வெள்ளி, 18 ஜூலை, 2014

காதல் வேறு, மரியாதை வேறு.

அள்ளூர் நல்முல்லையாரின் இனிய எளிய தமிழால் யாக்கப் பெற்ற சில வரிகளைக் குறுந்தொகை என்னும் சங்கத் தொகை நூலிலிருந்து பாடி மகிழ்வோம்.
அப்பாடல் இது:

நன்னலம் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும் உரையல்;   அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
புலவி அஃது எவனோ அன்பு இலங் கடையே.   63

நன்னலம் தொலைய ‍‍‍=  நமது நாணம் கெடும்படியாக,  நலம் மிகச் சாஅய் = நமது  (இங்கு தலைவியின் ) அழகும் கவர்ச்சியும் பெரிதும் கெட்டுப்பபோய்; இன்னுயிர் கழியினும் =  இனிய உயிர்  பிரிந்தாலும்;  உரையல் = சொல்லாதே;
அவர் நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி =   காதலர் நமக்கு  தாயும் தந்தையும் போன்றவர் என்பதை ஒத்துக்கொள்வோம்  தோழியே; அதற்காக, புலவி அஃது  =  நான் அவருடன் ஊடியிருக்கின்றேன் என்பது;
 எவனோ = எதற்காகப்  பேசவேண்டும்;  அன்பு இலங்  கடையே ‍= அன்பு இல்லாதவரிடத்திலே.

அதாவது:  அவர் நமக்கு (குடும்பத்துக்கு)  அன்னையும் அப்பனும்போல் பக்கத் துணையாய் இருக்கிறார். என்றாலும், என்னை நீங்கி வேறு பெண்ணை நாடிவிட்டார். அன்பு இல்லாமல் போய் விட்டது; அவரால் என் அழகும் உடல் நலமும் ஒழிந்தது. இப்போது வெட்கம் கெட்டதனமாக, நீ ஏன் நான் கோபித்துக்கொண்டிருக்கிறேன்  என்று போய்ச் சொல்லவேண்டும். அன்பு போனபின், கோபம் ஒரு பொருட்டா? பயனில்லை; தோழி, அவரிடம்
அப்படிப் பேசுதல் தவிர்ப்பாய்.

இதுதான் இப்பாடலில் தோழிக்குத் தலைவி சொல்வது.

அந்த வேறொரு பெண் பரத்தை போலும்.

அன்னையும் அப்பனும் போன்றவர் என்றால், அதற்குள்ள பணிவன்புடன் நடந்துகொள்வோம். வழிபடுவோம்!  அன்பு இல்லாதவர், அவரிடம் தணிவு செய்துகொண்டு பழைய காதலுறவைப் புதுப்பிக்க வேண்டியதில்லை.  காதல் வேறு,  மரியாதை வேறு. என்கிறாள் தலைவி.

அருமையான கருத்து.

குறளும் இதையே கூறும்.

காதல் ஒழியினும் ஓர்  ஆடவனுக்குப் பெண் காட்டும் பணிவு தொடரும்.  தலைவி  அறிவுடையவள்.

கருத்துகள் இல்லை: