற்கு வேண்டியதில்லை.   ஆகவே பணநிதி என்பது பணமாக மட்டுமே நிற்புத் தொகுதியாய் இருப்பது.  இவற்றையெல்லாம் கருதுகின்ற காலை, நிதி என்னும் சொல் நில் என்பதிலிருந்து வந்ததாக இருக்கவேண்டும் என்று முடிபுகொண்டதில் ஏற்கத்தக்க உள்ளுறைவுகள் இருக்கின்றன என்றே நாம் எண்ணவேண்டும்.

நிதி என்ற சொல்லை உண்டாக்கியவர்கள், யாமறியக் குறிப்புகள் எவற்றையும் தந்து செல்லவில்லை.  ஆதலால் எதையும் முற்றும் ஏற்கத்தகாதது என்று முடித்தல், எனது என்னும் ஆணவத்தின்பாற் படலாம்.  அப்படிக் கொள்வதற்காக இது எழுதப்படவில்லை.

நில் > நி > நிதி.  நிற்பு உடைய தொகுதி அல்லது சேமிப்பு.

நில் > நி  ( கடைக்குறை)

தி  - தொழிற்பெயர் விகுதி.

இன்னொரு வகையில்:  நில் + தி > நிற்றி > நித்தி > நிதி ( இடைக்குறை).


நாம் இங்குக் காட்டவிருப்பது  இவ்வாறு:

நேடுதல் - சம்பாதித்தல். வினைச்சொல்.

நேடு > நே ( கடைக்குறை ) >  நேதி >  நிதி.

    இகரம் எகரமாகத் திரியும்.   இழு  வினைச்சொல்  --     இழுது > எழுது.  

    எகரம் - ஏகாரம் தமக்குள் திரியும்.    ஏழு நிலை மாடம் >   எழுநிலை மாடம்.

    எழுபிறவி :  ஏழு பிறவி.  இது உண்மையில் குறில் நெடில் மாற்றீடு.  அதிகம் உள.

ஆகவே நிதி என்பது சம்பாதித்துச் சேர்த்துவைத்த மதிப்புள்ளவை.

நேடு > (தி விகுதி சேர ) நேடுதி >  நேதி > நீதி.

இடைநிற்கும் டகரங்கள் அதன் வருக்கங்கள்  மறைதல் பெருவாரி. நாம் எப்போதும் காட்டுவது 

பீடு > பீடுமன் > பீமன்.  ( பெருமிதத்துக்குரிய மன்னன் ).

பிறவும் உள:

கடப்பு :  கடப்பல் > கப்பல்  ( கடலைக் கடக்க உதவும் மிதப்பூர்தி ).  டு இடைக்குறை.

அடங்குதல்:    அடங்கம் > அங்கம்.  ( உள்ளுறுப்புகள் அடங்கிய வெளிப்போர்வையான உடல் ).

இதிலும் பலவுள. இவற்றைப் பழைய இடுகைகளைப் படித்துப் பட்டியலிடுக.

எனவே நேடுதல் என்ற வினையினின்றும் நிதி என்ற சொல் ஏற்படுமாதலின், இது ஒரு பல்பிறப்பிச் சொல் என்று முடிக்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்னர்.

{இடையீடுகளிடையே பல முறை நிறுத்தி எழுதவேண்டியதாயிற்று. ஒருவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.}



கருத்துகள் இல்லை: