வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

சுவாரசியம் - பொருள்.

 இன்று சுவாரசியம்  அல்லது சுவாரஸ்யம் என்ற சொல்லை அறிந்துகொள்வோம்.

சுவை எனற்பாலது தமிழ்ச்சொல்லே.  சுவாரஸ்யம் என்பதில் சுவா என்பது சுவை என்பதன் திரிபு. இதிற் பெருந்திரிபு ஒன்றுமில்லை.  சுவை (ஐ) இறுதியை  (ஆ) என்று மாற்றியுள்ளனர்.  ஐ என்பதும் ஆ என்பதும் தமிழில் உள்ள விகுதிகள்தாம்.  மலை என்பதில் ஐ இறுதி வந்துள்ளது.   உலா என்பதில் ஆ இறுதி வந்துள்ளது. ஆகவே தமிழ் விகுதியையே பயன்படுத்தி,  ஐ ( சுவை ) என்பது  ஆ ( சுவா) என்று மாற்றியுள்ளனர்.

யார் மாற்றினர் எனின் மக்கள் நாளடைவில் வேண்டியவாறு ஒலித்து மாற்றினர்.  இன்னோர் எ-டு:  உயர்த்தி/ உயர்ச்சி > ஒஸ்தி.

ரஸ்யம் என்பது ரசியம் என்பதுதான்.  அதாவது ஒன்றை ரசித்தல். தமிழில் ரகர முதலாகச் சொற்கள் வருவதில்லை  ஆனாலும்,  பல தமிழ்ச்சொற்கள் தம் தலை இழந்தபின் ரகர வருக்கத் தொடக்கமாகத் தோன்றியுள்ளன.  எடுத்துக்காட்டு:  அரங்கன் > ரங்கன்.  அரங்கு என்பது மேடை.   நாம் சாய்ந்து கும்பிடும் சாமிகளெல்லாம் மேடைகளில் வைத்தே போற்றப்படுபவை. ( சாய்+ ம் + இ >  சாய்மி > சாமி> ஸ்வாமி  ) மேடை - மேடு+ ஐ:  மேடான இடம்.    அதில் வைத்து அல்லது அரங்குபோன்ற உயர்விடத்தில் வைத்துப் போற்றப்படுவோன். எனவே ரசி என்பது தலையிழந்த சொல்லா என்பதை அறியவேண்டும்.  ரசம் என்பது வேகவைத்த சாறு என்று பொருள்படும்.  ரசம் என்பதும் ரகரத் தொடக்கமுள்ள சொல் ஆதலின், அதற்குத் தலை எங்கேயும் உண்டா என்று அறிவது நம் கடனாகிறது.

முற்காலத்தில்,  ரகர. டகரம்  முதலிய எழுத்துத் தொடக்கமாகச் சொற்கள் இருக்கக்கூடாது என்று தொல்காப்பிய முனி  ( என்ற பிராமணர்!)  சூத்திரம் செய்தார்.  ஏன் இருக்கக்கூடாது,  காரணம் மொழியியலில் எதுவும் இல்லை. That was his own idiosyncrasy.  ரகரம் லகரம் முதலியவை எழுதும்போது ஓலைகள் அதிகம் கிழிந்துபோயினவா, தெரியவில்லை.  ஒரு செய்ம்முறைப்பயிற்சி மேற்கொண்டு இதை நிறுவ முயற்சி  செய்யலாம்.

பண்டைக் காலத்தில் பல மருந்துச் சரக்குகளை ஏற்றவாறு வைத்து அரைத்து அதிலிருந்து சாறு  எடுத்தனர்.  எடுத்ததை கொதிக்கவைத்ததன்பின் குடித்தனர். அவ்வாறின்றி கொதிக்கவைக்காமலும்  சாறு வரச்செய்து குடித்தனர்.

அரைத்தல் - வினைச்சொல்  (.  அர : ஒலி.  அரை:  பொடித்துச் சிறிதாக்கல் )

அரை>  அரைசு >  அரைசம் > ரசம் ஆனது. ( இது அரசு என்ற சொல்லின் அமைப்புச் சுவடுகளோடு ஒன்றித்துச் செல்வது .  இதனினும்:  )

அரை > அரையம் > அரயம் > அரசம் > ரசம் ( எனினுமாம்.)

இகர வினையாக்க விகுதி இணைத்து.  ரசம்  என்பதும் ரசித்தல் ஆனது  ரசி என்பதில் அம் சேர்த்தால் ரசியம் > ரஸ்யம் ஆகிவிடும்.

சுவாரஸ்யம் என்பது சுவைத்து மகிழும் ரசம் என்ற அமைப்பைக் குறித்தது. நாளடைவில் எதையும் அரைத்தாலும் அரைக்காவிட்டாலும் சுவையான கொதிக்கவைத்து ஆக்கியதைக் குறித்தது.

தமிழ்மூலங்களை எடுத்து இவ்வாறு புதிய புனைவுகளை விடுத்தலென்பது நீண்டகாலம் நடந்த ஒரு முயற்சி ஆகும்.  இது திடீரென்று நடைபெற்ற முயற்சி என்று கூற ஆதாரமில்லை. சங்ககாலம் உட்படப் பல காலங்களிலும் நடைபெற்றிருக்கலாம் எனினும் எப்போது இது கூரிய செயலாய் நடைபெற்றது என்று அறிதலில் சில இடர்ப்பாடுகள் உள்ளன. ஆரியர்கள் என்பது ஒரு புனைவு ஆதலின், அதை அவர்கள் செய்தார்கள் என்பதும் புனைவுதான். எல்லா நாடுகளிலும் நடைபெறுவதுபோல, வெளிநாட்டவர்கள் குடியேற்றம் நடைபெற்றது என்பதை நம்பலாம் எனினும் அவர்களுக்கு ஆரியர் என்ற பெயரை ஏன் கொடுத்தல் வேண்டும் என்பதற்குக் காரணம் எதுவும் இல்லை.  ஆரியர் என்பது ஆர் விகுதி பெற்ற பெயருடைய அறிவாளிகள், புலவர்கள் இவர்களைக் குறிப்பதாகும். எடுத்துக்காட்டு:  மருதனிளநாகனார்,  சீத்தலைச் சாத்தனார், முடமோசியார் , இவர்கள் சங்கப் புலவர்கள். இவர்கள்  ஆர் உயர்வு பெற்ற அறிவாளிகள் ஆதலின், இவர்கள் தாம் ஆரியர்கள், அவர்கள் பெயர்கள் யாவும் புலமையினாலும் கல்வியினாலும் ஏற்பட்ட  உயர்வினைக் குறிக்கிறது.  ஆர் விகுதி பெற்றுள்ளன.  நண்ணிலக் கிழக்கு (  மத்தியக் கிழக்கு), ஐரோப்பா என்ற இடங்களிலிருந்து வந்தவர்கள்தாம் ஆர் விகுதிக்குரிய அறிவாளிகள் என்றால், உள்நாட்டின் உள்ள உயர்ந்தோரெல்லாம் மடையர்களா? பிழைப்பைத் தேடி வந்த வெளிநாட்டான் என்ன ஆரியன்?  இப்படிப்பட்ட முட்டாள்தனமான தெரிவியல்களை (theories)  குப்பையிலிட வேண்டும்.  மேலும் இனவாரியாக அவர்கள் எல்லாம் ஓரினத்தவர் அல்லர்.  சங்கப் புலவர் போன்றோரே ஆர் விகுதி பெற்ற ஆரியர்.  அவர்கள்தாம் வேதங்கள் முதலியவற்றை இயற்றினர் என்பதும் புளுகுதான். எல்லா நாட்டிலும் பழங்கதைகள் உள்ளன. அவை யாராலும் தயாரிக்கப்பட்டிருக்கலாம். ஒன்றிரண்டு வெளிநாட்டினர் இருந்திருக்கலாம். எல்லிஸ் ஆர் டங்கன் தமிழ்ப்படம் தயாரித்ததுபோல.  மக்கள் அவற்றை ச் சுவைக்கவும் அதனால் ஒரு வணிகம் நடைபெறவும் இவை உதவியிருக்கலாம்.  இவற்றால் எல்லோரும் முட்டாள்களாகிவிட மாட்டார்கள். தெரிவியலே முட்டாள்தனமாக இருக்கிறதே!

சுவாரசியம் என்ற சொல் ஆர் விகுதிபெற்ற அறிவாளிகளால் உண்டான சொல்லாகத் தெரியவில்லை. இது மக்களிடைச் சிலர் திரித்து வழங்கியமையால் வந்த சொல்.  சீனி என்பதை  ஜீனி என்பதும் உயர்த்தி என்பதை ஒஸ்தி என்பதும் சிலர் அவ்வாறு ஒலித்தமையால் ஏற்பட்ட சொற்கள்.

வேகமாய் என்பதை பேகனே என்றும் வாராய் என்பதை பாரோ என்றும் சொல்லலாம்.  ஆறு மலை விரிந்த நிலவெளிகள் முதலிய தொலைவிருப்புகளால் விளைந்தவை இவை. இவற்றை ஒருமுகப்படுத்த அன்று வானொலியோ தொலைக்காட்சியோ இல்லை.  இவைதாம் காரணம். எல்லா நாட்டு மொழிகளிலும் இவ்வாறான வேறுபாடுகள் உள்ளன.  ஆரியன் எவனும் உண்டாக்க முடியாதவை இவை. சொந்தமாகச் சோறாக்கிச் சாப்பிடவே பெரிய முயற்சிகள் தேவையாயிருக்கும்போது எவன் போய் இந்த ஒலிப்புகளையெல்லாம் புகுத்திக்கொண்டிருந்திருப்பான். 


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

.



கருத்துகள் இல்லை: