ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

திருவும் திருப்தியும் திரட்சியும்,

முன்னுரை:

 திருவென்பது தமிழில் உயர்வு என்று பொருள்தரும் சொல். ஆனால் இந்த உயர்வு என்னும் தன்மை அச்சொல்லுக்கு வந்ததற்குக் காரணம், நல்லது திரண்டுவருதல்தான். திருவென்பது ஓர் உருவற்ற, மனத்தால்மட்டும் அறியத்தக்க பண்பினைக் குறிக்கின்றது. ஆயின் திரட்சி என்பது உருவுள்ள ஒரு பொருள் தன்போல் உருவுள்ள பிறவற்றுடன் ஒன்று சேர்ந்து காட்சிதருதலையும் உற்றுணரத் தருதலையும் குறிக்கின்றது. எடுத்துக்காட்டு :  பாலில் நெய் திரளுதல்.  அல்லது மண்ணிற் பொன் திரளுதல்.  இவ்வாறு கண்ணுக்கு வெளிப்படையாகத் தெரியாமல் இருந்தது முயற்சியால் திரட்சியாவதிலிருந்தே திருவில் உயர்வுக் கருத்துத் தோன்றியது.  திரட்சி என்பது அரும்பொருள் திரளுதல். பின் திருவென்பது அதற்கு உண்டான மதிப்பீடு ஆகும். இவற்றுக்கு அடிச்சொல் "திர்" என்பதே.  உண்மையில் திர் என்பதில் உகரம் சேர்ந்து திரு என்றானது சாரியை என்றே கூறவேண்டும். என்றாலும் அது அடியிலிருந்து ஒரு சொல்லுருவைத் தருவதால் அதை ஒரு விகுதி எனல் தக்கதாம்.

ஈறு,  விகுதிகள்:

திர் >  திரள் > திரள்தல். அல்லது திரளுதல். இங்கு ள் என்பதில் வரும் உகரம் (  ள் >ளு)  சாரியை ஆகும்.  திரள்+ சி = திரட்சி.

திர் > திர்+ உ > திரு.

ஒன்று மற்றொன்றாவதைத் திரிதல் என்பர்.

திர் > திரி  ( திர் + இ).

பெரும்பாலும்   அள் ( திரள் ),  திரு ( உ)  மற்றும் திரி ( இ ) என்பனவற்றை நாம் விகுதியாக உணர்வதில்லை. இதற்குக் காரணம் திர் என்பது ஒரு வேர்  ஆகும். அடிச்சொல்லிலும் முந்தியதை வேர் என்று சொல்லவேண்டும், சொன்னால் வேறுபடுத்த எளிதாகவிருக்கும்.

வினையாக்கம்:

அள் என்பது வினையாக்க விகுதி.   வினையாக்கத்திற்கு உதவும் விகுதிகளை முன்பு பழைய இடுகைகளில் விளக்கியுள்ளோம்.  இப்போது இனியும் ஓர் உதாரணம் தருவோம்.  வறு என்ற அடியுடன் அள் சேர்ந்து வறள் ஆவதும், இவ்வேவல் வினை பின்னர் ~தல் விகுதி பெற்று வறள்தல் ஆவதும் காணலாம்.  வறு>  வறுத்தல் என்று வறு வினைப்பகுதியாக ஈண்டு வந்தது. வறட்சியே அடிக்கருத்தாயினும்,  வறள்தல் (வரளுதல்) என்பது நீரின்மைகொள்ளுதலைக் குறித்து பொருள் வேறுபட்டதையும் அறிக.

உருவிலதாய மதிப்பீடு

எந்த ஒன்றிலும் அதனால் மனமகிழ்வு தோன்றுமாயின், அது திருவினை வரப்பெற்றது எனலாம். அம் மனமகிழ்வே மதிப்பீடு  ஆகும். திருவென்பதே ஒரு ஸகர ஒற்று முன் தோன்றி,  ஸ்திரு> ஸ்திரி  > ஸ்ரீ  ஆனது. முன் இல்லாதது புதிதாக வருமாயின் அது தோன்றல். ஒன்று பிறவொன்றாகுமாயின் அது திரிதல்.  ஸ்திரி என்ற பெண்ணைக் குறிக்கும் சொல்லும்  ஒரு தோன்றலும் பிறிது திரிதலும் உண்டான சொல்லாகும்.  ஸ் + திரு + இ என்று பிரித்துக் காட்டி இகரம் ஒரு விகுதி எனினும் இன்னும் தெளிவாகும்.  திருவென்பதன் ஈற்று உகரம் கெட்டு ஓர் இகரம் ஏறிற்று.  ஆகவே ஸ்திரீ என்னும் பெண் குறிக்கும் சொல்லில் பெண்ணின் உயர்வு  ஓர் உட்பொதிவு எனல் தக்கதாம்.

இவ்வுயர்வினைத் தமிழால் விளக்கினால் மட்டுமே அறியத் தருமென உணர்க.

மனமகிழ்வு என்பது நிறைவினால் உண்டாகும். எனவே ,மனநிறைவு திரு என்ற சொல்லிலே அமைந்தது அது உயர்வானது என்பதை நமக்குக் காட்டும். இச்சொல் முன்னர் திருத்தி என்றே இருந்தது சொல்லின் தெரிகிறது.  ஆயினும் திருத்தி எனல்,  ஓர்  எச்சவினை போலிருப்பதால் அதைத் திருப்தி என்று மாற்றியுள்ளமை அறியத்தகும்.

முடிவுரை

இந்தத் திருப்திச் சொல் சங்கததிலும் சென்றேறியுள்ளது.  அங்கும் இதே பொருளைத் தருகிறது.  இதுவேயன்றி, சங்கதத்துக்கு மனநிறைவு குறிக்கும் வேறு சொற்களும் உள்ளன.  பாலில் நெய்போல மனவுணர்வும் திரளும் தன்மை உடையது என்பதில் மாற்றுக் கருத்து இலது.  ஆயினும் உருவின்மையால் இத்திரட்சி மனத்தால்மட்டும் அறியத்தக்கது ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர் 

கருத்துகள் இல்லை: