திங்கள், 28 டிசம்பர், 2020

ஊரார்வீட்டு நெய்யும் பெண்டாட்டி கையும். அது கருணை.

 எள்நெய் என்ற சொல்லைத்தான் மக்கள் திரித்து உளைத்து ( = உச்சரித்து) எண்ணை என்று மாற்றிக்கொண்டனர்.  கொஞ்ச நாள் கடைக்காரர்களும் எண்ணை என்றே அச்சடித்துத் தம் புட்டிகளில் ஒட்டினார்கள்.  அது சரியன்று  என்று தமிழ்வாத்திமார் எதிர்த்ததனால் இப்போது மீண்டும் நல்லெண்ணெய் என்று எழுதத் தொடங்கினர். இதில் நமக்கொன்றும் உளைத்தல் ( வெறுப்பு )  இல்லை. நாம் இங்குக்  கண்டுகொள்ள விழைவது என்னவென்றால், நெய் என்பது ணை என்று மாறிவிடத் தக்கது என்பதுதான்.

ஓர் ஊரில் ஒரு மனைவி, அவள் கணவன் சாம்பாரும் சாதமும் சாப்பிடும் போதெல்லாம் அவன் நெய் கேட்டுத் தொந்தரவு செய்வானாம். அவனுக்குத் தினமும் வேண்டுமென்பதற்காக மனைவியானவள் கொஞ்சம்தான் சோற்றில் போடுவாளாம்.  மீண்டும் கேட்டால் அவளுக்குக் காது கேட்காது!  அடுக்களைக்குள் போய்விடுவாள்.

ஒருநாள் நெய் முற்றும் தீர்ந்துவிட்டது.  அடுத்தவீட்டில் போய் நெய் கேட்கவே, அந்த வீட்டுக்காரர்கள் நெய்யைப் புட்டியுடன் கொடுத்துவிட்டனர். நிறையவே இருந்ததாம்.  மனைவியானவள் அதைக் கொண்டுவந்து, அன்று தன் கணவனுக்குப் "போதும் போதும்" என்று சொல்லுமளவுக்கு நெய்யை உருக்கி ஊற்றினாளாம். அதே நெய்யில் வறுத்த முருங்கை இலைகளை வேறு அன்புடன் பரிமாற, அவற்றையும் சோற்றில் பிசைந்தபடி அன்றைத் தினம் நன்றாகச் சாப்பிட்டானாம்.

அப்போது அவ்வீட்டுக்கு அடிக்கடி வரும் ஒரு மூதாட்டியும் அங்கு வந்து சேர்ந்தாள்.  ' எப்படிச் சாப்பாடு?"  என்று அவள் வினவ,  "ஊரார் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே" என்று சொல்லிக்கொண்டு, கணவன் எழுந்து கைகழுவ மகிழ்ச்சியுடன் சென்றானாம்.

தன் சொந்த நெய்யாய் இருந்தால் அது பாராட்டுக்குரிய நெய் என்னலாம். இது அடுத்தவீட்டு நெய்யாயிற்றே.  அது கருப்பு நெய் என்றுதான் சொல்லவேண்டும். பொறுப்பில்லாத மனைவி கருப்பு உள்ளத்துடன் கணவனுக்கு இட்ட கருநெய்.    இது  எள்நெய் எண்ணை ஆனதுபோல் கருநெய் கருணை ஆகி,  சாம்பார் சோற்றில் அதிகமாகவே கலந்துவிட்டது. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுதானே? கணவனுக்குக் கொஞ்சம் வயிறு சரியில்லாமல் போய்விட்டது.

கணவன்பால் மனைவிக்கு வந்த கருணைதான் என்னே!

கை என்ற சொல்லும் கர் என்று திரியும். இந்த இடுகையை வாசித்துக் கொள்ளுங்கள்.  கர்+ அம் = கரம். 

https://sivamaalaa.blogspot.com/2020/12/blog-post_12.html

அந்தப்பெண்டாட்டி தன் கரத்தால் பரிமாறிய நெய் ஆதாலால் அது  கைநெய் என்று பொருள்படும் கர்நெய் தான். கர்நெய் அப்புறம் கர்ணை,  கருணை  என்று மாறியிருக்கும்.  இந்த நிகழ்ச்சி மிகப் பழங்காலத்தில் நடந்ததனால் இதை உங்கள் ஆய்வுக்கே விட்டுவிடுகிறோம்.


தொடர்புடைய வேறு இடுகைகள்:

தனிமையில் கிடந்து இறந்தவர்கள் 

https://sivamaalaa.blogspot.com/2020/11/blog-post_85.html

வீரியம்  https://sivamaalaa.blogspot.com/2020/05/blog-post_24.html

கைகேயி  https://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_15.html


அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்னர்



கருத்துகள் இல்லை: