நாள்தோறும் நண்ணுவதோ கொண்டாட்டம்?
நாவினுக்கே ஊறுசுவைப் பலகாரங்கள்!
ஆள்சீரால் விண்வரையில் பண்மீட்டி,
ஆங்ககலா நன்மகிழ்வில் நலம்தாருங்கள்.
கேள்நெஞ்சம் ஒத்துநின்று நம்வீட்டில்
கேடகன்ற நன்னிலையைத் தழுவிக்கொண்டார்
நீள்மேரு நன்மலையில் சேர்துள்ளல்
நீங்காமல் தீபஒளி தரவேசெய்யும்.
யாம்பெற்ற இன்பமெலாம் பெறுவையம்,
யாவையுமே எமக்கென்பார் இலர்இங்கேதான்
மான்பெற்ற பிள்ளைகளாய் மேல்துள்ளும்
மக்களுயர் நெஞ்சமகிழ் தீபநன்னாள்.
தீஎன்னும் சொல்லதிலே தமிழுண்டு
தீபமெனில் பூவினொடு அம்முமுண்டே!
யார் இந்த சொற்கள்தமை வேறென்றார்
யாமிதிலே கண்டதமிழ் நீவிர்கண்டீர்.
கல்தோன்றி மண்ணெழாமுன் குடிமூத்தோன்
கன்னித்தமிழ் மைந்தர்களே கொண்டாடுங்கள்,
முன்தோன்றி தீயறிந்து தீபம்கண்டான்
முத்தமிழன் மூத்ததமிழ் மெய்யன்பன் தான்.
பூவினொடு - பு என்னும் விகுதியோடு. அம்மும் -
அம்மென்ற இறுதிநிலையும்
ஆள்சீரால் - ஆளுமையுடைய சீரால்.
ஆங்ககலா - அங்கு நீங்காத;
கேள் நெஞ்சம் - உறவினர் நெஞ்சம்
மேரு - இமைய மலை
மேல் துள்ளல் - மிகுந்த மகிழ்ச்சி
தீபநன்னாள் - தீபாவளி
மூவசைச் சீர்களும் மாற்றமாக நாலசைச் சீர்களும்
இறுதியில் நிற்க விரவிப் பாடப்பட்டுள்ள கவிதை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக