சனி, 7 ஆகஸ்ட், 2021

மருவற்குரிய மருத நிலமும் சில மருவற் சொற்களும்.

பண்டைக் காலத்திலும் சரி, இன்றும் சரி.  மனிதனுக்கும் பிற உயிர்களுக்கும் முன்மை வகிக்கும் பொருளென்றால்  அது உயிர்களுக்கு உணவே அன்றிப் பிறிதில்லை என்பது மிக ஆழ்ந்து சிந்திக்காமலே யாவரும் ஒப்புக்கொள்ளக்  கூடிய கருத்தாகும். மனிதற்கும் மன்னுயிர்க்கும் உணவளிப்பதே ஒரு பேரறம் என்பர் அறிந்தோர்.

எனவே, உலகனைத்தும் மருவிச் செல்லற்குரிய நிலப்பகுதி என்றால் அது மருத நிலமாகும். இவ்வுலகில் எங்கெங்கு நெல்லும் பிற கூலங்களும் விளைகின்றனவோ அவற்றை யெல்லாம் மருதம் என்றே சொல்லவேண்டும். மருதமானது உலகின் முதன்மை.

மருதம் என்ற சொல் மருவுதல் என்ற சொல்லுடன் மிகுந்த  தொடர்புடைய சொல்.

இதன் அடிச்சொல் மரு என்பது.

மரு >  மருவு >  மருவுதல்  ( வினைச்சொல்).  தல் - தொழிற்பெயர் விகுதி.

மரு >  மருது:    உலகம் மருவுதற்குரிய ஒன்று,  அல்லது மருதமகன்.

மரு > மருது >  மருதம்   ( அதாவது மரு + து + அம் = மருதம் ).   மருதநிலம் .  பயிர்செய்யும் நிலம்.  உலகத்துயிர்கள் உணவுக்காக மருவி -  தழுவிச் செல்லும் நிலம்.  மற்ற நிலங்கள் இதனையே  மருவி நிற்கும் பெருமையுடைய நிலம்.

பிறர் தொழுதுண்டு செல்லும் பெருமையுடைய நிலம்.

மரு என்னும் சொல் மார் என்று திரியும்.

கரு என்ற சொல் கார் என்று திரிவது போலுமே இது.

மரு > மார் > மார்+ அன் > மாரன்.  காதலியரால் தழுவப்படும் ஈர்ப்பு உடையவன்.

குறு என்ற சிறுமை குறிக்கும் சொல் தன் இறுதி எழுத்தை இழந்து கு என்று நிற்கும்.  அப்போது அது குறுக்கம் குறிக்கும். 

கு+  மரு + அன் >  குமரன்.  இளமை உடையோன்,  அகவை ஆகாதவன்.

கு + மரு >  கு + மார் >   குமார்.  இளையவர்.

இவ்வாறு சொற்கள் பல வுளவாதலின்,  அவற்றைப் பின்பு நோக்குவோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

  

கருத்துகள் இல்லை: