வியாழன், 12 ஆகஸ்ட், 2021

நம்மை ஏமாற்றிய கோவிட் கிருமி...

கொட்டிக் கிடக்கும் மகரந்தத்து

மொட்டவிழ்ந்த ஒரு கவின்பூ

தேன் தரவே  நானென்றது...

குடிக்க முந்திய நொடியொன்றுக்குள்,

கோடுவாய்  மூடிக்கொண்டது ,

கொள்ளிபோல் எரிய முள்ளே குத்திற்று,...

ஞாயமில்  லாத நோய்நுண்மிக் கோவிட்டே!

நீயும் தான்  அதுபோல்!. ஓயாக் கொடுமுடியாய்,

வெற்றி  வாயிலைச் சுற்றி மூடிவிட்டாய்.

விடுதலைத் தேன் தேறாக் 

கெடுதலைச் செய்தாய்.

ஏமாற்றிவிட்டாய் எங்களை நீ,

ஆம் மாற்றி விட்டாய்  எங்கள் திசையே.


ஒரு பூவுக்குள் புகுந்து தேன் குடிக்க விருக்கும் நேரத்தில் திடீரென்று

பூவிதழ் மூடிக்கொண்டது...மிகுந்த இன்னல் எல்லாம் கடந்து நோயைக் 

கட்டுப்படுத்தி வெற்றித்தேனைப்  பருகுவோமென்றால் அதற்குள்

கதவுகள் மூடிக்கொண்டன.  என்ன வேற்றுமை?  கொவிட் நம்மை

ஏமாற்றிய கதையைக் கூறுவது இந்தப் பாடல்.


அருஞ்சொற்கள்

மகரந்தம் -  பூந்துகள்

கவின் -  அழகிய

கோடு வாய் -  வளைந்த வாய்

கொள்ளி -  தீ

நோய் நுண்மி -  நோய்க் கிருமி

ஓயாத -   நிறுத்தாத

கொடு முடி  -  வளைந்த  மகுடம். கொடிய மகுடம் தரித்திருத்தல்.

நுண்மி மகுட அல்லது முடியின் வடிவிலிருத்தலைக் குறித்தது

தேறா  -   வலிமை அடையாத  ("   உருப்படாத " )


மெய்ப்பு பின்பு




கருத்துகள் இல்லை: