புதன், 2 டிசம்பர், 2020

வினை மற்றும் பெயரில் விளைந்த வினைகள் (முயற்சித்தல்)

இக்காலத்தில் பார் என்ற சொல்லின் உண்மைப்பொருளைப் பெரிதும் மக்கள் கவனிப்பதில்லை. இதற்குக் காரணம் நோக்குதல் என்ற சொல் ஓரளவு மக்கள் மொழியிலிருந்து (பேச்சு) நீங்கிநிற்பதுதான். நாம் ஒன்றைக் கூர்ந்து "பார்க்குங்கால்" அதை நோக்குதல் என்றே சொல்லவேண்டும். பார்வை பரந்து செல்லுமாயின் "பார்த்தான்", "பார்த்தேன்" என்றெல்லாம் பார் என்ற வினைச்சொல்லினடிப் பிறந்த முற்றுக்களையும் பார்த்த, பார்த்து என்ற எச்சவினைகளையும் பயன்படுத்தலலாம்.


பார்வை பரந்து செல்லுதல் என்று குறிப்பிட்டோம். பர (பரத்தல்) என்ற வினையினின்றுதான் பார் என்ற வினைச்சொல் விளைந்தது. பரத்தல் என்பதும் வினை குறித்தது, பார்த்தல் என்பதும் வினைகுறித்தது, எனவே வினையினின்று இன்னொரு வினை தோன்றுவதற்கு இதுவும் ஓர் உதாரணம் ஆகும்.


பர > பார்.


ஒரு வினைச்சொல்லிலிருந்து இன்னொரு வினைச்சொல் தோன்றுவதுண்டா என்று யாரும் வினவின் இந்தச் சொல்லமைப்பினை நீங்கள் சுட்டிக்காட்டுவது சரி.


இன்னும் பல வினைகள் வினைகளிலிருந்தே திரிந்துள்ளன. அவற்றை எல்லாம் பட்டியலிட்டால் பெருகும். இன்னும் ஓர் எடுத்துக்காட்டு மட்டும் காண்போம்.


இறுதல் என்றால் முடிந்துவிடுதல் என்று பொருள். இதைக் கண்டுகொள்வது எளிது. இறுதி என்ற சொல்லைப் பார்த்து அறிந்துகொள்ளலாம்.


இறு என்ற வினைச்சொல்லிலிருந்து இற என்ற சொல் தோன்றியது. இறத்தல் என்றாலும் முடிவுதான். ஆனால் உயிருடன் வாழ்வோன் அல்லது வாழும் ஓர் உயிரியின் முடிவு. இச்சொல் ஒரு சிறப்புப் பொருளில் வருகின்றது. இறுதல் என்பது பொதுப்பொருள்:


இறு > இற.


இறத்தல் என்பதும் பின்னர் பொருள் விரியத்தான் செய்தது. உயிரற்றவை இறுதியடைதலையும் குறிக்க விரிந்தது. -டு: ஒரு சொல் வழக்கிறந்தது. இது "வழக்கு" என்பதை உயிருள்ளதுபோல் பாவிக்கிறது. --- உயிர்ப்பொருள் போல் ஒப்புமையாக வைக்கப்படுகிறது.


முயற்சித்தல் என்ற வழக்கில் உள்ள சொல்லைப் பார்ப்போம்.


முயல் (முயலுதல் ) என்பதே வினைச்சொல் ஆம். சி என்னும் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து, அஃது முயற்சியாகும். தொழிற்பெயரானபின் இகர வினையாக்க விகுதி பெற்றும் அது முயற்சித்தல் ஆகுதல் இயலாது என்றனர் தமிழ் வாத்தியார்கள். எனினும் தமிழ்ப்பேரகராதி இதனை பேச்சுமொழிச் சொல் என்று குறித்து பதிவு செய்துள்ளது. இது இப்போது அறிஞர் மொழிநடையிலும் இடம்பெற்றிருப்பதால் தொழிற்பெயரானபின்னும் மீண்டும் வினைச்சொல் ஆதலுக்கு ஓர் எடுத்துக்காட்டாகிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். இதன் எழுச்சியை மறுக்கின்ற முயற்சியால் பயனொன்றும் இல்லை என்றே நாம் சொல்லவேண்டும். முயற்சியெடுத்தல் என்பதன் இடைக்குறை என்றும் கொள்ளலாம். (யெடு) என்பது குறைவுற்றது என்று முடித்தல் கூடும்.


மெய்ப்பு பின்னர்

கருத்துகள் இல்லை: