சனி, 12 ஜூலை, 2014

சவம்.

சில சொற்கள் வினைச்சொல் வடிவிலிருந்து பெயர்ச்சொல் வடிவத்தை அடையும்போது, முதனிலை அதாவது சொல்லின் முதலெழுத்து நீண்டு பெயர்வடிவம் பெறுகின்றன. இதற்கு  எடுத்துக்காட்டு:‍

சுடு  >  சூடு
அசை >  ஆசை  (ஒன்றை நோக்கி மனம் அசைவுறல்).

இப்படி நீண்டபின், விகுதி பெறுவனவும் உண்டு:    எ‍-டு:

படி >  பாடம்.  (அதாவது: ப என்பது பா என நீள, அம் விகுதி பெற்றது.)

இதில், இன்னொன்று, படி என்பதில் இறுதியில் நின்ற இகரம் கெட்டு ட் என்றானது.

படி  >  பாட் > பாடம்.  பட்,  பாட் என்பன தோன்றா இடை வடிவங்கள்.

கருவில் வளர் குழந்தை, பல் வேறு இடை வடிவங்களை அடைந்து, பின் இறுதிக் குழந்தை வடிவம் அடைதற்கும் இதற்கும் வேறுபாடில்லை.

நான் சொல்ல வந்தது இதுவன்று. அதை இப்போது காண்போம்,

சில சொற்கள் சூடு எனற்பாலது நீண்டாற்போன்று நீளாமல், குறுகிவிடுகின்றன.

இதற்கு ஓர் எடுத்துக்காட்டு:

சாவு >  சவம்.

சாவு என்ற வினைச்சொல்லின் முதலெழுத்து, "ச" என்று குறுகிற்று. "வு" என்ற இறுதி எழுத்து தன் இறுதியில் நின்ற உகரம் இழந்தது. வ்  என்று மட்டும் நின்றது, பின் வந்த அம் விகுதி  "வ்" என்ற எழுத்துடன் புணர்ந்து, "வம்" என்றானது. முன்பே குறுகிவிட்ட "ச" எழுத்துடன் இணைந்து, சவம் என்றானது.

இது போன்று குறுகி அமைந்த சொற்களின்  பட்டியல் ஒன்றை நீங்கள் தயார் செய்யலாமே.

கருத்துகள் இல்லை: