வியாழன், 24 ஜூலை, 2014

வென்றபின் பகைவனுக்கு அருள்செய்

எது தமிழர் பண்பாடு என்பதை பண்டைத் தமிழ் நூல்கள் மிக்கத் தெளிவுடன் விளம்புகின்றன. "யாதும் ஊரே" என்பது புற நானூறு காட்டும் பண்பாடு.
போரில் பெருவெற்றி பெற்ற பெருஞ்சேரல் இரும்பொறையைப் புகழ்ந்து பாடிய புலவர்கோமான் அரிசில் கிழாரும் ஒரு தமிழன் பண்பாட்டு முத்தினை  எடுத்து அறிவுறுத்தினார். அது யாதென்பதை நாம் காண்போம்.

இரும்பொறைக்கும் அவனுடன் போர் நிகழ்த்திய மற்ற மன்னர்களுக்கும் அப்போர் நடைபெறுமுன்னரே கிழார்  சென்று தணிவுரைகள் பகர்ந்தார்.  யாரும் கேட்கவில்லை.சண்டையில் மற்றவர்கள் தோற்றனர். கிழார் இரும்பொறையைப் புகழ்ந்து பத்துப் பாடல்கள் பாடினார். "மன்னா! உன்னை எதிர்த்து  நின்ற மன்னர்களிடம் எவ்வளவோ சொன்னேனே!  என் சொல் கேளாது போகவே, சான்றோர் வாயிலாகவும் சொன்னேனே!  அதையும் கேட்கவில்லையே. தோற்று முகவரி இழந்தவர்கள் ஆகிவிட்டனர். அவர்கள் நிலைக்கு இரங்குகிறேன்.

போகட்டும் மன்னா! அவர்களிடம் அருள் கொண்டு,  கொடுக்கும் கப்பத்தைப் பெற்றுக்கொண்டு நாடுகளை அவர்களிடமே கொடுத்துவிடு!" என்றார். " அதுவன்றோ நெடுந்தகைமை!! அதற்கு உரிய  தகைமை உனக்கன்றோ இங்கு உள்ளது!  அருள்வாய்!"  என்றார்.


"இடப்0படும்  பலிப்பொருளைப் பெற்றுக்கொண்டு, வணங்கி நின்றோனை விட்டுச் செல்லும் தேவதை போல, அருள்செய்வாயா"  என்றார்.

எதிரிகளையும் மன்னிப்பதே தமிழர் பண்பாடும் அரசியல் நாகரிகமும் ஆகும்.

இந்த முத்துப் பொதிந்த அந்த வரிகளை  அடுத்த இடுகையில் தருவேன்.

கருத்துகள் இல்லை: