ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

அந்தி, மந்தி, அந்தம் , அன்று முதலிய

 அனந்த என்பது ஒரு சொல்.  ஆனந்த என்பது இன்னொரு சொல். இவற்றின் ஒலிக்கிடையே உள்ள முன்மையான வேறுபாடு  அகரமும் ஆகரமும் ஆகும், அதாவது ஒன்று குறில் தொடக்கமானது, மற்றொன்று நெடில் தொடக்கம் ஆகும். இசைப்பாடல்களில் பாடகர் வேண்டியாங்கு வேண்டியபடி வேறுபடுத்தாமலும் ஒலித்துக்கொள்வதால்,  இரண்டும் ஒரு மாதிரி செவிக்குக் கேட்கலாம், என்றாலும் நாம் கவனமாகவே பொருள்கொள்ளவேண்டும்.

இரண்டும் தமிழிலிருந்து திரிந்த சொற்கள்.  தமிழிலும் வழங்குவன ஆகும். ஆனந்த என்ற சொல்லை இங்கு அலசவில்லை.

அனந்த:

அன் + அந்த.   அன் என்பது இங்கு அல்  ( அல்லாதது) என்பதைப் பொருளாகக் கொண்டது.  அல் - அன் என்பது லகர 0னகரப் போலி.   (ஒரு மாதிரியாக இருப்பவை ).  இதை உணர்ந்து கொள்வது எளிதே.

அடுத்திருக்கும் சொல்  அந்த (இங்கு நாம் இந்த அந்த என்ற சுட்டுச்சொல்லைக் குறிக்கவில்லை ).  அந்த என்ற எச்சச்சொல்லைக் குறிக்கிறோம்.)  என்பது. இதன் முழுமை அந்தம் ,  இது முடிவு என்று பொருள்படும்.  ஆதி அந்தமில்லாதவர் கடவுள் என்பார்கள்.  முடிவு மில்லை, தொடக்கமும் இல்லை என்பது இதன் பொருள். இதை உணர்ந்து கொள்ள முதலில் அன்று என்ற தமிழ்ச்சொல்லை அறியவேண்டும்.

அன்று, அந்தம்

இன்று, அன்று என்பவை நாட்களைக் குறிப்பவை.  அன்று என்பது முடிந்த நாளைக் குறிக்கிறது.  இதை அன் + து என்று பிரிக்கவேண்டும்,  பிரித்தால்,  அல்லாதது,  என்ற பொருள் கிட்டும். அதாவது இன்று அல்லாத நாள். அப்படி என்றால் நேற்று, அதற்கு முன்னே என்று பொருள் கிடைக்கும். ( மலையாளத்தில் "இன்னல" என்பது போல் ).   இன்று தான் இருக்கும் நாள்.  நேற்று,  அதற்கு முன் என்பவெல்லாம் முடிந்து போனவை. இதை உணரவே  அன்று என்பதும் ஒரு முடிவையே குறிக்கிறது என்பது தெரியும்.  அன்று என்பதில் அம் விகுதி இல்லை. இருந்தால் அது அன்றம் என்று வந்து, அந்தம் என்பதனுடன் ஒலியணுக்கம் உண்டாகிவிடுமென்பதைக் காணலாம்.  ஆனால் அன்றம் என்ற சொல் மொழியில் அமையவில்லை.  அன்று மட்டுமே உள்ளது,  ஒப்புமை உணர, அதுவே போதுமானது ஆகும்.  வேண்டுமானால் அன்றம் என்ற புனைவையும் வைத்துக்கொண்டு அறிய முற்படலாம்.

என்ன வேறுபாடு

அன்று என்பது அன் து என்பதுதான்.  அது "அன்று" என்று வந்தது புணர்ச்சித் திரிபு. There is no substantial difference.  அடிப்படை வேறுபாடு ஒன்றுமில்லை.  இவ்வாறு புணர்ச்சித் திரிபு ஏற்படாமலே முந்தி, பிந்தி என்ற சொற்கள் உள்ளன.  முன் தி > முந்தி;  பின் தி >பிந்தி.  முன்றி, பின்றி என்று வரவில்லை. ஒப்புப்பேறுக்காக முன்றி பின்றி என்பவற்றை வைத்துக்கொள்ளலாம், ஆயினும் அது அவ்வளவாகப் பயன்படாது. அதிலிருந்து புதிய கருத்தமைவுகள் கிட்டமாட்டா.

அன் து என்பது முடிதலையே குறித்து நிற்பதால், அன் து அம் > அந்தம் என்பது முடிவு என்றே குறித்து நிற்பதை உணரலாம்.  

இதற்கு முடிபு:  அந்தம் என்று உருக்கொண்டு, முடிவு என்ற பொருள்பெற்ற இச்சொல்,  புணர்ச்சித் திரிபு கொள்ளாமையினாலேதான் அன்று ( அல்லது நாம் புனைந்த அன்றம் ) என்பதனுடன் வேறுபாடு அடைகிறது.

ஒப்பீடுகள்

அந்தி என்ற சொல் நாளின் முடிவைக் குறிப்பதுடன் தமிழிலும் நல்ல வழக்கு உடையது.  அது அன் + தி > அன்றி என்று வந்திடவில்லை.  ஆனால் பல் (தந்தம்) உடையது என்று பொருள்தரும் பன்றி என்ற விலங்கின்  பெயர், பந்தி என்று வரவில்லை.  பந்தி என்பது பலர் அமர்ந்து உண்ணும் நிலையைக் குறிக்கிறது. அல்லது உணவருந்துகையில் வரிசைகள் பலவாக இருந்துண்ணுதலைக் குறிக்கவும் செய்யலாம்.

ஆகவே,  பல் என்ற வாயுறுப்பை குறிக்கும் போது பல் தி> பன்றி என்று விலங்குப் பெயராகவும்,  உணவு ஏற்பாட்டைக் குறிக்கும்போது  பல் + தி > பந்தி என்று பன்றி என்பதில்போல் புணர்ச்சித் திரிபு இன்றியும் வருதலை அறியலாம். புணர்ச்சிமுறைகளை நோக்கிடுங்கால், ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்ததுபோல் இச்சொற்களைப் படைத்திருக்கிறார்கள். 

இவ்வாறு சொல்லமைப்புப் புணர்ச்சிகளெல்லாம் ஒரு திட்டத்தில் தான் வரவேண்டும் என்ற உறுதிநிலை கடைப்பிடிக்காதது, அதிக சொற்களை உண்டாக்கிக் கொள்ள உதவியுள்ளதைக் காணலாம்.  மன் > மான் என்ற மனிதற் குறிச் சொற்களை எடுத்துக்கொண்டாலும் இது விளங்கும்.  மன் < மன் இது அன் > மனிதன்;  மன் + தி என்பது மந்தி என்றே வந்தது; மன்றி என்று வரவில்லை. மந்தி சிந்து கனிகளுக்கு வான் கபிகள் கெஞ்சும் என்பது பாடல் வரி.

முடிவுரை

இவ்வாறு, அந்தி என்பது தமிழொலி உடையதும் தமிழ்ச்சொல்லுமாகும்.  அந்தம் என்பதும்  அஃதே.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்னர்.

கருத்துகள் இல்லை: