சனி, 9 ஏப்ரல், 2016

நிமித்தங்கள் (குறுந்தொகை, கல்லாடனார் )

சென்ற இடுகையிலிருந்து தொடர்வோம் ,

 குறுந்தொகை கல்லாடனார்


குருகும் இருவிசும்பு இவரும் புதலும்
வரிவண்டு ஊத  வாய் நெகிழ்ந்தனவே!
சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்;
வரு

குருகு என்பது நாரை.  அது உயரப் பறந்தால் பிரிந்து சென்றவர் விரைவில் திரும்பி வருவார் என்பதை முன்னறிவிக்கும் என்ற நிமித்தம் உண்டு என்று இந்தப் பாடல் கூறுகின்றது. நாரைகள் வாழ் இடங்களுக்கு அருகில் இருப்போரிடம் இதைக் கேட்டறிய வேண்டும், இதை இந்தப் பாடல் மூலமே யாம் அறிகிறோம். நாரைகள் என்ன, கோழி வாத்து முதலியவற்றையே இனி விலங்குக் காட்சி சாலையில் தான் காணவேண்டி வரும். தம் பாடல் மூலம் இதை நமக்குத் தெரிவித்த கல்லாடனாருக்கு நாம் நன்றி சொல்வோம்.  'குருகும் இருவிசும்பு இவரும்"  என்று அழகிய தொடரில் இதைக் கூறுகிறார்.

"புதலும் வரிவண்டு ஊத வாய் நெகிழ்ந்தன "  என்பார் புலவர். புதல் என்பது அழகிய தமிழ்ச் சொல்.  அதனடி புது என்பது.  அரும்பைக் குறிக்கும்.  புதல்வி புதல்வர் என்பவும் இச்சொல்லுடன் தொடர்பு உடையன.  பூத்தன என்று வழக்கம்போல் வரணிக்காமல் :வாய் நெகிழ்ந்தன என்பது மிக்க இனிமை பயப்பதாம்,  நெகிழ்ந்ததும் வண்டுகள் வந்து அங்கு ஊதாநின்றன என்பது இன் தமிழால் நமக்கு இன்பம் தருகிறது.  இதுவும் ஒரு நிமித்தம். முன்னறிவிப்பு. அவர் வந்துவிடுவார் என்பதை முன்குறிக்கின்றது.

இவைகளெல்லாம் தலைவியின் நீங்கிய நிமித்தங்கள். தொலைவில்
நடந்து தோழியும் தலைவியும் காண நடப்பன.  தலைவிக்கே தோளில்  ஒரு விம்மல். ஒரு பூரிப்பு. ஒரு துடிப்பு. இது அவளைத்
தொட்டு நிகழும் ‍ அதாவது இடையீடு இன்றி  -  தற்சார்பு நிலையில் -  (personal)  நடைபெறும் நிமித்தம். அதனாலும் அவர் வந்துவிடுவார் என்று முன்குறிப்பாகிறது.

ஆகவே தோழிக்கு உறுதியாகத் தெரிந்துவிட்டது. அதனால்   தேற்றுகிறாள் தலைவியை. சுரிவளை என்பது சங்கு வளையல்.
சுரிவளை அழகுறும்படியாக  (பொலிவு)  தோள்கள் செற்றின. செறிவு பெற்றன. புலவரின் சொற்களால்: " சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்." என்று வருகிறது.

இந்தத் தமிழைச் சிந்தித்து மகிழுங்கள். அடுத்த இடுகையில் தொடர்வோம்.

தொடர்ச்சி


1359 03082021
சில திருத்தங்கள் செய்தோம்.

கருத்துகள் இல்லை: