நன்றாகப் படித்த பண்டிதன்மார் என்போர், நல்ல தமிழில் ஒல்லுவழி எதையும் உரைத்தல் வேண்டுமென்னும் உயர்நெறி போற்றுவார் ஆவர். தமிழில் பேச்சுமொழியிலிருந்து பண்டைச்சொற்களை மீட்டுருவாக்கம் செய்ய எண்ணி முயல்பவர் யாரெனினும் அறவே படிப்பறிவில்லாதாரை அண்டிப் பேசியே அவர்கள் வழங்கும் செற்களை ஆய்ந்து பின்னர்தான் ஓர் ஐந்து விழுக்காடு சொற்களையாவது அறிந்துகொள்ளவியலும்.அவர்களின் வாத்தியார்களால் பன்முறை திருத்தப்பெற்ற நாவினர்வழி இச்சொற்களை அறிதல் இயலும் என்று யாம் நினைக்கவில்லை.
இப்போது தீபாவளிப் பண்டிகை விரைந்து வந்துகொண்டிருக்கிறது. தீபாவளியைத் தீவளி என்று பேசிய படிக்காதவர்களை யாம் கேட்டு வியந்ததுண்டு. வியத்தற்கு ஏனென்று வினவின், அஃது விளக்கற்கு எளிது காண்பீர். "நிலம் தீ நீர் வளி விசும்போடைந்தும் கலந்த மயக்கம் இவ்வுலகம் ஆதலின்" என்றே தொல்காப்பிய மாமுனி -- பல்புகழ் நிறு த்தப் படிமையோன் -- பாடியுள்ள படியினாலே, மற்றும் தீயும் வளியும் இவ்வைந்தனுள் இரண்டு என்னும் ஓர் உண்மையினாலே, வியப்புமில்லை, அயிர்ப்புமில்லை என்பதேயாம் அதற்கு விடை கூறுவது , கண்டுகொள்க.
தீபாவளி என்பதும் வடக்கில் தீவளி அல்லது தீவாளி என்றே வழங்கும். தீவளி என்பதற்கும் தீவாளி Diwali எனற்பாலதற்குமுள்ள வேற்றுமை மிகச் சிறிதேயாகும். ஆனால் தீபாவளிக்கும் தீவாளிக்கும் உள்ள இடைவெளி சற்றே மிக்கதாகும்.
தீபாவளி என்பதைப் பார்க்கலாம். தீ என்பது நெருப்பு. பா - வினைச்சொல் பரவுதல். வளி - காற்று. இது தீபரவும் காற்று என்று பொருள்தருகிறது. இது வினைத்தொகை, இதில் ஐந்து பூதங்களில் இரண்டு தரப்பட்டு ஒரு சொல்லாகியுள்ளது. ஆகவே தீபாவளி என்பது இயற்கை ஆற்றல்களுக்கு எடுக்கப்படும் ஒரு விழா என்றும் பொருள்கூற வேண்டியுள்ளது. இன்றையப் பேச்சில் சொல்வதானால், அக்கினி பகவானுக்கும் வாயு பகவானுக்கும் எடுக்கும் விழா ஆகிறது. தீக்கெல்லாம் மூலமாவது சூரியனாதலின் அது சூரியனையும் உள்ளடக்கும். தீபத்தையும் உள்ளடக்கும். தீயைப் பரப்பும் காற்றும் அடங்கிவிடும்.
தீபாவளிக்கு எண்ணிறந்த விளக்கங்கள் உள்ளன. மிக்கப் பழங்காலத்தில் தீப ஒளியாகவும் தீப ஆவலி என்னும் நாட்டியமாகவும் அது பரிமாணம் பெறுதற்கு வெகுகாலத்தில் முன்பாகவே, அது தீயையும் பாவும் வளியையும் இயற்கை ஆற்றல்களாய் வணங்கப் பெற்ற பெருமையை உடையதாய் இருந்த ஓர் பண்டிகை என்று காணக்கிடக்கின்றது அறிக.
இனிப் பண்டிகை ஆவதென்ன? இகவுதல் என்றால் பெருகுதல், மிகுதியாதல். பண்டு என்றால் முற்காலத்தில். முற்காலத்தில் மக்கள் மிக்குப் பின்பற்றி இன்று நம் காலத்திலும் வந்தணைந்த ஒரு மகிழ்துள்ளல் நாளே பண்டிகை. பண்டு காலந்தொட்டு இகவிய நாள் பண்டு+ இக(வு)+ ஐ = பண்டிகை.
இயற்கையை ஒட்டிவரும் தீபாவளியை அணைத்து, அதில் நம்மை நாம் கொண்டு பிணைத்து, மக்களையும் இணைத்துச் செல்வோம், வருக.
காலம் நோய்மிக்கது ஆகலின், கவனம் கடைப்பிடித்துக் கொண்டாடுதல் கடமையாகும்.
குறிப்புகள்:
பேரகராதியிலிருந்து:
பாவு¹-தல் pāvu- , 5 v. intr. 1. To extend; பரவுதல். மைப்பாவிய கண்ணியர் (திருவாச. 24, 6). 2. To be diffused; to pervade; வியாபித்தல். (W.) 3. To spread, as creepers on the ground.
, n. < பாவு² pāvu பாவு- . 1. [M. pāvu.] Warp;நெசவுப்பா . Colloq. 2. Measure equal to double the arm's length;இரண்டு பாகவளவு . (G. T j.D. I , 134.) 3. A measure of weight equal to two palam;இரண்டுபலங்கொண்ட நிறுத்தலளவை . (G. S m.D. I , i, 283.)
இகவுதல் பாவுதல் பரவுதல் என்பவற்றில் வு என்பது வினையாக்க விகுதி. அடிகளாவன இக பா பர என்பனவாகும்.
தீ பாவளி - இது உம்மைத் தொகை.
பா வளி இது பரவும் வளி என, வினைத்தொகை.
தீப ஆவலி : ஆவலி ஒரு நடனவகை.
தீப ஒளி : இது தீபாவளிக்கு இற்றைப் பெயர்.
மெய்ப்பு பார்க்கப்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக