வியாழன், 26 நவம்பர், 2020

தனிமையில் கிடந்து இறந்தவர்கள்

என்பொடு தோலுமாய் இளைத்த உடம்பினர்

எண்பது போல்பலர் எண்ணிடு அகவையர்

பண்புடை யவர்கள் பாவம் ஒற்றையாய்

நண்பர் உறவினர் யாருமி  லாதவர்


நகர்களில் நாட்களைக் கழித்தோர் இவர்கள்

பகர்வதும் இலர்தம் துயர்தரு தனிமை;

புகர்மலி மானிட வாழ்க்கை! ஒருநாள்

தகர்ந்துயிர் நமற்குத் தந்துல ககன்றனர்.


போயபின் ஆரும்  அறியாப் புகுதியாய்

மாயவிவ் வாழ்வில் மயங்குல கசங்காச்

சாயுறு கூடாய்க் கிடந்தனர், சாவினை

வாய்கொடு சொல்வார் வையகத் தில்லை.   


தனிமைத் துன்பம் முடிவிலும் தொடர்வது;

மனிதன் சாவில் இணைந்திடு பின்பும்

புனிதமும் புனலா டுதலும் வேண்டுமே;

இனையதோர் காப்பும் இனிவரல் நாடுவம்.


உள்ளார் தனியெனில் உள்ளவர்  கூடி

மெள்ள அவரை மன்பதை புகுத்தித்

தள்ளா அணைப்பினில் தகையுறக் கூட்டிப்

பிள்ளைகள் போலும் பிழையற நின்றும்


இறுதிக் கருமமும் இனிதாய்ப்

பெறுகபின் செல்கெனப் பீடுறச் செய்வமே.  


பகர்வதும் -  சொல்வதும்

இலர் - இல்லை 

நமன் - எமன். நமற்கு - எமனுக்கு.

புகர்மலி -  துன்பம் நிறைந்த;

புகுதி -   நிகழ்வு, சம்பவம்.

அசங்கா(த) - (இரங்கி) அசையாத 

சாயுறு கூடாய் - இறந்த (சடலமாய்)

வாய்கொடு சொல்வார் - அறிவிப்பவர்கள்

தனிமைத் துன்பம் - ஆதரவின்றி வாழும் இடர்

முடிவிலும் -  இறந்துவிட்ட பின்னரும்

புனிதமும் புனலாடுதலும், - சடங்குகளும் பிணம் குளிப்பாட்டுவதும்

இனையதோர் காப்பு - இத்தகைய ஒரு காவலுடைய சூழல்

நாடுவம் -  நாடுவோம்.

உள்ளார் தனியெனில் உள்ளவர் கூடி - தனியாக வாழ்ந்து வருந்துகிறவர்களைப் பக்கத்தில் வாழ்பவர்க்ள் ஒன்றுசேர்ந்து;

மன்பதை புகுத்தி -  சமூகத்துக்குள் கொண்டுவந்து;

தள்ளா அணைப்பினில் - (இத்தகு தனியவர்களை) விலக்கி விடாமல் உதவிக் கரம்   நீட் டி      உடன் சேர்ந்து;

பிள்ளைகள் போலும் - ( பிள்ளைகுட்டி இல்லாதவர்கள் ஆகையால்)

நாமே பிள்ளைகள் போலச் சுற்றி நின்று;

இறுதிக் கருமம் -  இறுதிக் கடன்களை [முடித்து அவர்

உடலை அடக்கம் அல்லது தகனம் செய்வோம்.]


இதுபற்றிய ஒரு துன்பச் செய்தியைக் காண

கீழ்க்கண்ட தொடர்பினைச் சொடுக்கவும்: 


https://theindependent.sg/remains-of-elderly-woman-dog-found-in-condo-unit-over-a-year-after-she-was-last-seen/


எழுத்துப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்பெறும். 

கருத்துகள் இல்லை: