சனி, 19 டிசம்பர், 2020

சொத்து உடைமை, செல்லுபடி, சோலி (ஜோலி) உடைமை

 இதனை பற்றி நன்கு அறிந்து கொள்ள இவ்விடுகைகளையும் படித்தறியவும்.

சொந்தம் சுதந்திரம் :  https://sivamaalaa.blogspot.com/2015/12/blog-post_22.html

சொம் - சொந்தம் - சொத்து. https://sivamaalaa.blogspot.com/2016/05/blog-post_29.html

ஒருவனுக்கு எந்தப் பொருளும் சொந்தமில்லையானால் அவன் வெறும் அற்றைக் கூலியாளாக இருக்கவேண்டும்.  ஒரு விவசாயியிடம் போய் கூலிவேலைக்கு அன்றன்றைக்கு உழைத்து விவசாயி தரும் உணவினை உண்டுவிட்டு, அங்கு வேலை இல்லையென்றால் இன்னொருவனிடம் அதேபோல் வேலை செய்துவிட்டு, மனைவி பிள்ளைகள் இருந்தால் கிடைக்கும் உணவினை அவர்களுக்கும் கொடுத்து உயிர்வாழ்பவன் அவன்.

ஒரு செம்மையான மனிதன் எனில் நிலமும் வருமானமும் இருக்கவேண்டும். அதனால் கிட்டிய அதிகாரமும் இருக்கவேண்டும்.  ஆடு மாடுகள் இருக்கவேண்டும். மாடு என்ற சொல்லுக்கே செல்வம் என்ற பொருளும் உள்ளது.

செம்மை என்ற சொல்லின் ஒரு பகுதியாகிய செம் என்பதே  சொம் என்று திரிந்தது.   செம்பொருள் என்பது சொம்பொருள் என்றும் திரிந்து வழங்குவது காண்க. செம்பாதி என்பது சொம்பாதி ஆகும்.

செம் என்பதோ ஓர் இருபிறப்பிக் கிளவி ( கிளவி என்றால் வார்த்தை )..  அதன் முந்து வடிவம் செ அல்லது செல். நிலம்,  வீடு, மாடு கன்று ஆடு நாய் என்பன உடையவன் செல்லுபடியாகத் தக்கவன்.  அவன் எதுவும் சொன்னால் அது செல்லும்.   செ,  செல், செம் என்பன தொடர்புடையவை.  நிலத்தாலும் விளைச்சலாலும் வாழ்ந்த பண்டை மன்பதையில் செம்மையானவன்,  செம் என்ற நிலையை எய்தியவன் சொம் உள்ளவன்.

சொம் >  சொம் + து  >  சொ + து > சொத்து.

நிலம் முதலியவை,  தம் சொம்  ( இதை முறைமாற்றி )  சொம்+ தம் > சொந்தம் ஆகும்.  அவன்பொருட்கள் அவன் சொந்தம். அவன் குடும்பத்திலிருந்து கிளைத்துத் தனிக்குடும்பமானோர்,  அவன் " சொம்+ தம்" ( சொந்தம்).

விளைச்சலின் பகுதி,  சொம்பாதி என்று குறிக்கப்பட்டது.  உடைய ஆள்  சொம்மாளி எனப்பட்டான். 

இன்னும் சொல்லப்போனால்,  சொத்து இருந்தவன் பேச்சுரிமை உடையவன் ஆனான்.  செல்லும் வாய் ஒலியேதான் சொல்.   செல் > சொல்.  செம்> சொம்.

செம்பாதி -  சொம்பாதி.

பதிதல் வினைச்சொல்.  பதி  என்பது முதனிலை நீண்டு பாதி ஆகும். ஒருவன்பால் பதிவுற்ற  பொருட்களே செம்பாதி/ சொம்பாதி  ஆகும்.  பகுதி என்ற சொல்லும் பாதி எனவரும். என்றாலும் அது வேறுசொல்.  பதி > பாதி என்பது இங்கு உரிமையாய்ப் பதிவுற்றது என்பதே இது.  இடு > ஈடு என முதனிலை திரிதல் காண்க.

சொத்து என்று சொல்லிக்கொள்ளப் பொருளுடைமை,  சொல் > சொ > சொத்து எனினுமாம்.  சொல்லிக்கொள்ளும் தகுதியுடைமை:  சொல் > சொல்+ இ = சோலி உடையவன்:  அதாவது சொத்து உடையவன். பெயர் உடையவன். அதாவது இல்லாரிடமிருந்து பெயர்த்தறியத் தக்கவன்  பேறு உடையவன். பேரும் உடையவன்.

இவற்றை கூர்ந்துணர்ந்து கொள்ளுங்கள்.

மகிழ்வீர்.

நோயிலிருந்து காத்துக்கொள்க. 


குறிப்பு:

சொல் > சோல் > சோல் இ > சோலி  ( ஜோலி என்பது பின்னைத் திரிபு).

மெய்ப்பு பின்



கருத்துகள் இல்லை: