" அத்துவித வத்து " என்ற தொடரைவைத்துப் பாடினார் தாயுமான சுவாமிகள். அத்துவிதமென்பதற்கு நேரடியான இன்னொரு தொடர்: அத்வைத வஸ்து என்பதாகும்.கடவுள் வேறு மனிதனாகிய "நான்" வேறு உணர்வோமானால் அது துவைதம் என்பர்.
கடவுளும் நான் என்னும் மனிதனும் ஒன்று என்போமானால் அது அத்வைதம் ஆகும். இரண்டல்லாத ஒருமைநிலை அதுவாகும். இயேசு கூறிய நான் கடவுள் என்ற கொள்கை உண்மையில் நமது வேதங்கள் கூறிய அத்வைத (வேதாந்த)மே ஆகும். இக்கொள்கையை அவர் இந்தியாவிற்கு வந்து சொல்லியிருந்தால் யாரும் அவரைக் குறுக்கையில்* அறைந்திருக்கமாட்டார்கள் என்று நாம் திடமாகச் சொல்லலாம்.
கடவுள் பேரான்மா அவர்போலவே அமைந்த நாமோ ஒவ்வொருவரும் ஒரு சிற்றான்மா. கடவுளைப் போலவே மனிதனும் ஒரு படைப்பாற்றல் அல்லது ஒன்றைச் செய்து உருவாக்கும் ஆற்றல் உள்ளோனாய் இருப்பதற்குக் காரணமே நாம் கடவுளிலிருந்து போந்ததே ஆம்.
கண்ணன் ஓர் அவதாரம் அல்லது தோற்றரவு என்பதே மகாபாரத நூல் கூறுவது. இதையும் தாண்டி அவரே கடவுள் என்பது கருத்து. தாமே கடவுளும் ஆனவர் - பரந்தாமர்.
இப்போது பரந்தாமன் என்ற சொல்லை ஆய்வோம். இச்சொல்லில் பரம் என்ற சொல்லும் தாம் என்ற சொல்லுமிருப்பதால், அவர் தாமே பரம் ஆகிறார். பரம் என்பது கடவுள் எனற்பொருட்டு. தாம் என்பது தாம் என்று நாம் பயன்படுத்தும் சொல்லே ஆகும். தாமே பரம் என்ற சொற்றொடர், பரம் தாம் என்று மாறி அமைந்தது. இது அன் விகுதி இணைந்து பரந்தாமன் ஆகிற்று, இஃது முறைமாற்று அமைப்பு.
பரம் + தாம் + அன் = பரந்தாமன்
வேறு பொருள்: பரந்த ஆகாயத்தில் உள்ளவர். பரந்த + ஆம்+ அர். ஆம் என்பது ஆகாயம் என்பதன் இடைக்குறை. ஆகும் என்பதன் தொகுப்பும் ஆவது இச்சொல். அன். அர் என்பன ஆண்பால் பலர்பால் (உயர்வுப் பன்மை ) விகுதிகள்
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
* குறுக்கை - சிலுவை என்பதற்கு இன்னொரு பெயர். இச்சொல்லுக்கு குறுக்கை என்பதை ஞா.தே, முதலிய அறிஞர் வழங்கினர். குறுக்கை என்பதன் பழைய பொருள் வேறு சில.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக