வெள்ளி, 20 நவம்பர், 2020

உந்தன், உன்றன் எந்தன் என்றன் எது சரி

 இந்த இடுகைக்கு நல்ல தலைப்பு எது என்று சற்று சிந்தித்தேம். "ஓருமை பன்மை மயக்கம்" என்பது சரியான தலைப்பு என்றாலும், இதில் வரும் "மயக்கம்" என்பது புரியாமல் போய்விடும் என்னும் தடை எண்ணம் வந்தது. இலக்கணம் அறிந்தாரும் சிலவேளைகளில் தெரிந்தே அதை மீறவேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக:

"கண்ணல்ல தூங்கம்மா - நீ என்

கண்ணல்ல தூங்கம்மா"

என்ற மக்களுக்குப் புரியும் பாட்டில்,  கண் அன்றோ தூங்கம்மா என்றிருக்கவேண்டும் என்று மாறுபடலாகும். இதற்குக் காரணம்,  கண் ஒருமை; அல்ல என்று முடித்தல் ஆகாது என்னலாம்.   ஆனால் அப்படிச் சொல்வதும் சரியில்லை.   இதன் முழு வாக்கியம், " நீ என் கண் அல்லளோ"  என்பது. ஆகவே, அல்லளோ என்று முற்றுறுவதே சரி என்னலாம்.  ஆனால் அதுவுமே  ஏற்கத் தக்கதன்று;  "நீ  என் கண் அல்லையோ"  என்பதே மிக்கச் சரியானது என்று எதிர்த்தெழலாம்.

தமிழ்ச்சான்றோர்  எவ்வாறு எழுதினரோ - பேசினரோ அவ்வாறு எழுதுவதே சரியான இலக்கணம் (மரபு).  என்று ஒரு விதியை முன்வைத்துப் போற்றுதல் வேண்டுமென்பது சரியான கொள்கையே. அதன்படி,

நீ அல்லை;

நீர் அல்லர்.

யான் அல்லேன்

யாம் அல்லேம்

யாங்கள் அல்லோம்

நீம்  அல்லீம்

நீர் அல்லீர்

நீவிர் அல்லீர்

நீங்கள் அல்லீர்கள்

என்பவும் இன்ன பிறவுமே போற்றி எழுதுதலே சரி  என்று சொல்லவேண்டும்., இவையெல்லாம் சரியே என்றாலும் இவற்றில் பாதிக்குமேல் மொழியிலிருந்து ஒழிந்துவிட்ட வடிவங்கள். "விளங்காததை யாரும் படிக்கமாட்டார்கள்" என்பதே சரி. மொழி என்பது ஒரு கருத்தறிவிப்புக் கலையே ஆதலின், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னிருந்த மொழிநிலையை மீட்டெடுத்து அதன்படி எழுதினால் எவனுக்கும் புரியப்போவதில்லை என்பது உண்மை.  ஆ.எல். ஸ்டீவன்சன் கூறியபடி, நாம் எழுதுவது அடுத்தவனுக்குப் புரியவில்லை என்றால் குற்றம் நமதே  ஆகும்.  அவன் என்ன செய்வான் பாவம். அந்தச் சுமை, அறிவிக்க முயல்வோனுடையது ஆம்.

விளக்கிச் சொல்லிப் புரியவைக்கலாம். ஆனால் சில வேளைகளில் அது முடியாதது ஆகிவிடுகிறது.  செய்தியறிக்கை வாசிப்பவர்  கடினச் சொற்களைப் போட்டு வாசித்தால்,  கேட்பவன் அகரவரிசையைக் கையில் வைத்துக்கொண்டு கேட்கவேண்டும்.  சொல்லைத் தேடிக் கண்டுபிடித்து அறிவதன்முன், செய்தியறிக்கை முடிந்துவிடும்.

ஆனால் எழுதும்போது நிலைமையைச் சற்று சரிப்படுத்திக்கொள்ள வசதி இருக்கிறது என்றாலும் அதற்கும் ஓர் எல்லை உள்ளது.

புறநானூறு முதலியவற்றில் எத்துணை அழகிய கவிதைகள் உள்ளன. அதனில் ஒரு பாட்டு:

இரவலர் புரவலை நீயும் அல்லை

என்று தொடங்குகிறது.  கேட்பதை வழங்கி அறம் செய்வோன் என்று எண்ணி அவன்பால் நண்ணி   இரந்து நிற்பவனுக்கு  அப்பொருளை வழங்கி அவனைக் காப்பவன்  நீ  'அல்ல' என்பதே இதன் பொருள்.

இதைப் பாடிய தமிழ்ப் புலவன் நாலே சொற்களில் அதைச் சொல்லிவிட்டான்.

"நீயும்" என்பதில் வரும் உம்,  ஈதல் செய்யார் பட்டியலில்  உன்னையும் சேர்க்கவேண்டும் என்று இடித்துரைக்கிறது.

இதை இங்கே எழுதக் காரணம்,  "அல்லை" என்ற சொல்தான்.  இதுபோல் சொல் வடிவங்கட்கு அகரவரிசையில் பொருளறிதல் கடினமே.  நீ அல்லை என்பதே சரி. நீ அல்(?/?) என்ற பிறவடிவங்கள் வழுவாம்,  பழைய இலக்கணப்படி.

"எந்தன் கண்ணில் கலந்து விளையாடும்

இன்பமே ஓடிவா"  

என்பது ஒரு பாட்டு வரி.  இதைப் படிக்க நேர்ந்த ஒரு தமிழ்ப்புலவர்,  எந்தன் என்ற சொல் தவறு என்றார்..  உண்மைதான். எந்தன் என்பது எம்+தன்.  எம் என்பது பன்மை.  தன் என்பது ஒருமை.  இதுதான் ஒருமை paன்மை மயக்கம் என்பர். இது ஒரு வழூஉச்சொல் ஆனாலும் இக்காலத்து அது ஏற்கப்படுமாயின் வழுவமைதி ஆகிவிடும்.  ஒருமையில் என்றன்  என்றும் பன்மையில் எந்தம் என்றும் இருக்கவேண்டும்.

"அவர்தானே என் ஆருயிர் வாழுந்தெய்வம்,

அடியாள் என்னை ஆட்கொண்ட காதல் தெய்வம்".

அவர் - ஒருவரைக் குறிப்பின் பணிவுப் பன்மை.  தானே என்பது ஒருமை. இங்கு அவர் என்பது வடிவில் பன்மையாய் இருப்பினும் பொருளில் ஒருமையே ஆதலின் தானே என்ற ஒருமை பொருந்திற்று என்னலாம். என்றாலும் அவர் என்பது பன்மை ஆதலின், வழுவமைதி என்று முடிப்பதே நன்று எனலாம். இங்குப் பணிவின் பொருட்டு அவர் என்று வந்தமை சுட்டிக்காட்டுவர்.

எனவே:

என்+தன் = என்றன்  ( சரி)

உன் +தன் =  உன்றன் (சரி).

எந்தன் உந்தன் என்பவை தவறான சொல்வடிவங்கள் எனினும்,  வழுவமைதிகளாகக் கொள்ளலாம்.

ஒருமை பன்மை இல்லாத மொழிகள் உலகில் உள்ளன. அவற்றுக்கு இந்தத் தொல்லை எழவில்லை. இலக்கணம் அதிகமிருந்த மொழிகள் சில இறந்துபட்டன. கன்னித்தமிழ் இன்னும் மாறாத மாண்பின் ஆட்சியைச் செலுத்திக்கொண்டுள்ளது. மாறிவிட்டவை சில.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.


 


புதன், 18 நவம்பர், 2020

தருமம்--- சொல்லில் திரிபுகள்

 சொல்லாய்வு மேற்கொள்ளவோ அவ்வாய்வுகளை நன்கு அறிந்துகொள்ளவோ அதுபற்றிய எதிருரைகளை மேற்கொள்ளவோ எண்ணும் ஒருவர்,  பலவேறுவகைத் திரிபுகளை அறிந்து அவற்றை மனத்துள் ஆழப்பதிந்துகொள்ளுதல் இன்றியமையாதது ஆகும். இதைப்பற்றிய பதிவுகளை மனத்துள் அமைத்துக்கொள்ளாதவர்,  ஓர் ஆய்வினை ஏற்கவோ மறுக்கவோ இயலாதவராகிறார் என்பது சொல்லவேண்டாமலே புரிந்துகொள்ளவேண்டிய ஒன்றாகும். வேறுவகைப் படிப்பறிவு பெற்றிருந்தாலும் இது கற்காமல் புரியக்கூடியதன்று.

ஆகவே இங்கு கூறப்படுபவை கவனத்தில் கொள்ளத்தக்கவை,  கொள்ளவேண்டியவை என்பதறிக.

ஆழ்ந்துசெல்லும் நோக்கமற்றவர்,  அறிந்து இன்புற்றுப் பின் அதை மறந்துவிடலாம். 

இப்போது சில திரிபுகளைத் தெரிந்துகொள்வோம்.

தர்ம என்ற சங்கதச் சொல்லின் பொருள் சற்று விரிவானது ஆகும்,  ஆனால் தமிழ்ச்சொல் " தருமம்",  பிறருக்கு விலைக்கின்றித் தருதல் என்பதையே பொருளாய்க் கொண்டது. இவற்றின் பொருள்வேறுபாடுகளை அறிந்துகொள்க.

சங்கதத் தருமம்,   "  மனு தர்மம் " என்ற சொற்றொடரிற்போல,  விதிமுறைகள், வரையறவுகள், விளக்கங்கள், கட்டுப்பாடுகள்  என பலவற்றையும் குறிக்கக் கூடியது.

தமிழில் தருமம் என்பது ஈதலைக் குறிப்பது.  "தருமத்தை ஒருநாளும் மறக்கவேண்டாம்" எனில் ஈதலை மறத்தலாகாது என்பதுதான்.  ஆனால் தருமம் என்பதற்குச் சமத்கிருதத்தில் உள்ள பொருளும் தமிழில் வருவிக்கப்பட்டு இதற்குப் பொருள்கூறுவர். இப்படிக் கூறின் இதன் பொருள் விரியும் என்றறிக.

தருதல் வினைச்சொல்

தரு+ ம் + அம் = தரும.  தருதலாகிய ஈதல்.

கொடுத்தல், தருதல், ஈதல் என்ற மூவேறு சொற்களின் பொருள் வேறுபாடு  இந்தச் சொல்லில்  பிற்காலத்திற் பின்பற்றப்படவில்லை 

தமிழில் தோன்றிய தருமம் என்ற என்ற சொல், பின் வழக்கு விரிந்து அயலில் பயன்பாடு கண்டு பொருண்மை விரிந்தது. தருமம் என்பதன் சொல்லமைப்புப் பொருள் அச்சொல்லில் சிறிதே இப்போது உள்ளது.  தருமத்துக்குக் கொடுப்பது என்றால், பேச்சு வழக்கில் விலையின்றிக் கொடுப்பது என்பதே பொருள்.

தருமம் என்பது நன்னெறிச் செல்கை என்பது,  பின்னர்ப் பொருள்விரி ஆகும்.

ஆயினும் கொடுத்தல் என்பது சிறப்புத் தருமென்பதால், இப்பொருள் நாளடைவில் ஏற்படுதல் இயல்பு.

நன்னெறிச் செல்லாமை, அதருமம் எனப்பட்டது.  இது அதர்மம் என்று எழுதப்பட்டது.  உகரம் கெட்ட சொல். அதர்மமாக நடப்பவன் அதர்மன்.  இது அதமன் என்று இடைக்குறைந்தது,  ரகர வீழ்ச்சி இடைக்குறை.  பிற சொற்கள் பலவற்றில் ரகர ஒற்று வீழும்.  எ-டு:

சேர்மி >  சேமி.> சேமிப்பு.

ரகர ஒற்றுக்குப் பதிலாக ஒரு 0னகர ஒற்றும் தோன்றுவதுண்டு:

அதர்மம் > அதன்மம்.

இன்னொரு திரிபு இது போல்வது:  கர்மம் > கன்மம். ர் -- 0ன்.

சிறு மையம் என்பது சின்மயம் ஆனதோ.  பின்னொரு நாள் பேசுவோம்.  று>ன்

பாலி மொழியில் தர்ம  என்பது டம்மா (தம்மா)  என்று திரிந்தது.

டம்மா (தம்மா) என்பது இப்போது ஆசியா எங்கும் வழங்குகிறது.

Derma (atau sumbangan ) என்று மலாய் மொழியில் வழங்கும்.   நரகம் என்பது neraka என்று வழங்குவது போலத்தான்.

முகக் கவசம் அணிந்து பிறருக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு காப்புத் தொலைவு கடைப்பிடியுங்கள். நன்றி.  

மெய்ப்பு - பின்பு.

திங்கள், 16 நவம்பர், 2020

சேனை (பலர்சேர் படை)

ஆட்சேபம் என்ற சொல் நல்ல தமிழ்ச்சொல் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம் .இராணுவத்துக்கு ஆளெடுப்பதை ஒட்டி எழுந்த சொல்லே "ஆட்சேபம்"  ஆகும். ஆட்சேர் + பு+ அம் =  ஆட்சே(ர்)பம்.  படைக்கு ஆள்சேர்க்குங்கால் வேண்டாம் வேண்டாம் மாட்டேன் மாட்டேன் என்று கதறுவார்கள், பண்டைக்காலத்தில்.  அதுவும் ஒரே மகன் வைத்திருப்பவர்கள் படும்பாடு கேட்கவே வேண்டாம். கால்கை நொண்டியானால் விட்டுவிடுவார்கள். நொண்டி வேண்டாம் என்பதும் ஓர் ஆட்சேபமே  ஆகும்.  சேப்புதல் என்றால் தங்குதல்.  நொண்டி தங்கிவிடுவான். நொண்டியை எடுப்பதில் மறுப்பினால் ஆட்சேப்பு+ அம் = ஆட்சேப்பம் > ஆட்சேபம் எனக் காண்க. இடைக்குறைச் சொற்கள் இவை எனல் உன்னுக.

பொருள்முரண் இடைக்குறைச் சொற்களிலும் பிறவற்றிலும் ஏற்படும்.

இவற்றையும் வாசித்துக்கொள்ளுங்கள்:

ஆட்சேபம்  https://sivamaalaa.blogspot.com/2018/02/blog-post_4.html

ஆட்சேபித்தல் என்னும் வினைச்சொல் ஒரு பின்னமைப்புச் சொல்.

இராணுவம் என்பதோ அரணுவம் என்பதன் திரிபு:  அகரமாகிய தலைபோய், பின்னிருந்த தலைநீண்டு, அப்புறம் இலக்கணம் போற்ற, ஓர் இகரம் பெற்று அமைந்த சொல்லாம். அரணன் > ராணா; அரணி > ராணி.  இவர்கள் அரண்வாழ் ஆட்சிமேலோர்.

இங்குக் காண்க.

இராணுவம் :  https://sivamaalaa.blogspot.com/2020/10/blog-post_19.html

அரசாட்சி முறை தென்பகுதியிலிருந்தே வடக்கில் சென்றது.  வடக்கில் இலடாக்கு, திபேத்து முதலிய இடங்களில் அரசுமுறைகள் பண்டைநாட்களில் சரியாக இயங்கவில்லை என்னலாம்.

சேர் சேர்தல் என்பது இராணுவத்தில் சேர்தலையும் குறிக்கும்.  சேர்வை எனின் சேனை என்றும் பொருள்.  சேர்> சேர்ந்நை > சேனை ஆகும்.  அன்றி, 0னை விகுதியும் உள்ளது.  பா> பானை ( அகன்றவாயுள்ள பாத்திரம்.)   பர > பார்> பா. ஒ.நோ:  வரு> வார் > வா. (வருக, வாரீர், வாங்க).  பா என்பது அகன்றிருத்தல் குறிக்க, 0னை விகுதி பெற்று பானை ஆதல்போல்,  சேர் > சே> சேனை ஆகும்.

( ந்நை ) >னை.

சேர் > சேர்நர் > சேர்ந்நை > சேர்னை > சேனை என்று ஒலியமைப்பினைக் கண்டுகொள்க.

ஓட்டு > ஓட்டுநர் போல. ( சேர்நர்).


குறிப்பு:  

சேனை https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_20.html -  இங்குக் காண்புறாத விரிவரைவு சில இந்த முன்போந்த இடுகைக்கண் தரப்பட்டுள்ளது. சேர் அல்லது அதனுடன் அணுக்க உறவுப் பதம் எதிலிருந்த வந்ததாக இச்சொல்லைக் காட்டினும் அஃது நிலையொக்கும் என்றுணர்க.

விரிவரைவு:

விரி > வி.

வரை -  வர்

அம் - அமைவு குறிக்கும் விகுதி.

வி + வர்+ அம் = விவரம்.  

இப்படி எழுதினால் அது தமிழென்பது உடன் காண்தரும் அறிக.

அறிக.






 

ஞாயிறு, 15 நவம்பர், 2020

அடிச்சொற்கள் கு>கூ . மொழியில் அமைந்த விதம்

 ஒரு காலத்தின் மொழியில் எல்லாம் குறுகிய அல்லது சிறிய சொற்களாய் இருந்தன. இத்தகைய குட்டைச் சொற்களைத் தாம் அவர்கள் பயன்படுத்தி வந்தனர். ஒரு குகையிலோ ஒரு மரத்திலோ வாழ்ந்துவந்த அந்த மனிதர்களுக்கு நீண்ட சொற்கள் தெரிந்திருக்கவில்லை என்பதைவிட அவை இன்னும் அமைவு பெற்றிருக்கவில்லை என்பதே சரி.  நான், நீ, போ, வா,  இர் ( இரு),  ஓ (ஓடு) என்று பேசிக்கொள்வது போதுமானதாக இருந்தது. எங்காவது தண்ணீர் இருக்கும் குட்டைக்குள் இறங்கிவிட்டால் உடலின் நாற்றம் குறைந்துவிடுதலை உணர்ந்து உடல் தூய்மை அடைவதை அறிந்துகொண்டவன்,  தூய்  தூய்  (தூய்மை) என்றோ,   குள் குள் என்றோ சொல்லிக்கொண்டிருந்தான்.    குள்> குளி!.

கு = அவ்விடத்துக்குப் போய்.    (கு என்பது சேர்விடம் குறிக்கும் சொல்).
உள் =  தண்ணீருக்குள் இறங்கு என்பது.
இ  =  இங்கேதான் அருகில் அந்தக் குட்டையும் நீரும்!

இவ்வாறு  கு+ உள் + இ என்று  அழகான குளி   என்ற சொல்லையும் படைத்துக்கொண்டான்.  அதுவே அப்போதைய மொழியில் பெரிய கண்டுபிடிப்பு.

கு உள் என்பதை குள் என்று சுருக்கக்கூட கண்டுபிடித்ததே பெரிய அறிவுதான்.

இந்தக் காலத்தில் இப்படிச் சுருக்க "நம்மள் பசங்களுக்கு" எங்கே தெரிகிறது.

சேர்ப்பதற்கும் சேர்வதற்கும் அவன் கண்டுகொண்ட முதன்மைவாய்ந்த சொல், கு > கூ என்பதுதான்.

அந்த அமைவுக் காலத்தில் மதுரை இல்லை. இருந்திருந்தால் மதுரைக் கு  என்று சொல்லியிருப்பான்.  பெயர் இல்லாத  அ கு  ( அங்கு),  இ கு ( இங்கு) -- இவைதாம் இருந்தன. இவை சுட்டடிச் சொல் வளர்ச்சிகள் ஆயின.

சேர்வது என்ற கு-வில் இருந்து:

கு இ  -  குவி.   (இங்கே சேர்த்துவை)

கு  >  கூ.

கு > குடு.

கு > கூ > கூடு  (கூடுவது).

குவை  :  குவியல்  (குவித்து வை).

வீடு கட்ட அறிந்த பின் சிறு வீடுகளின் கூட்டத்தைக் குப்பம் என்றான்.

கு: குப்பு > குப்பம்.

சேர்த்துவைத்த வேண்டாததற்கும் கு-விலிருந்துதான் சொல் அமைந்தான்.

கு > குப்பு > குப்பை. ( பு  : தோன்றற் கருத்துடைய விகுதி, இங்கு இடைநிலை, ஐ இறுதிநிலை )

அம்மா அப்பா பிள்ளைகள் சேர்ந்த  அணுக்க நிலைக்கும் கு-விலிருந்தே பெயர் கொடுத்தான்:

கு > குடு > குடு+பு > குடும்பு > குடும்பம்..

டு, பு, அம் எல்லாம் சொல்லாக்க நீட்சிகள்.  விகுதி - மிகுதி (சொல் மிகுதி).

ஒப்பு:  மிஞ்சு = விஞ்சு.  மி> வி > வீ > வீ + கு > வீங்கு.

( வீங்கு இள வேனில் என்று சைவத் திருமுறைப் பாடலில் வரும்.)

பல உள்ளன. இது போதும் . எமக்கும் வேறு செய்யவேண்டியவை உள்ளன.

அறிக மகிழ்க

தட்டச்சுப் பிறழ்வு - பின் நோக்குவோம்.





சனி, 14 நவம்பர், 2020

சமாதானம் (தாம் தானாதல்)

 நம் நேயர்கள் தங்களின் இனிய தீபாவளி அல்லது தீபஓளிப் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ச்சியில் இருந்துகொண் டிருப்பீரகள். இவ்வேளை எங்கும் நல்லமைதி நிலவும் என்பது எம் எதிர்பார்ப்பாகும்.  இவ்வேளையில் சாமாதானம் என்ற சொல்லைப் பார்ப்போம்.

தாம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான தன்மைச் சொல். தான் என்பதே ஒருமையாகும். ஒருமைக்கு மறுபெயர் ஒற்றுமை. ஒற்றுமை இருந்தால் சாமாதானம்.

இன்னொரு வகையில் நோக்கினால் தாம் என்பது தம்மைச் சுட்டிக்கொள்ளும் இருகுழுவினரையும் (அல்லது அவ்வெண்ணிக்கையின் மேற்பட்டோரையும்)  தான் என்பது ஒருகுழுவினரையும் சுட்டுவதாய் எடுத்துக்கொள்ளுதலும் ஆகும்.

சமாதானம் நிலவுவதாயின் இருவர் ஒருவராக வேண்டும்.

உடலளவில் இருவர் ஒருவராக முடியாது.  ஆனால் கலாய்த்துக்கொண்டிருக்கும் இருமனங்கள்  அல்லது இருநிலைப் பன்மனங்களும் ஒன்றுபடவேண்டும். இதையே சமாதானம் என்ற சொல் காட்டுகிறது.

தம் எனற்பாலது சம் என்று திரிவது தம் > சம் மோனைத் திரிபு  ஆம்.

தம் + ஆ+ தான் + அம்

சம் + ஆ + தான் + அம்

சமாதானம் ஆகிறது.

தம் என்பது சம்  ஆனது.  ஆ என்பது ஆகுதல் குறிக்கும்,  தான் - ஒருமையாதற் குறிப்பு. அம் அமைவு குறிக்கும் விகுதி.

இப்படி இச்சொல்லைப் புனைந்துள்ளனர்.

அறிக மகிழ்க.


௷ய்ப்பு பின்



வெள்ளி, 13 நவம்பர், 2020

இருபிறப்பிக்குச் சங்கத உதாரணம்

 இருபிறப்பிச் சொல்லுக்கு சமஸ்கிருதத்திலிருந்து எடுத்துக்காட்டு.

 ததா+கத்த> ததாகத்த -  வருகை தந்தவர்

ததா+ அகத்தா > ததாகத்த - போய்மறைந்துவிட்டவர்.

இரண்டு சொற்களும்  முடிபொருமை  கொண்டன.

இதில் இன்னொரு சிறப்பு யாதெனின் இச்சொற்கள் முரண்பொருளன

ஆகுமென்பது.

 


இதை மனனம் செய்துகொள்ளுங்கள்

யானைகளைக் காப்பாற்றிய கவனமுள்ள ஓட்டுநர்

 https://twitter.com/i/status/1326377941463408640

தாட்சன்னியம் என்பது

 இச்சொல்லைப் பார்ப்போம்.

அரசன் போலும் அல்லது இறைவன்போலும் மனமிரங்கி அருளும் வல்லோனின் தாள்களில் சென்று வீழ்ந்து பெற்றமைவது தாட்சன்யம். இச்சொல் அமைந்த விதம்:

தாள் - கால்கள்; திருவடிகள்.

செல் - அடைக்கலம் அல்லது சரண்புகுதல்.

நீ. ( இது கருணை வேண்டுவோனைக் குறிக்கிறது ).

அம் - பெரிதும் அமைதல் குறிக்கும் விகுதி. இங்கு பெற்றமைதல்.

தாள்+ செல் + நீ + அம் = தாட்சென்னீயம் > தாட்சன்னியம்.

செல் என்பதன் முதல்நிலை எகரம் அகரமாகத் திரிந்தது.

இத்தகு திரிபுகள் பிற: எளியர் - அளியர், தெரிசனம் > தரிசனம்.

நீ என்பது நி என்று குறுகிற்று. இன்னொரு எ-டு:

பழம்நீ என்பதில் நீ என்பதும் நி என்றே குறுகிற்று.

அல்+ நீ + அன் ( அன்னியன்) என்பதிலும் நீ குறுகியவாறு கண்டுகொள்க.

பொருள்: நீ அல்லாத பிறன்.

இவ்வாறு தாட்சன்னியம் என்பது இரக்கம் என்று பொருள்பட அமைந்த சொல் எனக் கண்டுகொள்க. காலில்விழுந்து பெறுவது.

தயவு தாட்சன்னியம் என்பது பேச்சுவழக்கில் மரபுத்தொடர்.

செவ்வாய், 10 நவம்பர், 2020

பசுவென்னும் பதம்

இடையர்தம் வாழ்வில் பசுமையைப் புகுத்தியது  ஆக்கள் என்னும் பசுக்களே ஆகும்.  பசு என்னும் சொல்லும் தமிழரிடத்துப் பட்டி தொட்டிகளிலெல்லாம் வழங்கும் சொல். இது எப்படி இப்பொருளை அடைந்தது என்பதை அறிவோம்.

இடையர்களே பசுக்களை பெரிய அளவில் வளர்த்துப் பால் தயிர் மோர் வெண்ணெய் எல்லாம் விற்றுப் பண்டமாற்றும் பின்னர் பணமும் பார்த்தனர். பூசாரிமார் சிறிய அளவிலே பசுக்களை வைத்திருந்திருக்கலாம்.

இடையர்தம் வாழ்வில் பசுமை ஆக்கிய ஆக்கள் பசுக்கள் எனப்பட்டதானது , இந்த ஆக்கள் "பசு" என்ற பசுமை தந்த வாழ்வின் அடிப்படையில்  அவ்வாறு குறிக்கப்பட்டன. இந்த இடையர் சொற்பயன்பாடு,  நாளடைவில் எங்கும் பரவி ஆவிற்குப் பசு என்பதே பெயராகிவிட்டது.

பசு வென்பது பசுமை என்னும் பண்புப் பெயரின் கடைக்குறை. ஆகுபெயராய் ஆவைக் குறித்தது ஆயர்தம் பெருமையைக் காட்டும் பழநிகழ்வு ஆகும்.  பசுமை என்பது செல்வப் பெருக்கம்.  மாடு என்பதும் செல்வப் பொருள் உடைத்தாம். மாட்டைச்  செல்வம், ஆக்கம், பசுமை என்று தமிழர் கருதினர் என்பதைச் சொல்லத் தேவையில்லை.  பண்பாடு.

ஆதாரம், ஆதரவு என்ற சொற்களும் இத்திறத்தனவே ஆகும்.  எதிரிகள் ஆநிரை கவர்ந்த போது ஆ பற்று > ஆபத்து ஆனது. பற்றுதல் கவர்தலும் ஆகும்.

அறிக மகிழ்க.

 --------------------------------------------------------

 

குறிப்புகள்:

Pasu is a farming term as in English where "course" (taking a course or certain course) is a nautical term.  பொருள் பதிவுபெற்ற ஒரு சொல் பதமாகும்,  பதி+ அம் = பதம்.   இறையுணர்வு பதிந்த செய்யுள் பதிகம் - பதி + கு+ அம் .  கு இடைநிலை.  அமைவு காட்டும் அம் விகுதி அல்லது இறுதிமிகுதி. ( இறுதிநிலை)

ஒப்பீடு:  ஆ என்ற சொல்லும் பசுவென்ற சொல் போலவே,  ஆக்கம் குறிப்பதாகும்.  ஆதல், ஆகு, ஆகு+ அம் = ஆக்கம், என்பவும் இன்னுமுள்ள சொல்வடிவங்களும் இந்தக் கருத்தொற்றுமையைக் கொண்டுதருகின்றன. ஆக்கம் தருவது ஆ, பசுமை தருவது பசு. இப்பொருண்மை இன்னும் தொலைந்துவிடாமல் கற்படிவு (fossils) போல நம்மை எதிர்கொள்கிறது.

மாந்த வளர்ச்சி நூலைப் பின்பற்றி, மனிதன் எப்போது பண்டைவரலாற்றில் பசுபோலும் விலங்குகளை வளர்த்தெடுத்துப் பயன் காணத் தொடங்கி நன்மை பெற்றானோ,  அப்போதே அவனுக்குப் பசுமையானது வாழ்வில் உண்டாகத் தொடங்கிவிட்டது என்று  முடிக்கத்தான் வேண்டியுள்ளது. பசு என்ற சொல் பால்கறக்கும் பெண்மாட்டுக்குப் பெயராய், அப்பழங்கால முதல் இன்றுவரை தமிழில் வழங்கிவருகின்றது.  இது ஒரு பேச்சுமொழிச் சொல். பேச்சுமொழிச் சொற்களைத் தமிழிலும் குறைத்து எண்ணும் போக்கு, இன்றுபோலவே சங்க காலத்திலும் இருந்தது என்பது தெளிவு.  ஆவென்பது அரசர் கேட்புக்குரிய சொல். பசுவென்பது ஊர்ப்பிள்ளைகள் சொல். பிற்காலத்தில் மதங்கள் இறைகொள்கைகள் சிறந்து நின்ற காலை, பசுவென்பது மதத்துறைக்குள் புகுந்து வேறு பொருட்சாயல்களைக் கவர்ந்துகொண்டு இன்றும் காணப்படும் நிலையை அடைந்துவிட்டது .  இச்சொல்லுக்கான மதத்துறை விளக்கங்கள் பிற்காலத்தவை. பல மதநூல்களினுள்ளும் புகுந்து பசுவென்பது புதிய பொருண்மையையும் பொருட்சாயல்களையும் அடைந்தது.

கடவுட்சிந்தனை ஒவ்வொரு மனிதனுக்கும்  மனிதகுலத்துக்குமே வளர்ச்சிமுதிர்வில் வருவது,  சிறுபிள்ளைகளைப் பழக்கினாலே வருவது. தானாக வருவதில்லை.  

பிணி மூப்பு சாக்காடு உணவின்மை இன்னல்கள் எல்லாம் வரவேண்டும். சாவின் திறமறியாமல் திகைக்கவேண்டும்.  அப்போதுதான் சாத்திறம் ( சாஸ்திரம் ) அவன் அறியவும் பின் வெகுகாலம் சென்று அறிந்தன தொகுக்கவும் மனிதன் தொடங்குவான். பெரிய பெரிய ஞானிகட்கும் பிற்பாடு வருவதுதான் இறையறிவு.

முற்பிறப்புகளின் தாவற்பதிவுகளாலும் ஏற்படுமென்பர்.  அதுவும் பட்டறிவுதான்.

"கெட்டபின்பு ஞானி."


௷ய்ப்பு பின்

ஆடவர்க் குறிக்கும் விகுதிகள் அமைவு

 

தமிழில் ஆடவரைக் குறிக்கும் விகுதி அன் - ஆன் என்பன. இரண்டும் ஒன்றுதான். ஒன்று மற்றதன் திரிபு ஆகும். ஆன் என்பது விகுதியல்லாத போது ஆண் என்று திரியும்.

இரண்டிலும் முந்துவடிவம் ஆன் என்பதே.


ஆண் >< ஆன்.

ஆன் என்பது அன் என்பதன் நீட்சி ; அல்லது ஆன் என்பதன் முதனிலை குறுகியே அன் அமைந்துள்ளது. ஆனால் இவ்விரண்டிலும் மூத்தது அன் என்பதே. எவ்வகைச் சொல்லாயினும் நீட்சி பெறுதலும் குறுக்கம் பெறுதலும் முதனிலைக்கு இயல்பானதே, இவ்வாறு திரிந்தாலும் பொருள் திரியாதது போலி. திரிந்து பொருளும் மாறியபோது வேறு சொல்லாகிவிடுகிறது.

எடுத்துக்காட்டாக, ஆன் என்பது பொருள் மாறி பசுவைக் குறிக்குங்கால் வேறு சொல்லாகிவிட்டது. தனிச்சொன்னீர்மை அடைந்துவிட்டது.

அன் என்பதும் ஆன் என்பதும் ஆள் என்ற பெண்பால் விகுதியிலிருந்து வந்தனவாகும், இதைக் குமுகத்தில் பெண் தலைமைநிலை பெற்றிருந்த பழங்காலத்திலே அவள் ஆட்சி செய்தமையால் " ஆள் " விகுதி பெறக் குறிக்கப்பெற்றாள் என்பதைக் கூறும் எமது இடுகையில் கூறியுள்ளேம்.

பழங்காலத்தில் அல் என்ற விகுதியும் இருந்தது, அது ஒரு காலத்தில் அன் விகுதிக்கு இணையாக வழங்கியது, எடுத்துக்காட்டு:

பையல் > பையன்.

இது ஐகாரக் குறுக்கமாய்ப் பயல் என்றும் வழங்கும். இது பெண்மகட்கும் வழங்கியது. எடுத்துக்காட்டு: தையல் (பெண்).

இந்தப் பழங்காலத்தை இன்னும் நினைவு படுத்திக்கொண்டிருக்கும் சொற்கள்:

தோன்றல்(தலைவன்), இளவல்(தம்பி) எனச்சில.


ளகரமும் ணகரமாய் மாறும். -டு: களவாளி > களவாணி.

எனவே ஆள் என்ற விகுதி ஆண் என்று மாறுவது மற்றொரு வழியிலும் அமைவதால் ஆள் - ஆண் திரிபு இருபிறப்பிச் சொல்.

முடிவு: அல், அன், ஆன், அல்> ஆள், அன்> ஆன் > ஆண்e எல்லாம்

தொடர்புடைய திரிபுகள்.

மெய்ப்பு பின்

திங்கள், 9 நவம்பர், 2020

தீபாவளி

 நாள்தோறும் நண்ணுவதோ கொண்டாட்டம்?

    நாவினுக்கே ஊறுசுவைப் பலகாரங்கள்!

ஆள்சீரால் விண்வரையில் பண்மீட்டி,

    ஆங்ககலா நன்மகிழ்வில் நலம்தாருங்கள்.


கேள்நெஞ்சம் ஒத்துநின்று நம்வீட்டில்

    கேடகன்ற நன்னிலையைத் தழுவிக்கொண்டார்

நீள்மேரு நன்மலையில் சேர்துள்ளல்

    நீங்காமல் தீபஒளி தரவேசெய்யும்.


யாம்பெற்ற இன்பமெலாம் பெறுவையம்,

    யாவையுமே எமக்கென்பார் இலர்இங்கேதான்

மான்பெற்ற பிள்ளைகளாய் மேல்துள்ளும்

    மக்களுயர் நெஞ்சமகிழ் தீபநன்னாள்.


தீஎன்னும் சொல்லதிலே தமிழுண்டு

    தீபமெனில் பூவினொடு அம்முமுண்டே!

யார் இந்த சொற்கள்தமை வேறென்றார்

    யாமிதிலே கண்டதமிழ் நீவிர்கண்டீர்.


கல்தோன்றி மண்ணெழாமுன் குடிமூத்தோன்

    கன்னித்தமிழ் மைந்தர்களே கொண்டாடுங்கள்,

முன்தோன்றி தீயறிந்து தீபம்கண்டான்

    முத்தமிழன் மூத்ததமிழ் மெய்யன்பன் தான்.


பூவினொடு - பு என்னும் விகுதியோடு.  அம்மும் -

அம்மென்ற இறுதிநிலையும்

ஆள்சீரால் - ஆளுமையுடைய சீரால்.

ஆங்ககலா - அங்கு நீங்காத;

கேள் நெஞ்சம் - உறவினர் நெஞ்சம்

மேரு - இமைய மலை

மேல் துள்ளல் - மிகுந்த மகிழ்ச்சி

தீபநன்னாள் - தீபாவளி


மூவசைச் சீர்களும் மாற்றமாக நாலசைச் சீர்களும்

இறுதியில் நிற்க விரவிப் பாடப்பட்டுள்ள கவிதை.


கடவுள், தெய்வம், தேவன், தேவி, துரை மற்றும் God!

ஒரு சொல்லுக்கு ஒரு பொருள்தான் இருக்கிறது என்று நாம் எண்ணினால் நமக்கு மொழியறிவு  போதவில்லை என்று அறிந்தோர் சொல்லி நம்மை ஒதுக்கிவிடுவார்கள். ஒரே பொருளைக் கொண்டிலங்கும் சொற்கள் பல மொழிகளில் மிகவும் குறைவு என்றே தோன்றுகிறது.  யாம் கணக்கெடுக்க வில்லை என்றாலும் இதை நீங்களே பட்டறிவின் மூலமும் உணர்ந்திருப்பீர்கள் என்பது எம் துணிபாகும்.

ஆங்கிலச் சொல்லான,  கடவுள் என்று பொருள்தரும் God  (கா*ட்) என்பதைப் பார்ப்போமானால்   அதற்கு நேரான கிரேக்க மொழிச்சொல் "தியோ" என்பதாகக் கூறுவர்.  ஆனால் தியோ என்றால் "ஓடு (ஓடுதல்)" என்ற வினைச்சொல்லுடன் தொடர்புள்ள சொல் என்பர். இவ்வாறு சொல்லமைந்திருப்பது வியப்பினையே அளிக்கக்கூடும், இருந்தாலும் ஆய்வாளர்கள் கூறுவது இது.  காரணமொன்று இருக்கவேண்டும்.  பாடிப்பாடி தினம் தேடினாலும் ஓடி ஓடி மறைந்துவிடுபவர்தாம் கடவுள் என்று நீங்கள் நினைத்தால், யாமொன்றும் சொல்வதற்கில்லை. கடவுள் என்ற சொல்லும் நாம் தேடி அணுகுங்கால் கடந்து சென்றுவிடுகிறவர் என்பதை முன்வைப்பதாகத் தெரிகிறது. எளிதிற் கிட்டுபவராகத் தெரியவில்லை.

தெய்வம் என்ற தமிழ்ச்சொல்லும், தேய்தல் என்பதனுடன் தொடர்புடைய சொல்லாகும்.  பற்றாளன் பரவப் பரவ  ( அதாவது கும்பிடக் கும்பிட )  அவர் வந்து முன் தோன்றாமையால் நம்பிக்கை தேய்ந்துபோதலை உடைய, நாமறிதற்கு எளிதானவரல்லாத ஓர் ஆற்றலர் தாம்  " தெய்வம்" (தேவன், தேவர்)  என்று கூறலாம்.  எனினும் தெய்வம் என்ற சொல்லின் அமைப்பு வேறுவிதமாக அறியப்பட்டுள்ளது.  கடவுளைப் பற்றிய இடுகைகள் பல இங்கு உள்ளன. அவற்றில் தேய்வு பற்றியும் தெய்வம் பறியும் தொடர்புகண்டு கூறும் இடுகையை இங்குக் காண, சொடுக்குங்கள்:-

https://sivamaalaa.blogspot.com/2017/03/blog-post_5.html

(தீயைப் பற்றிய மனித சிந்தனை).

தேவு, தேவன், தேவி முதலிய சொற்களும் மேற்சொன்ன இடுகையில் தொடர்பு கண்டுள்ளன.

"காட்" என்ற ஆங்கிலச் சொல் ஓடுதலுடன் தொடர்புடையது என்று சொல்கையில்,  தமிழில் கிடைக்கும் துரை என்ற சொல், துரத்துதல் என்பதனுடன் தொடர்பு பட்டது என்பது தெரிந்துகொள்ளற் குரியது.

துர , துரத்து என்ற அடிச்சொல்லின் பரிமாணங்கள்:

துரந்தரன் -  பொறுப்பு வகிப்பவன்; ( துர+ அம் + தரு + அன் );

துரந்தரி  -   பொறுப்பு வகிப்பவன் ( அன் விகுதிக்குப் பதில் இ இறுதி);

துர . துரப்புதல் :  (இது துரத்துதல் என்ற பொருளின் திரிந்து தேடுதல் என்று பொருள் படுகிறது .)

துர > துரம் ( துர + அம்  = துரம் ( பொருள்: பொறுப்பு).

துர >  துரிதல் : தேடுதல்.

துர >  துரிதம் : (  துர+ இ + து + அம் ).  { துரத்தும்போதும் தேடும்போதும் ஓடும்போதும்  ஏற்படுவதுதான் விரைவு, வேகம். }

துர < துரு > துருப்பு  (படை ).  எதிரியை துரத்தியடிக்க வேண்டியது துருப்பு.

துர < துரு > துருவம்:  துரத்தி இறுதியில் அடைவது துருவம் ( துருவிச் சென்று காண்பது)

துர > துரை ( வேலையாட்களைத் துரத்தி வேலைவாங்கி அவர்கள் வேலைகளை துருவி ஆய்பவன் துரை ).  துருவல் என்பதற்கு ஆராய்தல் என்றும் பொருள் உண்டு.

பெங்களூர் ரமணியம்மாள் பாடிய ஒரு பத்திப்பாடல் துரை என்ற சொல்லை இடமும் பொருளும் கனியப் பயன்படுத்துகிறது:

தணிகைமலைப் பெருந்துரையே வாவாவா---  என்

தயாநிதியே தரும துரையே வாவாவா.




ஞாயிறு, 8 நவம்பர், 2020

தன்னிலை இழந்த மயில்.

 முதிர்ந்த மயிலொன்று மூவுலகும் காணாத 

அதிர்ந்த ஆட்டமொன்று வியந்திட ஆடிற்றே

புள்ளியும் அதற்கில்லை புள்ளியும் கொள்ளாமல்

நள்ளிரவில் தன்வலிமை நலிந்திட இழந்ததுவே

தானாடிய மேடையை,  வான்துயர் வருத்திடவே;

நிலையில்லா இவ்வுலகை நிலையென் றெண்ணுவதோ?

மலைகளும் தோன்றுவதும் மறைவதும் இயல்பாகும்

தழங்கிற்று தன்னையே தள்ளிவிட்டார் என்றின்று!

விழுங்கினரே யானறியா வீண்நிலையில் என்றபடி,

போகட்டும் மயிலேயது கிட்டவில்லை என்றாலோ

நோகுமனம் தேற்றிடுவாய் வெட்டென்று மறந்திடுவாய்.

ஒன்றுமில்லா உலகினிலே ஒட்டாது வாழ்ந்திருப்பாய்

சனி, 7 நவம்பர், 2020

தீவளி - தீவாளி - தீபாவளி.

நன்றாகப் படித்த பண்டிதன்மார் என்போர்,  நல்ல தமிழில்  ஒல்லுவழி எதையும் உரைத்தல் வேண்டுமென்னும் உயர்நெறி போற்றுவார் ஆவர். தமிழில் பேச்சுமொழியிலிருந்து பண்டைச்சொற்களை மீட்டுருவாக்கம் செய்ய எண்ணி முயல்பவர் யாரெனினும்  அறவே படிப்பறிவில்லாதாரை அண்டிப் பேசியே அவர்கள் வழங்கும் செற்களை ஆய்ந்து பின்னர்தான்  ஓர் ஐந்து விழுக்காடு சொற்களையாவது அறிந்துகொள்ளவியலும்.அவர்களின் வாத்தியார்களால் பன்முறை திருத்தப்பெற்ற நாவினர்வழி இச்சொற்களை அறிதல் இயலும் என்று யாம் நினைக்கவில்லை.

இப்போது தீபாவளிப் பண்டிகை விரைந்து வந்துகொண்டிருக்கிறது.  தீபாவளியைத்  தீவளி என்று பேசிய படிக்காதவர்களை யாம் கேட்டு வியந்ததுண்டு. வியத்தற்கு ஏனென்று வினவின்,  அஃது விளக்கற்கு எளிது காண்பீர்.  "நிலம் தீ நீர் வளி விசும்போடைந்தும் கலந்த மயக்கம் இவ்வுலகம் ஆதலின்" என்றே தொல்காப்பிய மாமுனி --  பல்புகழ் நிறு த்தப் படிமையோன் --  பாடியுள்ள படியினாலே,  மற்றும் தீயும் வளியும் இவ்வைந்தனுள் இரண்டு என்னும் ஓர் உண்மையினாலே,  வியப்புமில்லை, அயிர்ப்புமில்லை என்பதேயாம்  அதற்கு விடை கூறுவது ,  கண்டுகொள்க.

தீபாவளி என்பதும் வடக்கில் தீவளி அல்லது தீவாளி என்றே வழங்கும்.  தீவளி என்பதற்கும் தீவாளி Diwali எனற்பாலதற்குமுள்ள வேற்றுமை மிகச் சிறிதேயாகும்.   ஆனால் தீபாவளிக்கும் தீவாளிக்கும் உள்ள இடைவெளி சற்றே மிக்கதாகும்.

தீபாவளி என்பதைப் பார்க்கலாம்.  தீ என்பது நெருப்பு.  பா - வினைச்சொல் பரவுதல்.   வளி - காற்று.  இது தீபரவும் காற்று என்று பொருள்தருகிறது. இது வினைத்தொகை, இதில் ஐந்து பூதங்களில் இரண்டு தரப்பட்டு ஒரு சொல்லாகியுள்ளது.  ஆகவே தீபாவளி என்பது இயற்கை  ஆற்றல்களுக்கு எடுக்கப்படும் ஒரு விழா  என்றும் பொருள்கூற வேண்டியுள்ளது. இன்றையப் பேச்சில் சொல்வதானால், அக்கினி பகவானுக்கும் வாயு பகவானுக்கும் எடுக்கும் விழா ஆகிறது. தீக்கெல்லாம் மூலமாவது சூரியனாதலின் அது சூரியனையும் உள்ளடக்கும். தீபத்தையும் உள்ளடக்கும். தீயைப் பரப்பும் காற்றும் அடங்கிவிடும்.

தீபாவளிக்கு எண்ணிறந்த விளக்கங்கள் உள்ளன. மிக்கப் பழங்காலத்தில்  தீப ஒளியாகவும் தீப ஆவலி என்னும் நாட்டியமாகவும் அது பரிமாணம் பெறுதற்கு வெகுகாலத்தில் முன்பாகவே, அது தீயையும் பாவும் வளியையும் இயற்கை ஆற்றல்களாய் வணங்கப் பெற்ற பெருமையை உடையதாய் இருந்த ஓர் பண்டிகை  என்று காணக்கிடக்கின்றது அறிக.

இனிப் பண்டிகை ஆவதென்ன?  இகவுதல் என்றால் பெருகுதல், மிகுதியாதல். பண்டு என்றால் முற்காலத்தில்.  முற்காலத்தில் மக்கள்  மிக்குப் பின்பற்றி இன்று நம் காலத்திலும் வந்தணைந்த ஒரு மகிழ்துள்ளல் நாளே பண்டிகை. பண்டு காலந்தொட்டு இகவிய நாள்  பண்டு+ இக(வு)+ ஐ = பண்டிகை.

இயற்கையை ஒட்டிவரும் தீபாவளியை அணைத்து, அதில் நம்மை நாம் கொண்டு பிணைத்து, மக்களையும் இணைத்துச் செல்வோம்,  வருக.

காலம் நோய்மிக்கது ஆகலின்,  கவனம் கடைப்பிடித்துக் கொண்டாடுதல் கடமையாகும்.


குறிப்புகள்:

பேரகராதியிலிருந்து:

பாவு-தல் pāvu-tal (p. 2635)

பாவு¹-தல் pāvu- , 5 v. intr. 1. To extend; பரவுதல். மைப்பாவிய கண்ணியர் (திருவாச. 24, 6). 2. To be diffused; to pervade; வியாபித்தல். (W.) 3. To spread, as creepers on the ground.

பாவு¹-தல் pāvu- , 5 v. intr. 1. To extend; பரவுதல். மைப்பாவிய கண்ணியர் (திருவாச. 24, 6). 2. To be diffused; to pervade; வியாபித்தல். (W.) 3. To spread, as creepers on the ground; to ramify, as family connections; படர்தல். (W.) 4. To touch, skim along the ground; ஊன்றுதல். கால் நிலத்துப் பாவாமையால் (சிலப். 23, 190, அரும்.). — tr. 1. To lay in order; to pave, ceil with boards; தளவரிசை யிடுதல். 2. To spread; பரப்புதல். (யாழ். அக.) 3. To seed closely for transplanting; நாற்றுக்கு நெருக்கி விதைத்தல். (W.) 4. To transplant; நாற்று நடுதல்Loc. 5. To leap or jump over; தாண்டுதல். (W.)

பாவு pāvu (p. 2635)

பாவு² pāvu , n. < பாவு-. 1. [M. pāvu.] Warp; நெசவுப்பாColloq. 2. Measure equal to double the arm's length; இரண்டு பாகவளவு. (G. Tj. D. I, 134.) 3. A measure of weight equal to two palamஇரண்டுபலங்கொண்ட நிறுத்தலளவை. (G. Sm. D. I, i, 283.)

இகவுதல் பாவுதல் பரவுதல் என்பவற்றில் வு என்பது வினையாக்க விகுதி. அடிகளாவன இக பா பர என்பனவாகும்.

தீ பாவளி  -  இது உம்மைத் தொகை.

பா வளி இது பரவும் வளி என, வினைத்தொகை.

தீப ஆவலி :  ஆவலி ஒரு நடனவகை.

தீப ஒளி : இது தீபாவளிக்கு இற்றைப் பெயர்.


மெய்ப்பு பார்க்கப்படும் 


 


ராக்காயி, ராக்கம்மா

 இராக்கம்மா, இராக்காயி என்பவை அம்மனின் பெயர்கள்.  சிற்றூரால் ஆளப்படும் சொற்கள் இவையாகும்.

    இது அமைந்த விதம்:

    இரக்கம் உடையவள் அம்மன்.

    இரக்க +  ஆயி =  இராக்காயி > ராக்காயி.

    இரக்க + அம்மா = இராக்கம்மா> ராக்கம்மா.

    இவ்வாறு திரிந்த இன்னொரு சொல்:  பக்கம் > பட்சம் > பக்ஷம்.

    மோள் > மோள்+சு+அம் = மோட்சம் > மோக்கம்.

    மோள் > மோள்+கு +அம் > (மோட்கம்)> மோக்கம் > மோட்சம்.

    மோள் என்பது மேல் என்பதன் திரிபு. கேரளத்தில் இவ்வழக்கு உள்ளது. மேலுலகு என்பது பொருள்.

இதைப்பற்றிய முழு நீள இடுகை நீக்கப்பட்டுள்ளது. சுருக்கமான செய்தி மேற்கண்டபடி.

மறுபார்வை பின்.


வெள்ளி, 6 நவம்பர், 2020

அங்கீகரித்தல்

 அங்கீகரித்தல் என்பதை முன்னர் விளக்கியுள்ளேம். இங்கு கண்டுபிடிக்க இயலவில்லை. இதை வேறு வலைத்தளங்களில் வரைந்திருத்தலும் கூடும் பல ஆண்டின்முன்.  இவற்றைத் தேடிக்கொண்டிருக்காமல், அதை இங்கு தருவேம்.1

இது முற்காலத்து எம் நெகிழ்வட்டுகளில் உள. floppy discs.

அங்கு .  ( அதாவது முன்வைக்கப்பட்ட மாத்திரத்தில் )

ஈர் -  ( ஈர்த்தல்:  பெற்றுக்கொள்ளுதல், ஏற்றல், தன்பால் இழுத்துக்கொள்ளுதல்).

இது ஈ என்று குறைந்தது கடைக்குறை.

கரித்தல் -  இது சில இடுகைகளில் விளக்கப்பட்டுளது.  ( கு+ அரு+இ+தல்)

கு - வந்து சேர்தல் குறிக்கும் இடைச்சொல். 

அரு = தன் பால்.  (  அருகில் ).

இ - வினையாக்க விகுதி.

இது பல சொற்களில் உள்ளது. எ-டு:  ஆமோதி(+தல்).  ஆமென்று ஓதுதல். ஓது+ இ. வினையினின்று வினையாக்கம்.

ஆகவே  ஏற்றுக்கொள்ளுதல் என்பது இப்புனைசொல்லின் திரண்ட பொருள் ஆவதாம்.

" அதை அதிகாரி முன்னாலே வச்சாங்க. அவர் ஈகரிச்சுக்கிட்டாரு" என்று முன் காலத்தில் பேசப்பட்டு, பின்னர் அங்கு என்பது முன் ஒட்டிக்கொண்டு ஒரு சொன்னீர்மை எய்திச் சொல் அமைந்திருக்கலாம். எழுத்தில் வரும்போது ஒரு சொல்லாய்ப் புனைவுறலானது. முன்னோர் பேசிய சொல்வழக்குகளை அறிய வழியொன்றுமில்லை.  எழுத்தில் இருந்தன கிடைத்தவை சில, நூல்கள் வாயிலாகவே.

அறிக மகிழ்க.



தருவேன்,  இதன் பன்மை தருவேம் (ஏம் விகுதி).

வியாழன், 5 நவம்பர், 2020

வழிபாடு - இன்னொரு சொல்

 

வழிபாடு இன்னொரு சொல்

வழிபாடு என்பதை எழுத்துத் தமிழில் சொல்லப் பல சொற்கள் உள்ளன. இறைவழிபாடு என்று இன்னும் தெளிதிருத்தமாகச் சொல்வதும் உண்டு.

பழந்தமிழ் நூல்களிலிருந்து "பணியல்" என்ற சொல்லும் கிடைக்கின்றது. இந்தச் சொல்லைப் பயன்படுத்தி அது வழக்கிறந்துவிடாமல் காப்பாற்றுவதும் தமிழர் கடனாகும். இது பணி(தல்) என்ற வினையினின்று அமைந்த சொல்லே ஆகும்.

ஒரு வீட்டில் ஒரு விழாப்போல எடுத்துப்ெரிய அளவில் பணியல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. யாமும் சென்றிருந்தோம்.  அப்போது ஒருவர ்  வந்து உரையாடத் தொடங்கினார்.  "இவர்கள் ரொம்ப மும்முரமாகச் சாமி கும்பிட ஆரம்பித்துவிட்டார்கள்" எ்ன்றார் அவர்.  இவர்கள் என்றது வீட்டாரை.  இதிலிருந்து  "சாமி கும்பிடுதல்" என்பதே பணியல் என்பதற்குப்ேச்சு வழக்குச் சொல் என்பதை அறிந்துகொள்ளலாம்.

பணியல் என்பது பணிதல் என்ற வினையடிச் சொல்லே என்பது யாம் சொல்லாமலே உங்கட்குப் புரியும்.


மெய்ப்பு பின்


 


திங்கள், 2 நவம்பர், 2020

குதர்க்கம்... (பேசி மயக்குதல்)

 கவி கா.மு ஷெரிப் ஒரு சிறந்த கவிஞர்.  சீறாப்புராணத்திற்கும் உரை வரைந்துள்ளார் இவர். இவரெழுதிய இருகுரலிசைப் பாடலில் பெண்- ஆண் பாடுவதாக வரும் இரு வரிகளை இங்குக் காண்போம்.

பெண்:  குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்குக் கற்றீரோ?

ஆண்:    உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தன்னிலே!

இந்த உரையாட்டுப் பாடல் நன்றாகவே உள்ளது.

இதில் வரும் குதர்க்கம் என்ற சொல்லையும் அதற்கு முன்பாக தர்க்கம் என்னும் சொல்லையும் இங்கு ஆய்ந்து காண்போம்.

சொல்லுக்குச் சொல், வார்த்தைக்கு வார்த்தை தருதலே " தருக்கம் " ஆகும்.

தருதல் என்பது வினைச்சொல்.

தருக்கு என்ற அடிச்சொல் தருதல் என்பதனடித் தோன்றியதே ஆகும்.  பதிலுக்குப் பதில் பேசிவிட்டால், " நல்லாக் கொடுத்தான் பாரு!" என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.  இத்தகு  சொல்லாடல்களின் தொடர்பில் தருதல் என்பது முன்மை பெறும் கருத்தாகும்.  தருக்கு என்பதில் தரு - பகுதி; கு என்பது விகுதி ஆகும்.

தருக்கு என்பது உலகவழக்கில்  தருதல் என்ற அடிப்படைக் கருத்தைக் கடந்து அகங்கரித்தல், ஊக்கமிகுதல்  என மட்டுமின்றி சில தொடர்புடைய மனவுணர்வையும் நடத்தையையும் குறிக்கலாயிற்று.   பல சொற்கள் இவ்வாறு பொருள்விரிவுறும்.  தருக்கு என்பது செருக்கு என்று கூறுதலும் கூடும்.  வீண்வார்த்தையாடுதலை மக்கள் விரும்பாமையே இத்தகு பொருள்விரிவுக்குக் காரணம்.

தருதல் என்ற வினையடிப் பிறந்த சொற்கள் ஏராளம்.  அகப்பை அல்லது சட்டுவத்துக்குக் கூட இவ்வினையிலிருந்து பெயர்கள் ஏற்பட்டுள்ளன.  அது தருவி,  தறுவி என்பனவாகும்.  சட்டியிலிருந்து குழம்பைத் தருவிப்பது அகப்பை அன்றோ?  தரு என்பது தார் என்று திரிந்து, தாரம் என்று மனைவியையும் குறிக்கும்.

இப்போது தருக்கு என்பதற்கே திரும்புவோம்.  இது அம் விகுதி பெற்றுத் தருக்கம் என்றாகும். அப்போது வாதத்தையும் ( சொல்லாடல்) குறிக்கும்.

தருக்கம் என்பது தர்க்கம் என்றும் குறுக்கி எழுதவும் பேசவும் படும். 

இந்நிலையில்  சிறு சிறு தருக்கங்களைக் குறிக்க ஒரு சொல் எழுந்தது.  அது " குதர்க்கம்" என்ற சொல்.    குதர்க்கம் என்பது  குறு தருக்கம் என்பதன் குறுக்கமாகும்  குறு என்ற சொல்,  றுகரம் இழந்து கு என்று நின்றது,  இது கடைக்குறை ஆகும்.

குறு >  கு

கு + தர்க்கம் >  குதர்க்கம்.

குதர்க்கம் பேசியும் ஒருவரை மயக்கலாம் என்கிறார் கவி.

மெய்ப்பு பின்பு



 


 

சாமந்தன் - புணரியல் விளக்கம்.

 நிலைமொழியும் வருமொழியும் இணைகின்ற போது, சொற்கள் எவ்வாறு மாறும் என்பதற்குப் புணரியல் ( சொற்புணர்ச்சி இலக்கணம்) சில விதிகளைத் தருகிறது. ஆயினும் இதிற்சொல்லப்படும் இலக்கணம்,  ஒரு வாக்கியத்தில் அல்லது கவிதை வரியில் இரண்டு முழுச்சொற்கள் இணைதற்கான இலக்கணமே ஆகும்.  ஒரு சொல்லை அமைக்கும்போது அதில் நிலைமொழி - வருமொழிகள் இல்லை. எடுத்துக்காட்டாக,  என்று என்பது என்+து என்ற இரண்டும் சேர்ந்தமைந்த சொல்லாகும்.  இவற்றுள் என் என்பது நிலைமொழியும் அன்று; து என்பது வருமொழியும் அன்று. எனவே சொல்லமைப்பில் வேறுபட்டு இணைதல் நிகழும்.  எடுத்துக்காட்டாக:

என் + து =  என்று ( தமிழில்)

என் + து =  எந்து   ( மலையாளம்).

தமிழிலும் இவ்வாறு சொற்கள் அமையும்.  உதாரணமாக:

முன் + தி  =  முந்தி

பின் + தி =  பிந்தி.

ஆசிரியர் சிலர் இவற்றையும் காட்டுவர்:

மன் + திரம் =  மந்திரம்.  

தன் + திரம் = தந்திரம்.

இங்குத் திரம் என்பது  திறம் என்பதன் திரிபு.  இது விகுதியாய்ப் பயன்பட்டது.  இறைவன்முன் வைக்கப்படும் ஒரு வேண்டுதலை  ஓதுவதன் மூலம் நிலைபெறுவித்தலே மந்திரம் என்பது.  மன்னுதல் -  நிலைபெறுவித்தல். தன் சொந்தத் திறமே தந்திரம் என்பது.  மந்திரம் என்ற சொல்லை அமைக்கக் காரணமாகியது ஓதுவோன் அதனை வேட்போன் ஆகியோரின் நம்பிக்கையாகும்.  

மன் என்ற அடியிலிருந்தே மனிதன்  ( மன்+ இது + அன் ). மாந்தன் ( மன்> மான்; மான்+ து +அன்),  மன்+ தி > மந்தி முதலிய சொற்களும் அமைந்தன.  மாந்தன், மந்தி முதலியவை, மான்றன், மன்றி என்று அமையவில்லை. மாறாக, பல்> பன் > பன்றி (பன்+தி) என்று அமைந்தாலும்,  பல் > பன் > பன்னி என்ற சொல்லும் வழக்கில் உள்ளது.  வென்றி என்ற சொல்,  வெல் > வென்> வென்றி,  வெல்+தி : வெற்றி என்று இருவகையில் வருமெனினும் வெந்தி என்று வரவில்லை.

இனிச் சாமந்தன் என்ற சொல் காண்போம்.

சாமந்தன் என்போன் சார்பாக ஓரிடத்தை ஆள்பவன்.  இது:

சா : சார்பாய்,

மன் - ஒரு மன்னனின் கீழ்

தன் - தன் ஆளுகையை மேற்கொள்பவன்.  அல்லது சார்பு மன்னன்.

இங்கு,  சார்மன்னன் என்று சிந்தித்து சாமன்னன் என்று அமைத்திருக்கலாம். அப்படியானால் செத்துப்போகும் மன்னன் என்று அமங்கலப் பொருள் தோன்றுமாகலின், அதை மாற்ற ஒரு து இடையில் வந்தது.

சார் + மன் + து + அன் ,  இதில் ர் என்பதை விலக்க, சாமந்தன் என்று அமைந்தது புனைந்தோன் திறனே.

இது சாமன்றன் என்று அமையவில்லை. 

இடைநிற்கும் ரகர ஒற்று மறைதற்கு எ-டு:  சேர்+ மி > சேமித்தல்.

(சேர் + ம் + இ ).

இவ்வாறு ஓர் உத்தியைக் கையாண்டுள்ளனர்.


மெய்ப்பு பின்



 

ஞாயிறு, 1 நவம்பர், 2020

மயிர் என்பது

மா என்பது கருமை நிறத்தையும் குறிக்கும்.  இச்சொல்லுக்குப் பல பொருள்கள். ஆதலால் "நிறத்தையும்" என்றோம்.

பேச்சு  வழக்கில் மாநிறம் என்றால்,  மிகுந்த கறுப்பைக் குறிக்காமல், இடைப்பட்ட ஒரு நிறம் குறிப்பதாகும்.

மா நிறம் என்பதனுடன் தொடர்புகொண்ட இன்னொரு சொல்லைக் கவனிப்போம்.

மா இர் >   மை இர் >  மயிர்.

இதில் மா என்பது மை ஆகிவிட்டது. மை என்பது "ம" ஆனது. 

சொல்வரலாற்றில் மைக்கு முந்தியது மா. அதனால் அதைக் காட்டினோம். நீங்கள் மை+ இர் என்ற முடித்துவிடலாம் என்று நினைக்கலாம். அப்படியே நீங்கள் வைத்துக்கொள்வதில் எமக்கு மறுப்பு ஒன்றுமில்லை. மை எப்படி வந்தது -- யாரும் கேட்டால் அப்போது நீங்கள் விரித்துக்கொள்ளுங்கள்,

இதுபோல் திரிந்த இன்னொரு சொல்:   மை+ இல் =  மயில் ஆகும்.   இல் என்பது
இடம் என்ற பொதுப்பொருள் உடைய சொல் மைப்புள்ளிகள் போலும் இடங்களை உடைய தோகைப் பறவை.

இர் என்ற இறுதி,  இரு என்பதோடு உறவுற்ற சொல்    இரு > இர்; அல்லது இர்> இரு. எவ்வாறு ஆயினும் உணர்ந்துகொள்வதே முதன்மை யானது ஆகும். இரு என்ற வினைச்சொல் முன்மை வாய்ந்தது.  வினைச்சொல் எந்த மொழியில் உள்ளதோ அங்குதான் பெயர் ஏற்பட்டது என்பது சொல்லியலார் முடிபு.

மை இர் என்பது இணைந்து,  மயிரானது.  முதனிலைக் குறுக்கம்..

மயிர் என்பது மசிர் என்று வழங்குவது  ய- ச திரிபு.  இது பல மொழிகட்குப் பொதுவான திரிபு.  தமிழில் வாயில் > வாசல்,  காண்க.

மெய்ப்பு - பின் வரும்.

வெள்ளி, 30 அக்டோபர், 2020

யானைக்குட்டி

 இரண்டு வயது  யானைக்குட்டி

புரண்டு விழுந்து  சண்டைபோடும்

பிறந்த தாயும்  தந்தை யென்றும்

சுரந்த அன்பு  காணவில்லை.


அன்னை வந்து  அணைத்த போதும்

அஞ்சுதலில் முட்டும் கோபம்

பின்னை வந்து மனிதர் பாலும்

பீடையாகிப் போனதாமோ!


பிள்ளைகள் அம்மாவுடன் சண்டையிடுதல், இந்த யானைக்

குட்டி அதன் தாயுடன் சண்டையிட்டது போன்றது.  விலங்குக் குணம்

மானிடன் அடைந்துவிட்டானோ என்பது இந்த வரிகள்

எழுப்பும் கேள்வியாகும்.


பிறந்த -  தான் பிள்ளையாய்ப் பிறந்த

அஞ்ச்சுதல் இல் -   அச்சமில்லாமல்

சுரந்த -  பிள்ளையிடம் ஏற்பட்ட

மனிதர்பாலும் -  மனிதரிடத்தும்

பீடை - நோய்.

மணிமேகலைக் காப்பியம்: அட்சயபாத்திரம்.

 ஒன்றைப் பிறருக்கு -  அது வேண்டியோருக்கு -  அளிப்பது ஓர் அருள், ஓர் அன்பு. இதை "அளி" என்று இலக்கியங்கள் புகழும்.  இது குழைவையும் குறிக்கும்.  " அளிந்த ஓர் கனி " என்பது திருவாசகம். இரக்கமும் குறிப்பது ஆகும்.

அட்சயப் பாத்திரத்திலிருந்து மணிமேகலை அள்ளி அள்ளி மக்களுக்கு வழங்குகிறாள். எல்லோருக்கும் அமுதளித்து இரக்கம் காட்டுகின்றாள்.  இப்பாத்திரம் அள்ள அள்ளக் குறையாதது.

அட்சயப் பாத்திரம் என்பதில் அட்சய என்ற சொல்லை அறிவோம்.

அளிச்செயல் பாத்திரம்

அச்செய பாத்திரம்

இங்கு  ளி என்ற எழுத்துக் குறைவுண்டது.  லகர ஒற்றிறுதியும் கெட்டது.

இந்த நிலையில் இது அட்சய என்று மாறி அமைந்தது. இஃது ஓர் ஒலிநயமூட்டுத்

திருத்தம்.

இந்தத் திரிபுகளையும் கவனித்துக்கொள்ளுங்கள்:

இடுக்கண் > இடுக்கட்டு > இக்கட்டு.  (டு இழப்பு)

சகக்களத்தி >  சக்களத்தி.  ( க இழப்பு)

பகுக்குடுக்கை >  பக்குடுக்கை  (கு இழப்பு)

சறுக்கரம் >  சக்கரம் ( று இழப்பு)

மக + கள் = மக்கள்.

இச்சொல் ( அட்சய ) ஒரு பலபிறப்பிச் சொல்.  

அருட்செயல் >  அட்செய  > அட்சய என்றுமாகும். ரு, ல் இழப்பு.

மற்றோர் மாற்று விளக்கம்:

அட்சய பாத்திரம் http://sivamaalaa.blogspot.sg/2016/01/blog-post_29.html



வியாழன், 29 அக்டோபர், 2020

சனாதன தருமம்.

 சனாதன தர்மம் என்பது " இந்து மதம்" என்பதன் ஒரு பெயர். இதனை மதம் என்பதை விட ஓர் வாழ்நெறி என்றுதான் கூறவேண்டும். இந்திய உச்ச நீதி மன்றமும் தன் தீர்ப்பொன்றில் இவ்வாறே கூறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இதையே தீர்ப்பின்பின் கூறினார்.  இதுவே உண்மையுமாகும்.

இது இஸ்லாமிய கிறித்துவ மதங்களைப்போல் ஒருவரால் அமைக்கப்பட்டதன்று.

ஒரே மதநூலை அடிப்படையாய்க் கொண்டதுமன்று.

கருத்துகளும் கடைப்பிடிக்கும் விதிகளும் இடங்கட்கேற்ப சற்று மாறுபடுதலும் இவ்வாழ்நெறிக்கு இருக்கலாம். எடுத்துக்காட்டாக திருமணங்களில் தாலிகட்டுதல் ஒரு மதச்சடங்கோ இல்லையோ, அது தென்னாட்டில் உள்ளது; வட இந்தியாவில் இல்லை. பூசை முறைகள் தென்மாநிலங்களில் ஒரு விதமாகவும் வடமாநிலங்களில் வேறு விதமாகவும் இருக்கலாம். விளக்கங்களும் வேறுபடலாம்.

சனாதன என்பதை மட்டும் இங்குக் காண்போம்.

ஒரு குறிப்பிட்ட கூட்டத்தார் தமக்குள் கொள்வனை கொடுப்பனை மூலம் தொடர்புடையவர்களாய் இருக்கும் நிலையில், ஒரு கோவிலை அமைத்துக்கொள்கிறார்கள். அவர்களில் ஒருவரே அதில் பூசாரியாய் இருக்கிறார். கோவிலில் மூல தேவதை பகவதி அம்மன் என்று வைத்துக்கொள்வோம். அத் தேவதையே அங்கு பெரிதாய் அமைந்துவிடுகிறது.  மற்ற  தேவர்களின் சிலைகளும் சிற்றளவினவாய் அமைக்கப்படுகின்றன. பெருவிழாக் காலங்களில் ஒரு பிராமணப் பூசாரியை (போற்றியை) வரவழைப்பதுண்டு. மற்றவேளைகளில் உள்ளூரில் எப்போதும் பார்ப்பவரே காரியங்களைப் பார்ப்பார்.

இங்கு நடப்பவை எல்லாம் விருப்பப்பட்டு அவர்களே ஆற்றிக்கொள்ளும் கடமைகள் தாம்.  தன்னால் ஆனவற்றைத் தான் செய்து வழிபாடுகள் நடைபெறுகின்றன.

தன்  ஆ தன   (தன்னால் ஆன தன்  செயல்கள்).

தனாதன 

இதில் தன் என்பது சன் என்று த- ச திரிபு விதிப்படி திரிகிறது.

தன்  ஆ தன >  சனாதன.

தன்னால் ஆன தன் பொருட்களாய் வைத்து :  அதாவது,  மாலை போடுதல், பூக்களைக் சொரிதல், சந்தனம் குங்குமம் வைத்தல், திருநீறு வைத்தல், பால் வைத்தல், நீர்வைத்தல்  சர்க்கரைப் பொங்கல் வைத்தல் என்று விரும்பியன வைத்து வழிபடுவர்.

தன என்றால் தன்னுடையவை.   அ (தன என்பதில் )  பன்மை.  தனது என்பதில் து ஒருமை.

சமஸ்கிருதத்தில் தன் என்பது சன் ஆனதுதவிர மற்றவை மாற்றமில்லை.

த என்பது ச ஆவது ஒரு மோனைத் திரிபு. பல சொற்களில் காட்டப்பட்டுள்ளது. பழைய இடுகைகள் காண்க.  ஓர் எ-டு:

தன்-கு > தங்கு > சங்கு > சங்கம் 

புலவர்கள் தங்கி, அரசன் தந்த சோற்றையும் குழம்பையும் உண்டுவிட்டு,  கிடைப்பவற்றைப் பெற்றுக்கொண்டு, கன்னா பின்னா என்று கவியைப் பாடி அதனாலும் பரிசில் பெற்றுக்கொண்டு கூடியிருப்பது சங்கம்.  தங்கு என்பதில் வந்த சொல்.  தான் > தன்,  கு என்பது சேர்விடம் குறிக்கும் உருபு இங்கு சொல்லாக்கத்தில் வந்தது.

இந்து மதத்தில் தன்னைத் தான் அறியவேண்டும், இறைவனை அதிலிருந்து கண்டுபிடி என்று சொல்வார்கள்.  பூசை (பூ +செய்: ) என்பது ஒரு கருவிபோன்றதே. உள்ளம் பெருங்கோயில் என்றார் மாமூலர்.  தானே அறிக என்பது இந்துமதம்.

தன் ஆ தன > சனாதன என்பது சரியான பொருத்தமாய் உள்ளது.

பின் வந்து பார்த்துப்

பிழைகள் இருந்தால் திருத்துவோம். 

நன்றி. 


Sanātana Dharma (Devanagariसनातन धर्म, meaning "eternal dharma", or "eternal order")[1] is an alternative name for Hinduism used in Hindi alongside the more common Hindu Dharm (हिन्दू धर्म).[2][3]

Long time ago Even Buddhism or Jainism were thought to be within the fold.

முகக்கவசம் அணிந்து

தொலைவு கடைப்பிடித்து,

தூய்மை போற்றி

நோயினின்று காத்துக்கொள்ளுங்கள்.






செவ்வாய், 27 அக்டோபர், 2020

சன்னிதானம்

 கோவிலில் உள்ள தெய்வச்சிலைக்குக்  கால் கை தலை எல்லாம் இருக்கின்றனவே, சிலவற்றுக்கு இரண்டுக்கு மேற்பட்ட கைகள் இருக்கின்றனவே  இது எவ்வாறு என்று கேட்போருண்டு. கோவிலென்பதே ஒரு மனிதனுக்குத் தலை, உடம்பு, என்றெல்லாம் இருப்பதுபோலவே வடிவமைக்கப்பட்டதே ஆகும். அங்கிருக்கும் தெய்வச் சிலையும் மனிதனைப் பின்பற்றியே அமைக்கப்பட்டதே ஆகும். கைகள் இரண்டுக்கு மேல் இருத்தலானது சில கருத்துகளை எடுத்துச்சொல்ல அமைக்கப்பட்டனவே ஆமென்க.  நான்கு திசைகள் உள்ளன.  இதைச் சித்திரத்தாலோ சிற்பத்தினாலோ  எடுத்துச் சொல்வதென்றால் கைகளையோ தலைகளையோ அமைத்துச் சொல்லலாம். இவ்வாறு சிந்தித்துத்தான் சிலைகளை அமைத்தனர்.சிலைகள் மனிதனால் அமைக்கப்பட்டவை;  அவை கருத்துகளை வெளிக்கொணர்கின்றன. 

இவற்றைத் திருமூல நாயனாரின் பாடல்கள்  (திருமந்திரம் ) வாயிலாக அறிந்துகொள்ளலாம். இங்கு சன்னிதானம் என்ற சொல்லை அறிந்துகொள்வோம்.

கோவிலும் மனிதன் உடலமைப்பைப் போன்றது.  கோவிலுள் புகுதல் மேற்கொள்கின்றபோது தன்னில் தான் புகுதல் செய்கின்றோம்.  கோவிற் சிலையும் தான் போலவே அமைக்கப்பட்டுள்ளது.  ஆகவே தன்னில் தான் புகுதல் செய்கின்றோம். இவ்வாறு  புகவே தன்னைத் தானறிந்து இறைவனைக் கண்டுபிடிக்கலாம். 

தன்னில் என்பது கடைக்குறைந்து ( அல்லது தொகுந்து ) சன்னி என்று வரும்.  தகரத்துக்குச் சகரம் போலி.  அதாவது த என்பது ச ஆக மாறும்.  ல் என்ற இறுதிமெய் கெடும் அல்லது ஒழியும்.  ஆகவே தன்னில் > சன்னி.

அடுத்த சொல் தான் என்பது.  இது திரியவில்லை.  அமைதல் என்ற பொருள் உடைய அம் விகுதி பெறும். அப்போது தானம் என்று வரும். இரண்டையும் கூட்ட.

தன்னில் தான் அமைதல் >   தன்னி + தான் + அம் >  சன்னிதானம் ஆயிற்று.

இது வெறும் எழுத்துப்போலிகளாலும் எழுத்துக் குறைவுகளாலும் ஆன பதமே.

பொருள் பதிந்தது பதம். பதி (தல்) > ( இகரம் கெட்டு)  பத்+ அம் = பதம்.   த் + அ = த.

தன்னில் திரு >  சன்னி(ல்) + தி (ரு) >  சன்னிதி என்றுமாகும். பொருள் அதுவே

இங்கு தி என்பது விகுதி.  அது விகுதியாகவும் வந்து திரு என்பதையும் குறிப்பால் உணர்த்தியது,

இந்தத் திரிபுகட்கு இதை நினைவில் கொள்ளுங்கள்:  அப்பன் > அத்தன் > அச்சன். எழுத்துகள் மாறினும்  பொருள் அதுவே/

கோவிலில் தன்னைப் போல அமைந்த சிலையின்முன் தான் அமையும் இடமே சன்னிதானம், இறைவன் திருமுன்.


தட்டச்சுப் பிறழ்வுகள் பின்னர் கவனம்பெறும்


வயோதிகர் இன்னொரு முடிபு

 வயோதிகன் என்ற சொல்லை நாம் இங்கு முன் விளக்கியுள்ளோம்.  அதனை நீங்கள் முன் வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றோம். இன்னும் இல்லை என்றால் இப்போதும் அது இங்கு கிட்டுவதால் வாசித்துக்கொள்ளுங்கள். 

வாசிப்பதற்கு இங்குச் சொடுக்கவும்:

வயோதிகன்  https://sivamaalaa.blogspot.com/2016/06/blog-post_29.html

அகவை அதிகம் எட்டிவிட்டவர்கள் சிலர், தம்மால் முடியவில்லை என்றும் தமக்கு வயது ஆகிவிட்டதென்றும் சொல்லி,  கொஞ்சம் உழைப்பு தேவைப்படும் வேலைகளிலிருந்து விலகிக்கொள்வர் என்பதும் உண்மைதான். அகவை கூடிவிட்டால் பலவித உபாதைகள் அல்லது உடலியலாமை ஏற்பட்டுவிடுகின்றன.

தம் வயதை அடிக்கடி " கூடிவிட்டது, கூடிவிட்டது" என்று துன்புற்றுக்கொண்டிருப்பவர்களே வயோதிகர் என்று சுட்டப்பட்டனர் என்று ஒரு கருத்தும் உள்ளது. இவர்கள் பெண்டிர் என்றும் பின்னர் அது ஆண்களைக் குறிக்க மாறியது என்பதும் கருத்து.

வயது + ஓதி + கன்னியர் - "வயோதிகன்"  என்பதாக மருவி வயோதிகன் என்று , குறுகிப் பெண்பாலிலிருந்து ஆண்பாலானது என்பதும் ஒன்று.

உபாத்தியாய என்ற சொல்லும் முதலில் பெண்களில் இலக்கண  ஆசிரியத் தொழிலரைக் குறித்த சொல் என்றும் கூறுவதுண்டு.


 

திங்கள், 26 அக்டோபர், 2020

பார்வதி

 

 [அப்போதுதான் சிறுசிறு சொற்களையும் குறுகிற வாக்கியங்களையும் ஒலித்துத் தன் எண்ணங்களையும் அடுத்து நின்றவனிடம் அறிவிக்கக் கற்றுக்கொண்டிருந்த தொல்பழங்காலம் அது.  " அந்தப் பொருள் எங்கே" என்று கேட்ட அடுத்தவனுக்கு அவன் "தோ" என்று கூவி அறிவித்தான். நீ தேடிக்கொண்டிருப்பது இங்கேதான் இருக்கிறது பார் --  என்ற விடையும் அந்தத் தோவிலேயே அடங்கியிருந்தது. த், ( இது ) , துதூ, தே என்றெல்லாம் ஒலித்து அவன் தன் கருத்தை அறிவித்தான். மொழி என்பதே ஒரு கருத்தறிவிப்புக் கலைதான். அது ஒரு கால் சீய்ப்பிலிருந்து ஒரு பெரிய எழுத்துக்கலையே தோன்றி வளர்ந்துள்ளது போன்றதே.]


ஒலிகள் போலுமே எழுத்துக்களும் வளர்ந்தன .காலை ஓரிடத்து அதன் பெருவிரல் பட நாட்டி, பின்னோக்கிக் மணலில் இழுத்தால் ஒரு கோடு உண்டாகிவிடுகிறது. இது இழுத்து உண்டானது. இதிலிருந்துதான் எழுத்து என்ற சொல் உண்டானதென்று கூறுவர். இதை நல்லபடி பலுக்க அறியாதவர் இழு என்பதற்குப் பதிலாக இலு என்றனர். இலு பின் இலக்கு என்று வளர்ந்தது. இலு + கு = இலுக்கு.> இலக்கு. பின்னர் இலக்கு > இலக்கித்தல். இதன் பொருளும் எழுதுதல் என்பதே. எழுது > எழுத்து ; இழு> இலு > இலக்கு என்பவெல்லாம் தமிழில் உருவான சொற்களே. அவற்றின் தொடர்பு இவ்விளக்கத்தில் தெளிவாகிறது.


தொல்பழங்காலத்து மனிதன், த் என்ற மெய்யொலிப்பினால் இது பொருள் என்பதை அறிவித்தனன், இப்பொருள் என்முன் உள்ளது எனல் அறிவிக்க விழைந்து து+ = து என்றான். இங்கு உ என்பது என்முன் உள்ளது என்ற கருத்தே ஆகும். உ என்பது சீனமொழியில்கூட முன் உள்ளது என்றே பொருள்தருகிறது. இங்குதான் உள்ளது என்பதைக் குறிக்க, + து = இது என்றான். இதுவென்பது இ, உ என்ற இரண்டு சுட்டு எழுத்துக்களும் உருவிலான பொருள்குறித்த த் என்ற மெய்யும் ஒலியும் கலந்த ஒரு சொல்லே ஆகும்.. அப்பொருள் அங்கிருக்கிறது என்பதை அறிவிக்க, + து = அது என்றான். இந்தச் சொல்லில் அ ( அங்கு), ( இங்கு), த் ( பொருள்) என்ற மூன்று கருத்துக்கள் அடங்கி உள்ளன. த் என்பது உருவுடைப் பொருள் குறித்தது என்பது முன் விளக்கப்பட்டது . எழுத்துக்கலை வளர்ந்தது போலவே ஒலிக்கலையும் படிப்படியாக வளர்ந்த பரிமாணம் கண்டது. பரிந்து மாணுதல் என்பதுதான் பரிமாணம். பரிதலாவது வெளிப்படுதல். மாணுதல் என்பது அது பொருளால் உருவால் சிறத்தலாம். காற்றுப் பரிகிறது என்றால் காற்று வெளிப்படுகிறது என்பதே. மாண்> மாணுதல், மாண் > மாண்பு என்ற வழக்குகள் அறிக.

அது, இது உது என்பனவும் த் து முதலியவும் சொல்லமைப்பின் மிகப்பெரிய உயரிய தாக்கத்தை விளைத்துள்ளன. இவை அடிப்படைச் சொற்களாகும் என்பதறிக.


பர் என்பது ஓர் அடிச்சொல். பருத்தல் என்பது முன்னுள்ள இடம்வரை சென்று நிற்பதைக் குறித்தல், இதன் காரணம் பர் + உ என்ற இரு கருத்துக்கள் அச்சொல்லில் அடங்கி இருப்பதே. பர (பரத்தல் ) என்ற சொல்லில் இங்கிருந்து அங்குவரை சென்று நீளல் என்பதைக் குறிப்பாகத் தெரிவிக்கிறது. பர் என்ற அடிச்சொல்லும் அ ( அங்கு) என்ற செல்லுதல்- சேர்தல் குறிக்கும் சொல்லும் கலந்துள்ளன. பர்+ = பரி (பரிதல் ) என்பதில் வெளிப்பட்டு இங்கு அல்லது இவ்வெல்லையுடன் நின்றுவிடுதல் என்பது குறிக்கப்படுகிறது. பர் என்பது வேறன்று,  ப, பல், பர் என்பன தொடர்புடைய கருத்தினடிகள். பலகை என்ற சொல்லை எடுத்துக்கொண்டால் பல், , கை என்ற சொல்-இயை கருத்துகள் உள்ளன. பல் என்பது பொருளின் நீட்சிக் கருத்து. அங்குவரை என்பதைச் சொல்ல அ வந்தது. கை என்பது கு+. கு என்பது சேர்விட எல்லையையும் ஐ என்பது அவ்விடத்து முற்றுப்பெறுதலையும் குறிக்கிறது. ஐ என்பது முடிபு காட்டுதலின் விகுதியுமாகும். Something flat and extending and ending there என்ற பொருள் தெளிவாய் உள்ளது. இது ஒரு கோட்டியல் விரிவு என்பது தெளிவு. (linear extension). , பல், பர் என்ற அடிச்சொற்களை மீண்டும் கவனித்து இக்கருத்துக்களை நன்கு உணர்ந்துகொள்ளலாம். லகரம் ரகரமாய்த் திரியும். ஆகவே பர் -பல் தொடர்பு காண்க. ப என்பது பல் அல்லது பர் அல்லது இரண்டன் கடைக்குறை ஆகும். பை என்ற சொல்லிலும் இவ்வாறு உறைபொருள் காணலாம். - பட்டைவடிவிலானது; ஐ அல்லது அய்: அங்கு சென்று அல்லது நீண்டுசெல்லாமல் முற்றுறுதல். வேறுபொருள் புகுத்தினாலன்றி பட்டைவடிவில் மிக நீண்டு  செல்லுதல் இல்லாத ஒரு பொருள்.


பரு என்ற அடிச்சொல் அது என்னும் இடைநிலை பெற்று அம் என்று விகுதியும் பெற்று முடியும், அதுவே பரு+அது+ அம் = பருவதம் என்னும் சொல். இது மலையைக் குறிக்கும். சொல்லமைப்புப் பொருள், பருத்ததென்பதே மலையென்னும் சொல்லுக்கும் பார்ப்பதற்கு மலைக்க வைப்பது, ஆகவே பரியது என்பதே பொருளாகும். இவ்வடிச்சொல் ( பரு ) பார் என்றும் திரியும். இவ்வாறு: பருவதம் > (பருவதி ) > பார்வதி என்று. வ்+ அது என்பன வதி என்று திரிதல் காண்க. பர என்ற சொல்லும் பார் என்றே திரியும். இது பரத்தற் கருத்துடைய சொல் இவ்வாறு இரண்டும் பார் என்ற வடிவினையே தம் திரிபில் கொள்ளினும், இம்மயக்கினால் தெளிவு தொலைந்துவிடாத தன்மையைத் தமிழ்மொழி பெற்றுள்ளது.


பரு> பார் > பார்வதி,

பர > பார் > பாரி ( வள்ளல் பாரி, உலகிதன்பால் பரந்த அன்பும் அருளும் உடையோன் என்பது பொருள்)


என்றவாறு அறிக.


, , உ என்னும் சுட்டுகள் சொல்லின் தொடக்கத்தில் வந்து சொல்லமையும். சொல்லின் இறுதியில் நின்றும் சொல்லமையும்.


பர > பரத்தல். பர என்ற அடியில் அகரம் இறுதியில் நின்று சொல்லமைந்தது காண்க.

ஆழி : இச்சொல்லின் இறுதியில் இகரம் ( சுட்டு) நின்று சொல் அமைந்ததும் காண்க.


இனி இது என்பது இடைநிலையாய் நின்று அமைந்த சொல்:


கணித்தல் - வினைச்சொல்;

கணி + இது + அம் = கணிதம். இங்கு ஓர் இகரமும் ஓர் உகரமும் கெட்டு ( மறைந்து) சொல்லமைந்தவாறு கண்டுகொள்க.

கணி + + கு = கணக்கு. அங்கு இங்கு என்பதில் வந்த அதே குகரம், உருபாகவும் வருவதுடைய அதே குகரம் இங்கு விகுதியாய் வந்தது. அகரச் சுட்டு இங்கு இடைநிலையாய் வந்தது

கணக்கு என்ற சொல்லில் இடைநிலை, கணிதம் எனற்பாலது நோக்க வேறு ஆயிற்று..


அறியவே, தொல்பழங்காலத்துச் சொற்களின் இயைவுகளை அறிந்து விளக்கம் கொள்க.


மெய்ப்பு: பின்,

மெய்ப்புக்கு முன் வாசிப்போர் தட்டச்சுப் பிறழ்வுகளைத்

திருத்தி வாசித்துக்கொள்க. பின்னூட்டமும் இடலாம். நன்றி.

அழிந்துவிட்ட இடுகையின் மீட்டுருவாக்கம் இது.




சனி, 24 அக்டோபர், 2020

விமரிசை

வில் என்பதன் அடிக்கருத்து யாதெனின் அஃது நீங்குதல் என்பதே.இதனால்தான் வில் என்னும் கருவியைக் குறிக்கும் சொல்லும் அப்பெயர் பெற்றது. வில் என்ற அடிச்சொல்லே வில் என்ற முழுச்சொல்லாகவும் வந்து கருவிக்குப் பெயரானது.

விற்றல் அல்லது ஒரு பொருளை விலைக்குப் பிறனிடத்துப் போக்குதல் என்பதும் நீங்குதற் கருத்தே.  விற்போனை நீங்கிப் பொருள் வாங்குவோனிடத்துச் செல்கிறது.

வில் > வில்+தல் > விற்றல்.  (விலைக்குக் கொடுத்தல்.)

வில் > வில்+ ஐ > விலை.  (  பொருள் பிறன்பால் நீங்குதற்குப் பெறுவோனிடத்து நீக்குவோன் பெறும் பணம் அல்லது ஈட்டுத் தொகை)

வில் > விற்பு ( பு விகுதி )  > விற்பு+ அன் + ஐ =  விற்பனை.  இதில் பு, அன் என இரண்டு இடைநிலைகளாக வந்தன.  ஐ என்பதே சொல்லின் இறுதிநிலை அல்லது விகுதி. ஏனை இரண்டும் ஈண்டு சொல்லை முடிக்கவில்லையாதலின் அவற்றை விகுதிகள் என்பதினும் இடைநிலைகள் என்பதே பொருத்தமானது. இவண் ஐ எனற்பாலதை விகுதி மேல் விகுதி மேல் விகுதி எனினும் அதுவும் இச்சொல்லை உணர்ந்துகொள்ள வருமொரு விளக்கமென ஏற்றல் தகுதியானதே.. பானை செய்யும்போது அதை வனைந்து பயன்பாட்டுக்கு விடுதலே பணிமுடிவு ஆகும். ஏனைப் பெயர்களெல்லாம் சொல்லமைப்பை உணர்விக்கும் கருவிகளே.  ஆதலின் அடிப்படை உணர்ந்தார்க்குப் பெயர் என்பது ஒரு பொருட்டன்று. ஆயினும் ஒவ்வொரு கலையிலும் அறிவியலிலும் ஒன்றைத் துல்லியமாக அறிந்துகொள்ளுதல் இன்றியமையாதது ஆகும்.   

வீங்குதல் என்பதிலும் நீங்குதல் கருத்து உள்ளது. ஒரு சுவருக்கும் இன்னொரு சுவருக்கும் இடைவெளி பெரிதாகும்போது நீங்கி எழுந்த சுவரே இடைவெளியை உண்டாக்குகிறது. இடைவெளியில் காற்றோ நீரோ வீக்கத்திற்குக் காரணமாகலாம். ஆனால் நீக்கம் ஏற்பட்டுவிட்டதென்று உணர்க. இங்கு சுவரென்றது சதைச் சுவர், தோற்சுவர் என்று அறிக.

வீங்கு என்பதில் கு என்பது வினையாக்க விகுதி.  மூழ்கு என்பதில் கு  போலவேயாம். வீ என்பதே அடிச்சொல்.  இதை உணரவே,  வி,  என்பதும் வில் என்பதும் அடிச்சொற்களே என்றும் அறியவேண்டும்.  இவற்றைப் பெருள்தொடர்பு பட்ட அடிவடிவங்கள் என்றும் உணர்க.  விலகு என்ற சொல்லிலும் வி என்பதே அடிச்சொல். இதனை வில் அடிச்சொல் எனினும் அதுவேயாகும். விலகு என்னுங்கால்  வில் அடியென்பது விளக்கத்திற்கு எளிதானதாய் இருக்கும்.  வில்+அ + கு என்று காட்டி, விலகு என்று சொல்லமைப்பைக் காட்டிவிடலாம்.  அடிப்படை வேறுபாடு ஒன்றுமில்லை. விளக்க எளிமையே அது. இன்றேல் வி + கு என்று நிறுத்தி இடையில் வரும் ல் என்ற ஒலிக்கு விளக்கத்தினை வருவித்துரைக்கவேண்டும். எனினும் வி என்பது மூலமென்றும் வில் என்பதன் அதன் வளர்ச்சி என்று ஏற்புழிக் கூறினும் அடிப்படை வேறுபாடு ஒன்றுமில்லை. இது மொழிக்கு மொழி வேறுபடும். தமிழில் வி, வீ என்றும் ஆங்கிலமொழியில் அதே பொருளில் வீர் அல்லது வியர் என்றும் (veer)  என்றும் வருகிறது பார்த்தீர்களா.  பொருள் அணுக்கம், ஒலி அணுக்கம் இரண்டுமிருக்கிநன்றனவே!. இப்படி உலக மொழிகளை ஒப்பாய்வு செய்கையில் எந்த எந்த வடிவங்கள் விளக்க எளிமை தருவன என்று தெரிவுசெய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். மக என்பது தமிழுக்கு நல்ல அடிவடிவம்;  Mac  என்பது ஆங்கிலத்துக்கு நல்ல அடிவடிவம் ( MacDonald - son of Donald). ஒரே மொழிக்குள்ளும் அடிவடிவங்கள் மாறிமாறிக் காணப்படும். சீனமொழிக்கு தா என்பது நல்ல அடிச்சொல்; தமிழுக்கு தாக்கு என்பது நல்ல வினையடிச்சொல்.  வி, வீ, வில், விய், விய எல்லாம் தொடர்பின.  விய > வியனுலகு என்னும்போது, ஓர் எல்லை இன்னோர் எல்லையினின்றும் நீங்கி அதன்பின் விரிந்து சென்ற காரணத்தினால் விரிவு உண்டாகிறது.  எமக்கு அவற்றின் ஒற்றுமை மகிழ்விக்கிறது. உங்கட்கு அவற்றுள் வேற்றுமை உறுத்தலாம். ஒவ்வொருவருக்கும் உண்மையறிவு வேறுபடும்.  நுண்ணிய நூல்பல கற்பினும் தம் உண்மையறிவே மிகுமன்றோ?

விர்> விய் > விய > வியா > வியாபி > வியாபித்தல்.  எல்லையினின்று எல்லை விலகுதலே நீங்குதல், விரிதல் எல்லாம்.

விர் > விரி.

வி > விம் > விம்மு > விம்முதல். எல்லை விரிவும் பெருக்கமும்.

வி > விம்மு > ...

விம் + மரு(வு) > விம்மரு+ இயை > விம்மரிசை > விமரிசை.

விம்முதல் என்பது நீங்கி விரிதல். 

மருவுதல் என்பது நெருக்கமாகுதல்.

இயைதல் எனல் ஒன்றுபடுதல்

ஒரு விழா விமரிசையாக நடைபெற்றது என்றால் கூடியிருப்போர் விரிந்து பெருகி, நெருங்கி மருவி மனமோ பிறவற்றாலோ இயைந்து அவ்விழா நடைபெற்றது என்று பொருள். சொல்லில்தான் என்னே அழகு. இயை என்பதும் இசை என்பதும் ஒன்றே.  ய - ச திரிபு.

நீங்களே விரித்து அறிந்துகொள்ளுங்கள்.


எழுத்துத் திருத்தம் பின்பு.

வெள்ளி, 23 அக்டோபர், 2020

விமல - சிறந்த மலர்.

 இப்போது தமிழ்மொழியானது பொருளுரை பகர்வதில் எவ்வாறு சிறப்புடைக் கருவியாகிறது என்பதைச் சிந்தித்து உணர்வோம். இதனைச் சில எடுத்துக்காட்டுகளின் மூலமே விளக்கமுடியும். 

மனிதன் இப்புவியில் வாழுங்காலம் வரை எதனாலும் மாசுபட்டுவிடாமல் எதுவந்து தன்னைப் புடைத்து இறுக்கியபோதும் அதிற்பட்டுத் திறமிழந்து மாய்ந்து விடாமல் தப்பிப் பிழைக்கும் தந்திரம் அறிந்து வாழவேண்டும். அவனை நோக்கி வருவன வெல்லாம் வெள்ளித் தட்டில் கவருமாறு வைக்கப்பட்டு வருவதில்லை. நடந்து போகும்போது வழியில் உள்ள மேடுபள்ளங்களுக்கு ஓர் அளவில்லை. தப்பவேண்டும் இடறாமல் தாண்டவேண்டும்.  எதிர்வரும் தடையானது தூண்போலும் இருக்கலாம். நெளிந்தோடும் நதிபோலும் இருக்கலாம். தப்புதல் தந்திரம் (தம்/தன்) திறம்).1  தப்புவதற்கு மனிதர் அறிந்த வழிகளிலொன்று தவம் மேற்கொள்வது.  அதாவது மனவலிமையால், உள்வலிமையையும் வெளிவலிமையையும் கொண்டு தப்புவதே தவம்.2  தப்பு> ( இதை இடைக்குறைத்து ) தபு >  ( இதை வினைச்சொல் ஆக்கினால்) > தபு(தல்) > ( இந்த தபு(வுடன் அம் என்ற தொழிற்பெயர் விகுதி இணைத்தால்)   தபு+ அம் > தபம்,  (பகரம் வகரமாகும் திரிபை அச்சொல்லினுள் உய்த்தால் அது ) > தவம் ஆகிறது.

இதற்கு அறிஞர் ஓர் எடுத்துக்காட்டு உரைப்பதுண்டு.  அவ்வுதாரணம்,  தாமரை மலர்.  தண்ணீருக்கு மேலிருந்துகொள்ளும்,  அதில் மூழ்குவதில்லை. தண்ணீர் அதன்மேல் துளிகளாய்க் குதித்தேறி விழுந்தாலும் தானே வழிந்தோடிவிடும். " தாமரை மேல்,  தண்ணீர்த்துளி போல், தாரணி வாழ்வினில் மேன்மை கொள்" என்று கூறுவர்.

தாமரை தண்ணீரில் அதன்  மட்டத்திற்குத் தாழ்ந்திருக்கிறது.    (தா).   

தண்ணீரை மருவிக்கொண்டும் நிற்கிறது.    ( மரு  ).

மருவுதல் என்றால் மிகுந்த நெருக்கமுடன் இருத்தல்.   (  மரு > மருவு > மருவுதல்).

இந்த இலக்கிலிருந்து தாமரை என்ற சொல் எழுந்தது.

தா+ மரு + ஐ.

அ என்பது அங்கு என்று பொருள்படும் சுட்டுச்சொல்.

அங்கு அதற்குமேல் செல்லாமையைக் குறிக்க ஏற்பட்ட நிறுத்தமே யகர ஒற்று.

அ + ய் = ஐ ஆனது.  இவ்வாறு ஒரு எழுத்துமுற்று வைக்கப்பட்டு, ஐ விகுதியாய் நின்றது.   மிகுந்து நிற்பதே விகுதி.  மிகுதி > விகுதி.  மி-வி திரிபு. இன்னோர் எடுத்துக்காட்டு:  மிஞ்சு > விஞ்சு.  ஐ விகுதியின் திறத்தை இவ்வாறு உணர்ந்துகொள்ளலாம்.

தாமரை என்ற சொல்லும் மேற்சொன்ன கருத்தையே உள்ளடக்கி அணிபெறுகிறது.

தாமரைக்கு இன்னொரு சொல் கண்டனர். அதன் கருத்தும் மேற்சொன்னவாறே சென்றது. அச்சொல்தான் கழுமலர் என்பது.  தண்ணீரால் அடிக்கடி கழுவப்படும் மலர்தான் கழுமலர்.  இதனை அழகுறுத்த, சில எழுத்துக்களைக் குறைத்தனர்.   கழுமலர் >  கமல ஆனது.   ழுகரமும் ரகர ஒற்றும் வெட்டுண்டு,  இடைக்குறையும் கடைக்குறையும் ஒருசேர நின்றமை காண்க.  இதை விகுதியேற்றி அழகுசெய்து  " கமல + அம்"  >  கமலம் என்றனர். இச்சொல்லைப் பலரும் ஏற்றுக்கொண்டனர். இவ்வாறு எழுத்துக்களைச் சிரைத்துத் தள்ளுவது சிலருக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம். அவர்களை மனநிறைவுறுத்த வேறுவழிகளைக் கையாண்டனர்.

விழுமிய மலரே விழுமலர்.  விழுமிய என்றால் சிறந்த என்று பொருள்.  இது:

விழு+ மலர் >  வி + மல >  விமலம் ஆயிற்று. இச்சொல்லும் நன்கு உலாக்கொண்டது.  மலர்  அழகியது.  விமலம் என்பது  சிறந்த அழகு என்ற பொருட்பெறுமானம் உற்றது. இறைவன் விமலன் என்று சுட்டப்பெற்றான். 

தாமே புழக்கத்தால் திரிந்த சொற்களும் புலவர்களால் விரைவுறுத்தித் திரிக்கப்பட்ட சொற்களும் என இத்தகு சொற்கள் இருவகையான திரிசொற்களாயின. கழுமலர் என்பது இயற்சொல்.  கமலம் என்பது திரிசொல்.

இவ்வாறே அறிக மகிழ்க.


குறிப்புகள்

1 தன்+திறம் >  தந்திரம். சொல்லாக்கப் புணர்வில் தன்றிறம் என்னாமல் தந்திரம் என்றே வரும்.   எ-டு:  முன்+தி >  முந்தி.  தம் திறம் > தந்திரம் எனினும் ஆகும். இது அறிஞர் பிறர் சுட்டியதே.

2 மனவலிமை, உள்வலிமையை இயக்கவும் தேவைப்படுகிறது. வெளிவலிமையை இயக்கவும் தேவைப்படுகிறது.  உள்வலிமை என்பதில் உடல்வலிமை ஒரு பகுதி; மனவலிமையே  இன்னொரு பகுதியாகவும் உள்ளது. மற்றவெல்லாம் வெளிவலிமை. அதைத் துணைக்கழைக்கவும் தன் மனவலிமை தேவைப்படுகிறது.


மெய்ப்பு - பின்னர்