புதன், 16 டிசம்பர், 2020

னகரம் ணகரமாகத் திரியுமா?

 திரிபுகள் பற்றி அறிந்துகொள்வதற்குப் பல்கலைக்கழகத்துக்குப் போகலாம். அங்கு வாத்தியார் அவர் அறிந்தவற்றை அறிவித்து மகிழ்வார். தேர்வில் அவர் அறிவித்தவற்றில் பாதியைச் சொல்லமுடிந்தாலும் நீர் தேர்ந்தீரென்று ஒரு தாளில் எழுதிக்கொடுக்க அதுவே உம் சான்றிதழாக உம்வாழ்வில் மலரும். இருநூறு ஆண்டுகளின் முன்பானால் அவரே எழுதிக்கொடுத்தால் கதை அத்துடன் முடியும்.  இப்போது காலக்கடப்பினால் அதை அவர் செய்வதற்கும் பதிலாண்மை நடைமுறைகள் (Proxy procedures) உள்ளன. அதன்படி உம் தேர்ச்சி அறிவிக்கப்படும். இக்காலத்தில் இன்னொரு வகையிலும் அறிந்துகொள்ளலாம்.  அதைக் காப்பி ( குளம்பிநீர்)க்  கடையிலோ  ,  கடைத்தெருவிலோ அறிந்துகொள்ளலாம். முயற்சி திருவினை ஆக்கும். எந்த வகையானாலும் முயற்சிதான் தேவை. அதுவே உயர்வை  ( திருவினை)த் தரும்.

இன்று தமிழென்பது பேச்சில்தான் வாழ்கிறது.  அதுவும் பெரிதும் இல்லத்தினுள் வாழ்கின்றது. எழுத்துத் தமிழுக்கு வலு குறைந்து வந்துகொண்டே உள்ளது. அதற்குப் பலவிதமான ஊக்குவிப்புகள் தேவைப்படுகின்றன. இலக்கண நூலொன்று பத்துப் படிகள் (பிரதிகள் ) வெளியிட்டால் விற்றுமுடிக்க ஐம்பது ஆண்டுகள் ஆகலாம்.

மூன்று என்ற சொல்லில் னகர ஒற்று வருகிறது.   ஆனால் பேச்சுமொழியில் (னகரம்)   மூணு என்று பலுக்கப்பட்டு,  ( னகரம்)   ணகரமாகிவிடுகிறது. ஒன்று என்பது அதுபோலவே  ஒண்ணு ஆகி,  மற்றொன்றாய் வருகிறது

அணுக்கம் என்ற சொல்லின் அடிவினைச்சொல்  அணுகு(தல்) என்பது.   அனுபந்தம் என்ற சொல்லில் 

அணுகு >  அணு :> அனு. ஆகும்.

பந்தம் என்பதைப் பார்ப்போம்.

பன் + து + அம் =  பந்தம்.  இந்த எழுத்துப்புணர்ச்சி,  பின்+தி > பிந்தி என்ற சொல்லில்வருவது போன்றது.  முன்+தி > முந்தி என்பதும் அது.

லகரம் னகரம் ஆகும்.  பல் + து > பன்+து >  பந்து + அம் =  பந்தம்.

பல் என்ற அடி,  பல்+ து > பற்று > பற்றுதல் என்பதில் உள்ளது.

பந்தம் என்ற சொல்லுக்கும் அதுவே அடியாதலின்,  பந்தம் என்றால் பற்றி நிற்பது ஆகும்.

அனுபந்தம் என்றால்  அணுகிப் பற்றிநிற்பது,  ஆகவே  பின்னால் இணைந்து நிற்பது என்ற பொருள் கிட்டுகிறது. பற்றுதல் - இணைதல் ஒன்றுதான். சிலவேளைகளில் " இணைந்து, பற்றி" என்று மீமிசையாகச் சொன்னாலும் காதில் ஏற்றுவிப்பதில் சொல்வோன் வெல்லவேண்டுமே!

ஈங்கு  அணுகு என்பதில் உள்ள அணு,  அனு என்றாயது காண்க.

அனுமன் என்றால் மனிதனை அணுக்கமாக உடைய பிறவி என்று பொருள். இவ்வணுக்கம் உருவில் அணுக்கமென்கிறது  இராமகாதை. கதையைச் சுவைப்படுத்த அப்படிச் சொல்லியிருந்தாலும்,  மனிதத் தன்மையை அணுகி நின்ற பிறவி என்று அறிந்துகொள்ள நுழைபுலம் இன்றியமையாதது ஆகும்.

இங்கு நாம் கூறவிழைந்தது யாதெனில்  ணு -  னு  ஆனதுதான்.( ன வருக்கமெல்லாம் ண வருக்கமாய் ஏற்ப மாறும்.

இப்படித் திரிந்த வேறு சில சொற்களை நீங்கள் கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்.


அறிக மகிழ்க.


மெய்ப்பு பின். 

பிழைகளை நீக்கி வாசித்துக்கொண்டிருங்கள்.

வருவோம், பிழைநீக்கம் தருவோம்.


நோய்க்கு இடம் கொடேல். (ஓளவை)



.

கருத்துகள் இல்லை: