ஞாயிறு, 20 டிசம்பர், 2020

பாரியையும் பர ஐயன் மொழியும்.

 கூரிய வெயில் காயும் இடங்களில் வாழ்வோர் நாளடைவில் சீரிய கருநிறத்தோர் ஆகிவிடுகின்றனர் என்று அறிவியலாளர் நமக்கு அறிவிக்கின்றனர். குளிர்வாட்டும் நிலப்பகுதி வாழ்நர் பளிச்சென்ற பாங்கான வெண்ணிறமுடையாராய்க் கவின் காட்டுகின்றனர். இங்கிருப்போர் அங்குச் சென்று புதிய உறைவிடம் புகுதலும் அங்கிருப்போர் இங்குவந்து மங்காத மாண்புறு வாழ்வின் வைகுதலும் உலகில் எந்நாட்டிலும் பலகாலும் காண்புறுமொரு நற்காட்சியே  ஆகும்.   ஆனால் ஆரியர் என்றொரு மக்கள் இவண் வந்தேறினர் என்ற தெரிவியற் கருத்து ( theory )  ஒரு வெற்றுத் தெரிவியலே அன்றி அதற்கு உரிய சான்றுகள் கிட்டிற்றில என்பதே உண்மையாகும்.  சமத்கிருத மொழியினிற் சொல்லாய்வு செய்து அதிற் பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளமையினால் ஆரியமக்களென்பார் புலப்பெயர்வும் கலப்புறவும்  நடைபெற்றன வென்பது ஆதாரமற்றதாகும்.  ரோமிலா தாப்பார் முதலிய வரலாற்றறிஞரும் இப் புலப்பெயர்வுத் தெரிவியலை ஏற்றுக்கொள்ளவில்லை.

சமஸ்கிருதமென்பது வெளிநாட்டு மொழியன்று.  அம்மொழிக்கு வழங்கிய பண்டைப் பெயர்களும் தமிழிலிருந்து அமைந்த பெயர்களே.  சமஸ்கிருதமென்பது ஒலிச்சிறப்பு மிக்க மொழி.  அதற்குப் பலபெயர்கள் வழங்கி மறைந்துள்ளன. அதற்குச் சந்தமொழி என்று பொருள்படும் சந்தாசா என்ற பெயர் வழங்கியது.  அது  சந்த அசைவு*1 என்ற தமிழ்ச் சொற்றொடரின் மூலம் ஏற்பட்ட பெயராகும்.  சமஸ்கிருதமென்பதும்  சமைந்த ஒலி என்று பொருள்தரும் சொற்றொடரிலிருந்து பெறப்பட்டதாகும். சமை > சம.   கதம்.> கிருதம்  ( கதம் என்பது ஒலி எனற்பொருட்டு.  கத்து >  கது > கது அம் > கதம். அதற்குமுன் வழங்கிய மொழிகள் பாகதங்கள்.  பா என்பது பர என்பதன் முதல் நீண்ட சொல்.  கதம் என்பது முன் சொல்லியதே.  பர > பார் > பா கடைக்குறை எனினுமாம். நானிலம் எனப்பட்ட பண்டைத் தமிழ் நிலப்பகுதிகளும் ஒன்றில் வைகாது எல்லா நிலங்களிலும் பரவலாக வாழ்ந்த பரையர் என்ற பறையர் வழங்கிய மொழி. இவர்களே ஆதிப்பூசாரிகள்.  இராமாயணம் பாடிய முந்து கவியாம் வால்மிகி என்னும் பெரும்புலவனும் அம்மொழியின் இணையற்ற புலவன்.  அம்மொழியின் முந்து அமைப்புக்கு உந்தும் இலக்கணம் அமைத்த பாணினியும் பரவலாக வாழ்ந்த கூட்டத்துப்  பர ஐயனே. மனுநூலை வரைந்த ஆசிரியனும் ஒரு திராவிட அரசனென்ப.  ஆரியன் என்று இன்று கூறப்படும் "பிறமண்ணான்" .  என்று கருதப்படுவோன் அல்லன். எந்த ஆரியன் என்பானும் எந்த முதன்மை  நூலையும் இயற்றவில்லை.  வியாசன் மீனவன்.   எப்படி வெள்ளைக்காரன் ஆரியர் எழுதியவை என்று இந்த நூல்களைச் சுட்டினான் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.

சமஸ்கிருதமென்பது தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பண்டை நாட்களில் பண்படுத்தப்பட்ட மொழியென்று அறிஞர் கா.  அப்பாத்துரைப் பிள்ளை தம் ஆராய்ச்சி நூலில் வெளியிட்டிருந்ததும் மறக்கலாகாது.

சமத்கிருதமென்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் சொற்கள் பல தமிழ் மூலங்கள் உடையவை என்பது இங்கு நிறுவப்பட்டுள்ளது.

இந்து என்ற சொல் சிந்து என்ற  சிறு நூல்வகையைக் குறிக்கும் என்றும்  அந்நூலால் ஆன துணி பண்டமாற்றுச் செய்யப்பட்ட இடமான ஆற்று நிலப்பகுதி குறிக்குமென்றும் வரலாற்றசிரியர் கண்டுபிடித்துள்ளனர் என்பதை அப்பாத்துரையாரே கண்டெழுதியுள்ளார்.  எம் நினைவில் அது தென்னாடு என்ற நூலில் உள்ளது. தென்மொழி என்ற அவரே எழுதிய நூலையும் படித்தறிக. கோவிட்19 காரணமாக இந்த நூல்கள் இப்போது எம் வசமில்லை. சிந்து மொழி என்பதோ திராவிட அல்லது தமிழின  மொழிகட்கு நெருக்கமானது.  இதை முன்பு இங்கு வெளியிட்டிருந்தோம்.

இனி மனைவியைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உள்ளன. அவற்றுக்கான விளக்கங்கள நம் இடுகைகளில் காண்க.  அவை வருமாறு:

பாரியை என்பதன் திறப்பொருள் : https://sivamaalaa.blogspot.com/2019/05/blog-post_30.html

பாரியை  https://sivamaalaa.blogspot.com/2017/05/blog-post_6.html

வாழ்க்கைத் துணை https://sivamaalaa.blogspot.com/2017/05/blog-post_47.html

இவற்றைப் படித்துத் தமிழ் மூலங்களை உணர்க. சமஸ்கிருதமென்பது ஆரிய ர் மொழியன்று என்பதையும் உணர்ந்துகொள்க.  ஆனால் கல்வி கலைகளினால் பெயர்பெற்ற உயர்ந்தோர்தம் மொழி. இவர்கள் இனத்தால் உயர்ந்தோர் அல்லர்.  அறிவால் உயர்ந்தோர்.  ஆர் என்ற உயர்வு குறிக்கும் தமிழ் விகுதியும் ஆர்தல் என்ற வினைச்சொல்லும் இனக்குறிப்புகள் அல்ல. பிராம்மணர் சூழ்ச்சி ஏதுமில்லை. சாதிகள் என்பவையும் தமிழர் நிலம் நான்கென்பதால் விளைந்தவை.  சாதிகள் என்ற பாகுபாட்டில் ஏற்றத்தாழ்வுகள் பின்னாள் ஒட்டு ஆகும். இவ்வேற்றத் தாழ்வுகள் சாதியாக்கத்தின் உடன்விளைவுகள் அல்ல. சாதி என்பது கடல்வாழ் உயிரினங்கட்கு ஏற்பட்ட குறிப்பு. "நீர்வாழ் சாதி" என்கின்றது தொல்காப்பியம். சார்தல் - வினைச்சொல். சார்பு:   சார் >  சார்தி > சாதி. (ஜாதி வேறு சொல்).

வான்மிகி பாடிய சங்கப் பாடலொன்றும் உள்ளது.  அவர் இன்னொரு வான்மிகி என்பது கற்பனை. பாத்திரப் படைப்புகளில் தமிழ் மூலங்கள் உள.  எ-டு: விபீடணன் < வி( ழு ) + பீடு + அண(விய) + அன் = விபீடணன் > விபீஷணன். விழுமிய பீடினை அணவி நின்ற பெரியோன்.. கைநீட்ட முடியுடையாள்:  கை+ கேச(ம்) + இ > கைகேயி. இரா + வண்ணன் > இராவணன்.

அறிக .நோயினோடு அணுக்கம் தவிர்க்க.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.


குறிப்புகள்

*1  சந்த அசை -  https://sivamaalaa.blogspot.com/2017/09/blog-post_13.html

மற்றும்  https://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_6.html.



கருத்துகள் இல்லை: