திங்கள், 11 ஏப்ரல், 2016

தொண்டைமான்களின் அரசு சிறப்பு

அத்தான் வருவாக என்ற இடுகையின் தொடர்ச்சி.

http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_8.html


தொண்டைமான்களின்  அரசின் சிறப்பை இப்பாடல் சுட்டுகிறது.
புற நானூறு போன்ற இலக்கியங்க்களில்தாம்  இத்தகு விடையத்தைக் காண
முடியும் என்பதில்லை. அகப்பொருட் பாடல்களிலும் இத்தகைய குறிப்புகள் கிடைக்கும்.  படிக்கும் நாம் விழிப்புடன் படித்துச் சுவைத்துக்கொள்ள
வேண்டும்,

குருகும் இருவிசும்பு இவரும் புதலும்
வரிவண்டு ஊத  வாய் நெகிழ்ந்தனவே!
சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்;
வருவர்கொல் !  வாழி தோழி பொருவார்
மண்ணெடுத்து உண்ணும் அண்ணல் யானை
வண்தேர்த் தொண்டையர்  வழையம லடுக்கத்து
கன்றில் ஓர் ஆ விலங்கிய
புன்றாள் ஓமைய சுரனிறந்  தோரே.

தொண்டைமான்கள் நல்ல போராளிகள். ஓயாது களம் கண்டு வெற்றிமேல் வெற்றி குவித்தவர்கள்.  அரசுக்குப் பணம் தேவை என்றால் வரி விதிக்கலாம்.
ஆனால் வரிகள் மிகுந்துவிட்டால்  குடிமக்களுக்குச் சுமை மிகுந்துவிடும் .
இத்தகைய சுமைகளைத் தணிக்கப் போரென்பது ஒரு முன்மையான வழியாகும் .ஆகவேதான் தொண்டைமான்கள் போலும் அரசர்  போர்களில் மிகுந்த ஈடுபாடு காட்டினர்.

யானையைக் கட்டித் தீனியைப் போட்டது போல என்பது தமிழ்
நாட்டின் உவமைத்  தொடர்களில்  ஒன்று.  படைகளில் பணி புரியும் யானைகளுக்கு எல்லாம் தீனி போட எவ்வளவு வேண்டும் ?  இந்தப் பாடல்  இதைக் குறிப்பால் உணர்த்துகிறது. தொண்டைமான்களின் யானைகள் யாவும் தோற்ற பகைவர்களின் விளைச்சலை  எடுத்துதான் உண்ணுகின்றன  என்கிறார் புலவர். இங்கு மண் என்றது மண்ணின் விளைச்சலை.

இந்த யானைகளுக்கும்  அண்ணல் யானைகள் என்று அடைமொழி
தரப்படுகிறது. போர்களில் வென்று வாகை சூடிப் பெருமை பெற்ற யானைகள் .தொண்டைமான்கள் போல் இவ் யானைகளும் விம்மிதம் அடைந்தவை.  ஆகவே  அண்ணல் யானைகள் என்ற அடைமொழி மிக்கப் பொருத்தம் ஆகும் .

தொண்டைமான்களின்  தேர்கள் யாவரும் கண்டு வியக்கும்   வண்மை காட்டுபவை. வண் தேர்  என்பது காண்க . அரசின் பொருள் வளம் காட்டும்  ஒப்பனை பல பொருந்தியவை.

வழை  அமல் அடுக்கம் என்பது  அவர்களின் ஏழு மலைகள் கொண்ட தொடரைக் காட்டுவது ஆகும்.  அது வேங்கட மலை ஆம். வெம்மையும் கடத்தற்கு அரியனவாயும்  திகழ்ந்தமையின்  அங்குள்ள பகுதிகள்  வேங்கடம் எனப் பெயர் பெற்றன.  இச்சொல் தொல்காப்பியப் பாயிரத்திலும் உளதாகும்.

இங்ஙனம்   தொண்டைமான்களும் சிறப்பிக்கப் படுகின்றனர்; அவர்களின் யானைப்படையும்  சிறப்பிக்கப் படுகிறது. எப்போதும் பகைவர் மண்ணின் உணவே உண்பன என்றால் அவை வெற்றிமேல் வெற்றி குவித்தவை என்பதாம்.  தம் நாட்டு உணவு வேண்டாதவை அவை.

என்னே புகழ்ச்சி!  என்னே உண்மை நவிற்சி !

Read more:

http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_13.html

http://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_12.html

http://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_81.html

http://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_9.html



கருத்துகள் இல்லை: