தேவன், தேவி என்ற சொற்கள் பலபொருட் சொற்கள். தேவன் கடவுளையும் குறிக்கும். தேவி என்பதும் கடவுளைப் பெண்ணாகக் கொண்டு குறிக்கும். தேவன் தேவி என்பன மனிதருள் அரச பதவி உடையோரையும் குறிக்கும். இவையல்லாமல், இயற்பெயர்களாகவும் வரும். ஒரு குழுவாரிடைப் பட்டப்பெயராகவும் வரும். இச்சொல் தன் அன் விகுதியை இழந்து தேவ் என்று மட்டும் வழங்கும். தமிழ் ஆய்வாளர்கள், தேய் என்பதே இச்சொற்களுக்கு அடிச்சொல் என்று முன்னர் விளக்கியிருக்கிறார்கள். பிசைந்த மாவை மீண்டும் பிசையத் தேவையில்லை என்பதுபோல், இவை தமிழிற் போந்த சொற்களென்பதை முன் ஆய்வுகளே விளக்குவதால், நாம் அவற்றை மீண்டும் செய்வது பகர்ப்புச்செய்தலாக ( காப்பி ) இருக்கலாமே அன்றி அது புது ஆய்வாக இருக்க இயலாது.
தெய்வம் என்ற சொல்லிருப்பதால் தெய்வன் என்ற வடிவமும் அமையும் தரத்தது என்று நாம் முடிக்கலாம் எனினும், தெய்வன் என்ற சொல்லை அகரவரிசைகளில் காணமுடியவில்லை. தெய்வி என்ற சொல்லையும் நாம் காண்பதற்கில்லை என்று தோன்றுகிறது.
இப்போது இவை தொடர்பான சில திரிபுகளை நோக்குவோம்.
செய்தி என்ற சொல். சேதி என்று திரிகிறது. இரு நண்பர்கள் முன்னர் சந்தித்துக்கொண்டால், என்ன சேதி, நலமா என்று கேட்டுக்கொள்வதில் சேதி என்ற சொல் வந்துவிடுகிறது. ஆங்கிலப் படிப்பு மிகுந்துவிட்ட இக்காலையில் இதை அவர்கள் தமிழில் சொல்லப்போவதில்லை. ஆகையால் சேதி என்ற சொல்லினாட்சி குறுகிவிட்டிருக்கும். இருப்பினும் இன்னும் இது வழக்கில் உள்ளது.
செய்தி என்பது சேதி என்று திரிவதால், செய்> சே விதியின்படி, தெய்வி என்பது தேவி என்று திரியவேண்டுமே!
தேய் > தேய்வு > (தெய்வு) > (தெய்வி )
இவற்றுள் பின்னை இரண்டும் மொழியின் சொற்றொகுதியில் எம்மால் காணப்படவில்லை. எல்லாச் சொற்களையும் நாம் அகரவரிசையில் எழுதி வைத்துக்கொள்வதில் வெற்றி பெற்றுவிட வில்லை. சில அகப்படாமல் ஒழிந்தன. வேடன் எல்லா முயல்களையும் கண்டுவிட முடிவதில்லை. சில ஒளிந்துகொண்டுவிடுகின்றன. இருப்பினும் முயல் வாழும் குழித்தோடு காணப்படுவதால், அவை ஓடிவிட்டன என்று கணக்கிட்டுக்கொள்ள வேண்டியதுதான். ஆகவே மீட்டுருவாக்கம் செய்வதில் தவறில்லை. அவை மீட்டுருவாக்கங்கள் ஆகும்.
செய்தி என்பது சேதி என்று திரிவதால், தெய்வி என்பதும் தேவி என்று திரிதல் ஏற்புடைத் திரிபுதான். இதேபோல் தெய்வன் என்ற மீட்பு வடிவமும் தேவன் என்றாகும்.
இவ்வாறு திரிந்த இன்னொரு சொல்: பெய்தல், பெய்தி > பேதி என்பதாகும். நீராய் மலக்கழிவு. பெய் என்பது நீரானதைக் குறிக்கிறது.
இனி தேய்வு என்பதைத் தெய்வு என்று மீட்காமல், தேய்வு > தேவு என்று இடைக்குறை வடிவாகக் காணலாம். தேவு என்ற வடிவம் இருக்கின்றது; அது பாட்டிலும் வந்துள்ளது.
செந்தமிழ்மணி நாட்டிடை உள்ளீர் -
சேர்ந்து இத்தேவை வணங்குவம் வாரீர்
என்று பாரதியார் பாடுகிறார்.
தெப்பக் குளமும் கண்டேன் - சுற்றித்
தேரோடும் வீதி கண்டேன்,
தேவாதி தேவனை--- எங்கும்
தேடியும் கண்டிலேனே
என்பது கவிமணி தேசிகவிநாயகனாரின் பாடல்.
இவ்வடிவங்களை, தேய்வு > தேவு, தேவு > தேவி என்று காணுதல் மற்றொரு வழியாகும்.
இப்படி இரண்டாவதொரு வழியிலும் இதனைக் காட்டலாம் என்பதை முன்வைக்காமல் இதை முடித்திருக்கலாம். சில வேளைகளில் ஒன்று மட்டுமே கூறிப் பிற கூறாதும் விடுக்கலாம். ஆயின் அதை நீங்கள் ஊகித்துக்கொள்ளலாம்.
இவ்வாறு இடைக்குறையான நல்ல சொற்கள் பல. சுற்றிலும் அடுத்த நிலத்தொடர்பு நீங்கிவிட்ட ஒரு நிலத்துண்டினை, தீவு என்கிறோம். தீர்வு> தீவு ஆனது: நிலத்தொடர்பு தீர்ந்த ஒரு நிலத்துண்டு என்று பொருள். இதை dheevu என்று எடுத்தொலிக்காமல் தீவு என்றே ஒலித்துத் தமிழாதல் காண்க. இப்படி எடுத்தொலித்தால், தேன் என்பது ஜேனு என்றன்றோ பிறமொழியில் வருகிறது. ஆயின் தேன் தமிழில்லையோ? உயர்ச்சி, உயர்த்தி என்பது ஒஸ்தி என்று வந்தால் தமிழன்று என்று ஆகிவிடுமோ? இந்த வேற்றொலிகளெல்லாம் மூஞ்சியில் மாவு பூசுவதைப் போன்றது. கழுவிக் கருத்துடன் காண்க.
இதைப்பற்றி மேலும் அறிய:
தேவன், துரை :
https://sivamaalaa.blogspot.com/2020/11/god.html
தீயைப் பற்றி https://sivamaalaa.blogspot.com/2017/03/blog-post_5.html
தெய்விகம், தெய்வீகம்.
தெய்விகம் என்பதே சரி என்று கூறுவதுண்டு. ஆயினும் தெய்வீகம் என்பதும் எழுத்தில் வந்துள்ளது.
தெய்விகத்தைத் தேவகம் என்றும் எழுதியுள்ளனர். ஆனால் இந்த வடிவம் இப்போது பயன்பாடு குன்றிவிட்டது.
தெய்விகம் என்பதற்கு மூர்த்திகரம் என்றும் ஓர் ஒப்புமைச்சொல் உள்ளது. தெய்விகமான இடம் என்னாமல் மூர்த்திகரமான இடமென்றும் கூறலாம். மூர்த்தி என்பதில் தி விகுதி. முகிழ் என்பதே மூர் என்று திரிந்துள்ளது. முகிழ்த்தலாவது தோன்றுதல். தோன்றும் கடவுள் வடிவம் மூர்த்தி. முகிழ்> மூர். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது நாம் அடிக்கடி கேள்விப்படும் வாக்கியம். இதில் கீர்த்தி என்பது சீர்த்தி என்பதன் திரிபு. ச- க போலி.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக