இச்சொல்லை இக்காலத்தில் நாம் பெரும்பாலும் எதிர்கொள்வதில்லை. இக்காலங்களில் மிகுதியானோர் வான்வழிச் செலவு என்னும் பறந்து செல்லுதலை மேற்கொள்வதுதான் காரணம். கப்பலில் சென்றால் ஒரு துறைமுகத்தை அடையுமுன் வழிகாட்டும் கலங்கரை விளக்கங்களைக் காணவேண்டிவரும். கலம் என்பது நீர்மேலூர்தி. கரைதல் ஆவது அழைத்தல். விளக்கு - இங்கு எரியும் நிலைப்பந்தம். இது ஓர் அழகான சொல்தான்.
நீர்மேலூர்திகள் - ஓடம், படகு, கட்டுமரம், தோணி, கலம் எனப்பலவுள்ளன. இதைப் படிக்கும் நேயர்கள், நிமேதி என்பது என்ன ஊர்தி என்று எனக்குத் தெரிவியுங்கள். (பின்னூட்டமிடுங்கள்).
கப்பல் என்பது நல்ல தமிழ்ச்சொல் என்று ஒரு தமி ழாசிரியர் வெளியிட்டிருந்தார். அதற்கான விளக்கத்தையும் அவர் தெரிவித்திருந்தார். அதை அவர் நூலில் கண்டுதெளிக. ( உரிமைப்பதிவு செய்த நூல்: அதிலுள்ளதை இங்கு விரித்தல் இயலாது, , மன்னிக்கவும் ).
கப்பலென்பது "கப்பு கப்பு" ஒலிசெய்த வண்ணம் புகைவிட்டுக்கொண்டு சென்றதால் ( அந்தக்காலத்தில் எல்லாம் நீராவிக் கப்பல்கள்) ஏற்பட்ட பெயர் என்று சில மூத்த பெருமக்கள் கூறுகின்றனர். இருக்கலாம்.
இயங்கு ஈருருளிகள் வந்த காலத்தில் வாழ்ந்த அம்மையார் ஒருவர், "மோட்டோர் சைக்கிள்" என்பதை "திக்குதிக்கு வண்டி" என்றாராம். இதிலிருந்து "திக்குருளி" என்ற சொல் ஏற்படவில்லை.
அதைப்போல ஒலிக்குறிப்புகளிலிருந்து சொற்கள் எல்லாமொழிகளிலும் ஏற்பட்டுள்ளன. காவ்காவ் என்று குலைப்பதால் (குரைப்பதால்) காவ் என்பது சீனமொழியில் நாய்க்குப் பெயராய் உள்ளது. குர்ர்ரோ குர்ர்ரோ என்று கத்துவதால் காக்கைக்குக் குரோ என்று ஆங்கிலத்தில் பெயர் அமைந்தது. கப்பல் என்ற சொல்லும் ஒலிக்குறிப்பு அடிப்படையில் எழுந்த பெயராயும் இருக்கலாம். பெயர்கள் பல காரணங்களால் ஏற்படுவன ஆகும்.
ஆனால் கப்பலென்பது பெரிய கடல்களைக் கடத்தலுக்கு (கடந்துசெல்லுதலுக்கு) உதவும் பொருட்டு ஏற்பட்ட நீர்மேலூர்தியாம். கடப்பு+ அல் = கடப்பல் என்ற பெயர் இடைக்குறைந்தும் கப்பல் என்ற பெயர் வந்துற்றது. இச்சொல் ஒரு பல்பிறப்பி ஆகும். இது, பல உள்ளுறுப்புகள் அடங்கிய உடலின் மேற்பாகம், அடங்கம் > அங்கம் என்று இடைக்குறைந்து பெயர் ஏற்பட்டது போலுமே. இடைக்குறைச்சொற்கள் மிக்கு மிளிரும் மொழி தமிழாகும். இத்தகைய சொற்கள் (திரிபுகள்) மிக்கிருந்த காரணத்தால், தொல்காப்பியர் செய்யுளீட்டச் சொற்களில் திரிசொற்களையும் உள்ளடக்கினார். இயன்மொழியாம் தமிழ் தன் திரிபுகளால் பலமொழிகளைப் பிறப்பித்துத் தாயானது.
வருகிறான், போகிறான் என்பவற்றில் { இடைநிலைகள் கிறு (கின்று, ஆநின்று) } ---- கிறு என்பது கு+இன்று என்பதன் புணர்வில் விளைந்த இடைக்குறையாகிய இடைநிலை என்பதை அறிஞர் வரதராசனார் கண்டுரைத்துள்ளார். இஃது நுண்மாண் நுழைபுலம் ஆகும்.
இப்போது தீபத்தம்பம் அல்லது தீப ஸ்தம்பம் என்ற சொல்லைக் காண்போம். ஸ்தம்பம் என்பது தானாய் நின்றுகொண்டிருப்பது. தன்+பு+அம் = தம்பம். இச்சொல் பின்பு +அம் = பிம்பம் போலும் அமைந்தது. பிம்பம் என்பது பின்வீழ் ஒளிநிழல். தன்பம் - தம்பம் தானாய் ( ஒற்றையாய்) நிற்பது. தன் பின் பிறந்தவன் தம்பி (தன்பின்) என்றானது கண்டு தெளிந்துகொள்க. பின்னாளில் தீபத்தம்பம் தீபஸ்தம்பம் என்று மெருகுற்றது.
தீபம் என்பது தீ பற்றி எரியும் கோலைக்குறித்தது. தீ + பற்று + அம் > தீப(ற்ற)ம் > தீபம் என ஆகிய இடைக்குறைச் சொல். தமிழில் இடைக்குறைகள் கூடுதல்.
இதைச் சுருக்கமாக ஆய்வாளர் தீ + பு+ அம் : தீபம் என்று விளக்கிக்கொள்ளலாம். மோசம் இல்லை.
இதைப் பாருங்கள்
பத்தினோடு ஒன்று > பத்தின் ஒன்று > பதினொன்று.( பதுனொண்ணு ). நன்றாக இருக்கின்றது.
பன்னிரண்டு: பத்தினோடு இரண்டு > ப(த்தி)ன் இரண்டு > பன்னிரண்டு.
பத்து என்ற சொல் பல் என்பதிலிருந்து வருகிறது. பல்>பன் திரிபு. இன்னொரு வகை விளக்கம்.
விளக்கம் பலவென்று துளக்குறா நெஞ்சம் வாழ்க.
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக