ஞாயிறு, 15 நவம்பர், 2020

அடிச்சொற்கள் கு>கூ . மொழியில் அமைந்த விதம்

 ஒரு காலத்தின் மொழியில் எல்லாம் குறுகிய அல்லது சிறிய சொற்களாய் இருந்தன. இத்தகைய குட்டைச் சொற்களைத் தாம் அவர்கள் பயன்படுத்தி வந்தனர். ஒரு குகையிலோ ஒரு மரத்திலோ வாழ்ந்துவந்த அந்த மனிதர்களுக்கு நீண்ட சொற்கள் தெரிந்திருக்கவில்லை என்பதைவிட அவை இன்னும் அமைவு பெற்றிருக்கவில்லை என்பதே சரி.  நான், நீ, போ, வா,  இர் ( இரு),  ஓ (ஓடு) என்று பேசிக்கொள்வது போதுமானதாக இருந்தது. எங்காவது தண்ணீர் இருக்கும் குட்டைக்குள் இறங்கிவிட்டால் உடலின் நாற்றம் குறைந்துவிடுதலை உணர்ந்து உடல் தூய்மை அடைவதை அறிந்துகொண்டவன்,  தூய்  தூய்  (தூய்மை) என்றோ,   குள் குள் என்றோ சொல்லிக்கொண்டிருந்தான்.    குள்> குளி!.

கு = அவ்விடத்துக்குப் போய்.    (கு என்பது சேர்விடம் குறிக்கும் சொல்).
உள் =  தண்ணீருக்குள் இறங்கு என்பது.
இ  =  இங்கேதான் அருகில் அந்தக் குட்டையும் நீரும்!

இவ்வாறு  கு+ உள் + இ என்று  அழகான குளி   என்ற சொல்லையும் படைத்துக்கொண்டான்.  அதுவே அப்போதைய மொழியில் பெரிய கண்டுபிடிப்பு.

கு உள் என்பதை குள் என்று சுருக்கக்கூட கண்டுபிடித்ததே பெரிய அறிவுதான்.

இந்தக் காலத்தில் இப்படிச் சுருக்க "நம்மள் பசங்களுக்கு" எங்கே தெரிகிறது.

சேர்ப்பதற்கும் சேர்வதற்கும் அவன் கண்டுகொண்ட முதன்மைவாய்ந்த சொல், கு > கூ என்பதுதான்.

அந்த அமைவுக் காலத்தில் மதுரை இல்லை. இருந்திருந்தால் மதுரைக் கு  என்று சொல்லியிருப்பான்.  பெயர் இல்லாத  அ கு  ( அங்கு),  இ கு ( இங்கு) -- இவைதாம் இருந்தன. இவை சுட்டடிச் சொல் வளர்ச்சிகள் ஆயின.

சேர்வது என்ற கு-வில் இருந்து:

கு இ  -  குவி.   (இங்கே சேர்த்துவை)

கு  >  கூ.

கு > குடு.

கு > கூ > கூடு  (கூடுவது).

குவை  :  குவியல்  (குவித்து வை).

வீடு கட்ட அறிந்த பின் சிறு வீடுகளின் கூட்டத்தைக் குப்பம் என்றான்.

கு: குப்பு > குப்பம்.

சேர்த்துவைத்த வேண்டாததற்கும் கு-விலிருந்துதான் சொல் அமைந்தான்.

கு > குப்பு > குப்பை. ( பு  : தோன்றற் கருத்துடைய விகுதி, இங்கு இடைநிலை, ஐ இறுதிநிலை )

அம்மா அப்பா பிள்ளைகள் சேர்ந்த  அணுக்க நிலைக்கும் கு-விலிருந்தே பெயர் கொடுத்தான்:

கு > குடு > குடு+பு > குடும்பு > குடும்பம்..

டு, பு, அம் எல்லாம் சொல்லாக்க நீட்சிகள்.  விகுதி - மிகுதி (சொல் மிகுதி).

ஒப்பு:  மிஞ்சு = விஞ்சு.  மி> வி > வீ > வீ + கு > வீங்கு.

( வீங்கு இள வேனில் என்று சைவத் திருமுறைப் பாடலில் வரும்.)

பல உள்ளன. இது போதும் . எமக்கும் வேறு செய்யவேண்டியவை உள்ளன.

அறிக மகிழ்க

தட்டச்சுப் பிறழ்வு - பின் நோக்குவோம்.





கருத்துகள் இல்லை: