செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

பற்றும் பக்தியும்.

 பற்றுக பற்றற்றார் பற்றினை என்ற குறளை நாம் செவிமடுக்குங்கால், பக்தி என்ற சொல் நம் மண்டைக்குள் அந்நேரத்தில் புகுவதில்லை. இரண்டும் ஒரே சொல்லின் வெவ்வேறு வடிவங்கள் என்று நாம் பெரும்பாலும் உணர்வதில்லை. குளிர்நீர்க் கட்டிகள் இட்டு எலுமிச்சைப் பழச்சாறு அருந்தும்போது,  குளத்து நீர் நம் நினைவுக்கு வராததுபோலத்தான் இது.  இரண்டும் ( குளிர்நீர்க்கட்டியும் குளத்து நீரும் ) எல்லாம் தண்ணீரின் வடிவங்கள் தாம். பக்தி என்ற சொல், பற்று என்பது பயணித்துச் சென்று அடைந்த வடிவவேற்றுமையை உடையதாய் இலகுவது என்பதை உணரக் கொஞ்சம் முயற்சி தேவைப்படுகிறது.

பற்று என்பது பல்+து என்ற சொற்பகுதியும் விகுதியும் இணைந்த சொல்லாகும். பற்றுதல், பற்றிக்கொள்தல்  என்ற வினைகள் இச்சொல்லிலிருந்துதான் தோன்றின. இதன் மூலச்சொல் புல்லுதல் என்பது.  புல்லுதல் என்றால் பொருந்துதல்.  நல்வினைப் பயனால்,  இந்த முந்துவடிவங்கள் இன்னும் இழக்கப்படாது தமிழில் இன்றுகாறும் இலங்குகின்றன.

பற்று என்ற சொல், இகர விகுதி பெற்றுப் பற்றி >பத்தி என்றானது.   பத்தி என்பது நூற்புகவு பெற்றுள்ளது என்ற போதிலும் பற்றி என்பது தொழிற்பெயராய் எங்கும் காணப்படாமைக்குக் காரணம்,  பற்று என்பது நன்கு ஊன்றி வழக்குப் பெற்றுவிட்டமைதான். பத்தி என்பது ஒரு காலத்தில் பேச்சு வழக்கில் இருந்து மறைந்தது என்று தெரிகிறது.  இன்று யாரும் பத்தி என்றால் அது ஊதுபத்தியைக் குறிப்பதற்காக இருக்கும்.  பத்தி என்பது திருமுறைகளில் வந்துள்ளது.  அது பற்றி அல்லது பற்று என்பதன் பேச்சு வடிவத்திலிருந்து போந்ததே என்பது விளக்கவேண்டாதது ஆகும்.  சிற்றப்பன் என்று சொல்லாமல் சித்தப்பா என்றுதான் சொல்கிறார்கள். அதுபோல் பத்தி என்றுதான் ஒருகாலத்தில் சொல்லியிருப்பர். பற்று அல்லது பற்றி என்பது எழுத்து வடிவம் என்பது தெளிவு.

பத்தி என்பது பக்தி என்று மிடுக்கு வடிவத்தை அடைந்து இன்றும் வழக்குப் பெற்றுள்ளது.  இது ஒருவேளை வட இந்திய மொழிகளின் தாக்கமாகவே இருக்கவேண்டும்.  தமிழிலும் அது நல்ல வழக்குப் பெற்றுள்ளது. முதிர்ந்த உணர்வுநிலை முக்தி எனபது நீங்கள் அறிந்ததே.  அதுவும் இறையன்பில் முதிர்நிலையைக் குறிக்கிறது.  ஓர் அரசன் இறையன்பு முதிர்நிலை கொண்டதை  " ராஜமுக்தி" என்ற பெயரில் எம்.கே. தியாகராச பாகவதர் திரைப்படமாகத் தயாரித்திருந்தார்.  வட இந்திய ஆடை அணிந்திருந்தாலும் தமிழன் தமிழ்னே.

பற்று > பற்றியே இக்காலத்தில் பக்தி ஆகியுள்ளது.  மூலமொழி தமிழே ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

கருத்துகள் இல்லை: