திங்கள், 30 நவம்பர், 2020

குசேலா என்ற பெயர்.

 குசேலா (குசேலன்) என்பதில் இரு சொற்கள் உள்ளன.  ஒன்று குச என்பது. இன்னொன்று ஏலா என்பது.  குச என்பது இவர் குயவர் வழியினர் என்பதை உணர்த்தும். குய என்ற சொல் இன்றும் குச என்றே திரிந்து வழங்குகிறது. இது தமிழ்ச்சொல். ஏலா என்பது விளிப்பெயர். இதன் எழுவாய் வடிவம் ஏலன் என்பது. இது ஏடன் என்பதன் திரிபு.  இதன் பொருள் தோழன், நண்பன் என்பதே. எனவே, இஃது ஓர் இயற்பெயரன்று என்பது தெளிவாகிறது.

வியாசர் இதனைக் காரணப்பெயராய்க் கதையில் அமைத்துள்ளார்.

பிற்காலத்தில் குசேலன் பிரம்மம் என்னும் பெருமானை உணர்ந்து வாழலானார். பிரம்மத்தை உணர்ந்தவனே பிராமணன்.  ஆதலின் இவர் வாழ்ந்த காலத்தின்பின்பு இவர் பிராமணர் என்றே குறிக்கப்படலாயினார்.. குசேலனின் தொடக்கத் தொழிலை இலைமறைகாய்போல் பெயரில் அமைத்தது வியாசரின் கதைசொல்லும் திறனையே கோடிட்டுக் காட்டுகிறது.

தமிழ்ச்சொற்கள் சில திரிபுகளுடன் எவ்வளவு அழகுள்ளவையாக அமைந்துவிடுகின்றன என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். தொடக்கத்தில் எத்தொழில் உடையரேனும் பின்னர் அவர் தெய்வத்தொண்டராய் மாறுதற்கு இவர் வாழ்ந்த காலத்தில் வழியிருந்தது என்பது தெளிவு.   கண்ணன் அரசானதும் இதையே மீண்டும் வலியுறுத்துகிறது,  வியாசன் மீனவத் தொழிலினின்றும் கவியானதும் இதையே தெளிவுபடுத்துகிறது.

மக்கள் அனைவரும் ஒருவரே போல் வேறுபாடின்றி வாழ்ந்தனர். இதனைக் கூர்ந்துணரலாம் என்பதறிக.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.

பிறழ்வுகளைச் சரிசெய்தல் பெரிய வேலையாய் உள்ளது. நீங்கள்

பின்னூட்டமிட்டு உதவினால் நன்றியுடையேம்.


கருத்துகள் இல்லை: