ஒற்று என்பது புள்ளி வைத்த எழுத்து. எடுத்துக்காட்டு: ( ச் ) ( ம் ) என்பன. ஓர் எழுத்து "கி" ஆவது என்றால், அது க் + இ என்ற இரண்டும் சேர்ந்திருக்க வேண்டும். இதை அறிந்தவரிடம் கு + இ என்பது கி ஆகிவிடும் என்றால் முன்னரே அவர் அறிந்துவைத்துள்ளதற்கு அது முரண்படுவதால், அவர் குதித்தெழுந்து கத்தவில்லை என்றால், செவிடரோ இவர் என்ற ஐயப்பாடு உங்களுக்கும் எழ வேண்டுமே!
சிலரைக் கத்தவிட்டுச் சில வேளைகளில் நாம் அதில் நுகர்ச்சி ( அனுபவித்தல் ) அடைந்து மகிழலாம். அவர் கத்தலால் கேட்பவர்க்குக் குத்தல் எதுவும் ஏற்படப் போவதில்லை.
இப்போது இதைப் பாருங்கள்.
வருதல் என்பதில் வரு என்பதே வினைப்பகுதி அல்லது ஏவல் வினை. ஆனால் வருகிறான் என்ற ( இலக்கணப்படி அமைந்த சொல்லில் ) :
வரு + கிறு + ஆன் என்பதுதான் உள்ளுறைவுகள் ஆகும்.
ஆனால் கிறு என்ற சொல்துண்டு எங்கிருந்து வந்தது? ஏனைத் தமிழின மொழிகளில் இதைக் காணமுடியவில்லையே!
வருகின்றான் என்பதை எடுத்துக்கொண்டாலும் கின்று எங்கிருந்து வந்தது?
புலவர்கள் சிலர் கின்று என்பதைக் கண்டுபிடித்துக் கூறினர். கிறு என்பதையும் தான்.
கிறு என்பது கிறுக்கு என்பதிலிருந்து வரவில்லை.
வரு + கு + இன்று + ஆன்.
இன்று என்பது தான் நிகழ்காலம் என்று உங்களுக்குத் தெரியுமே.
இங்கு கு + இன்று இரண்டும் சேர்ந்து கின்று ஆகிவிட்டது.
கின்று என்பதிலும் ஓர் இடைக்குறை ஏற்பட்டு கிறு ஆகிவிட்டது.
எனவே கு + இ என்பது குவி என்றாகாமல் இங்கு கி ஆகிவிட்டது.
ஆனால் சந்தி இலக்கணப்படி குவி என்றாகவேண்டும் என்றால் அப்படி ஆகவில்லை. இந்தச் சொல் அமைப்பில் ஆகவில்லை. மற்ற சொற்களைப் பற்றி நாம் பேசவில்லை.
கு+ இன்று என்பது கின்று என்று வரும். குவின்று என்று வராது. வாக்கியத்தில் வரும் சந்திக்கான இலக்கணம் இங்கு அடிபட்டு வீழ்ந்துவிடுகிறது. அது இங்குப் பொருந்தாது.
இன்னும் எழுதலாம். நேரமாவதாலும், நாளை மருத்துவரைக் காணவேண்டி இருப்பதாலும் இத்துடன் நிறுத்திக்கொள்வோம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக