திங்கள், 25 ஏப்ரல், 2016

காதற்பரத்தைக்கு அறிவுறுத்துதல் - குறுந்தொகை

இப்போது குறுந்தொகையிலிருந்து  மாங்குடி மருதனாரின் ஓர் இனிய பாடல்.இவர்  ஒரு நல்லிசைப் புலவர்.  பாண்டியன் நெடுஞ்செழியனின் அவையில்   தலைமைப் புலவர். "மாங்குடி மருதன் தலைவனாக  உலகமொடு நிலைஇய  பலர்புகழ் சிறப்பின் " என்ற வரிகள் வரும்   நெடுஞ்செழியனின் புறநானூற்றுப் பாடலால் இதனை அறியலாம்.


பாடல் இது:

கணைக்கோட்டு வாளைக் கமஞ்சூல்  மடநாகு
துணர்த்தேக் கொக்கின்  தீம்பழங் கதூஉம்
தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது
தண்பெரும் பவ்வ மணங்குக தோழி
மனையோள்  மடமையிற் புலக்கும்
அனையேம்  மகிழ்நற்கு யாம்ஆயினம் எனினே

.
164. ( குறுந்தொகைப் பாடல்.)



என்பது காதற்பரத்தை தலைமகளின் தோழி வந்து கேட்க அவளுக்குச் சொல்லியது.
கணைக்கோட்டு = திரட்சியான நெடுமூக்கினை உடைய.
வாளை - வாளை மீனின்
கமஞ்சூல் - அடர்ந்த கருவினைக் ;கொண்ட;
மடநாகு - மடம் பயிலும் இளம் பெண்மீன்;
துணர்த்தேக் கொக்கின்  - இலை முதலியவற்றுடன் கூடிய கொத்தான
மாவின்;
தீம்பழங் கதூஉம் ;- இனிய (மாம் )   பழத்தைக் கௌவித் தின்னும்.
தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது --- பழங் கால வேளிரின் குன்றூரின் கிழக்கே;
தண்பெரும் பவ்வம் -   தண்மையான பெருங்கடல்;
அணங்குக  தோழி -   என்னை எடுத்துக்கொள்ளட்டும் தோழி;
மனையோள்  - தலைவி ; மனைவி .
மடமையிற் புலக்கும் -  எண்ணிப்பார்க்காமல்  குறைத்துப் பேசிப்  பிணங்கும்  ;
அனைத்தேம் ஆயினேம்   -  அப்படிப்பட்டவளாய் யாம் ஆகிவிட்டோம் ;
மகிழ்நற்கு எனினே -    தலைவருக்கு என்னும்போது ..


கமம் = நிறைவு.  அடர்வு. 
மடம்  :  அச்சம் மடம். நாணம் , பயிர்ப்பு  என்ற நான்கனுள் மடம்  கவடு  சூது இலாத நேர்மை; அறியாமை..  
தேம் +  கொக்கு  =  தேக்கொக்கு   கொக்கு என்றது மாமரத்தை.
தீம் பழம் :  தீம் எனில் இனிய.
தொன்று <  தொல்.  மிகப் பழைய .  தொல்+ து =  தொன்று.   
தொன்று தொட்டு  என்பது காண்க.  முதிர் =  மூத்த.
குணக்கு =  கிழக்கு.   குண +  அது =  குணாது.     குணா அது என்று அளபும்  எடுக்கும்.

இப்பாடலில் காதற்பரத்தை சொல்வது : நான் வலியத்  தலைவனிடம் போகவில்லை;  பெண்வாளை மீன் மாம்பழம் கிடைக்கப்பெற்று உண்பதுபோல அவர் என்னிடம் வந்தார், நான் ஏற்றுக்கொண்டேன்.   அவ்வளவே.   மனையறத்தைக் கெடுக்க நான் ஒன்றும் முற்படவில்லை. மனையோள்  என்னை வையுமுன் எண்ணிப் பார்க்கவேண்டும்.  நான்  கேடு  சூழ்பவள் ஆயின், முது வேளிரின் கடல் என்னை எடுத்துக்கொள்ளும்,... என்பது.

காதற்பரத்தையும் ஒரு தன்மானி  ஆகின்றாள். பெண் வாளை மீன் மடமுடைத்தானது  போல இவளும் மடமுடையாள்.

அரசியையும் அரசிளங்குமரிகளையும் ஏனைக் குலமாதர்களையும் காத்தற்குக் காதற்பரத்தை, இற்பரத்தை போலும் வசதிகள் பண்டைத் தமிழர் குமுகத்தில் தடையின்றி விடப்பட்டன. தம்மை அடக்கிக் கொள்ள இயலாத ஆண்கள் அங்குச் சென்று உலவி வந்தனர். அரண்மனைப் பெண்களைக் கண்டு தலைகிறுக்கம் அடைந்தவனுக்கு
இத்தகைய கதவுகள் திறந்திருந்தன. இல்லையென்றால் இளைஞர் பலர்   அம்பிகாபதிகளாகி அறுபட்ட தலையினராய் மடிந்திருப்பரல்லரோ











கருத்துகள் இல்லை: