எப்போது வந்தாலும் தென்றல் தென்றல்
எப்போதோ வந்தாலும் சூறை வேறாம்
இப்போது வந்ததுவோ நோயின் நுண்மி!
இதுநம்முள் ஒட்டுவதால் நன்மை கம்மி.
நற்போது வருநாளே வீட்டுக் குள்ளே
நந்தமிழிற் கவிபாடி வாட்டம் இல்லாப்
பொற்போதாய் மாற்றுங்கள் பூத லத்தின்
புன்முடியைப் பொன்முடியாய் ஆக்கிக் கொள்வீர்.
எப்போது வந்தாலும் தென்றல் தென்றல் - தென்றல் என்பது எப்போது வீசினாலும் அது இனிமைதான்; முதல் சொல் தென்றல் என்பது தென்மென் காற்று என்பது. இரண்டாவது தென்றல் இனிமைப் பொருளது.
எப்போதோ வந்தாலும் சூறை வேறாம் --- அடிக்கடி வராத புயல் என்பதில்
இனிமை இல்லை, அது துன்பமே. வேறாம் - இனிமையிலிருந்து வேறு படுவதாம், அதாவது துன்பமே.
இப்போது வந்ததுவோ நோயின் நுண்மி! -- இக்காலத்தில் நம்மிடையே வந்துள்ளது வைரஸ்
இதுநம்முள் ஒட்டுவதால் நன்மை கம்மி. -- இது நம்மை ஒட்டிக்கொள்ளுமாயின் இதனால் நன்மை மிகக் குறைவு. பிழைத்துவிட்டால் ஒருவேளை நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும், அது ஒரு குறைந்த நலமே. வழுக்கியும் விழாதது போல.
நற்போது வருநாளே வீட்டுக் குள்ளே-- வருங்காலத்தின் நல்ல பொழுது உள்ளது; நீங்கள் வீட்டினுள்ளே இருந்து,
நந்தமிழிற் கவிபாடி - நமது தமிழில் கவிகள் இயற்றி,
வாட்டம் இல்லா - கெடுதல் இல்லாத,
பொற்போதாய் மாற்றுங்கள் பூத லத்தின் - இவ்வுலகத்தில் பொன்னான பொழுதாய் அதை மாற்றிவிடுங்கள்.
வருங்கால மக்களுக்கு நல்ல கவிதைகளாவது கிடைக்குமே!
புன்முடியைப் பொன்முடியாய் ஆக்கிக் கொள்வீர். --- புன்மை மகுடமாகிய கொரனாவைப் பொன் மகுடமாக மாற்றி இன்பம் சேருங்கள்.
புன்மை-- இழிவு.
புன்முடி - இழிமுடி, கொரனா.
( If a compose copy of this post is in circulation anywhere, it is an error. Please reload to obtain the correct output )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக