ஞாயிறு, 29 நவம்பர், 2020

புறத்தோதிய புரோகிதன்.

 பண்டைக் காலத்தில் அரசரும் அவர்தம் கொடிவழியினரும் விரிவான வாழிடங்களில் வசதிளுடன் வதியும் பாக்கியத்தை அடைந்திருந்தனர். இயல்பான மக்கள்,  குடில்கள், குடிசைகள், செலவமிலார் எனினும் சீருடன் வாழும் வீடுகள் ஆகியவற்றில் குடியிருந்தனர். கடவுட் கொள்கைகள் அப்போதுதான் மெல்ல மக்களிடைப் பரவிக்கொண்டிருந்தன. அவற்றை ஒருவாறு அறிந்த மக்கள், இறைவணக்கம் செய்யத் தலைப்பட்டனர். மரங்களிலும் குகைகளிலும் வாழ்ந்துகொண்டிருந்த அந்தக் கட்டத்தைக் கடந்து பலர் சேர்ந்து ஓரிடத்து  வைகும் நிலையை மக்கள் அடைந்துகொண்டிருந்தனர். ( சேரிகள் அமைதல் ). அவர்கள் பேச்சும் கருத்துகளும் வளர்நிலைக்கு வந்துகொண்டிருந்தன. அது மொழிவளர்ச்சி எனலாம். புதிய சொற்கள் உருப்பெற்று உலவின. பயன்படாத காட்டுக் காலத்துச் சொற்கள் மெல்ல மறைந்துகொண்டிருந்தன. மக்கள் தாம் சொந்தமாகச் சாமி கும்பிட்டதுடன், அத்தொழுகையை நன்றாகச் செய்வதாக உணரப்பட்ட சிறப்புச் செயலர்களை அறிந்தணுகி அவர்களிடமும் சென்று இறைவணக்கம் செய்வித்து மனனிறைவு கொண்டனர்.  ஓ ஓ ஓம் என்று ஒலியெழுப்பித் தொழுகைகளை நடாத்திய இவர்கள் ஓதுவோர் ( ஓதுவார்)  என அறியப்பட்டனர்.  ஓ என்பது ஓசை, அதை எழுப்பி இறைவணக்கம் செய்தோர் ஓது ( ஓ அடிச்சொல், ஒலிக்குறிப்பில் தோன்றிய சொல்) > ஓதுவார் என்று சுட்டப்பட்டதன் அமைதிறத்தை நாம் எளிதில் சிந்தித்து அறியலாகும். 

குடியிருப்புகள் இக்காலக் கட்டத்தில் பெரும்பாலும் சிறியனவாய் இருந்தன.ஓதுதொழிலர்கள் வீடுகட்கு வெளியில் இருந்துகொண்டே தங்கள் வேலையைச் செய்தனர்.   வெளியிலென்றால் வீட்டின் முன்பு ஒரு மரத்தடியிலோ அல்லது ஆலமரத்தடியிலோ இவை நடைபெற்றன.   அடிக்கடி மக்கள் குழுமி இத்தொழுகைகள் நடைபெற்ற இடங்கள்  "ஆலயங்கள்" எனப்பட்டன. ஆல் -  ஆலமரத்தடி;  அ - அங்கு;  அம் - அமைந்த இடம்.  எல்லாம் சேர்த்தால்  ஆலயம் (என்னும் சொல்) ஆய்விடும். மரப்பட்டை சீரை > சீலை > சேலை என்று இன்று பட்டுச்சீலையையும் குறிப்பதுபோலவே,  ஆலயம் என்ற சொல்லும் அதன் அமைப்புக் காலத்தைக் கடந்து இன்று பெரும் கற்கட்டிடங்களையும் குறிப்பதாய் வளர்ந்து பொருளைத் தருகிறது.

வீட்டுக்கு வெளியில் அல்லது மரத்தடியில் செயல்பட்டனர் என்பதுதோன்ற இவ் வோதுவார்கள் "புற ஓதிகர்" எனப்பட்டனர். இதுவே பின் திரிந்து,  "புரோகிதர்" என்றானது.

புற ஓதிகர் >  புரோதிகர் > புரோகிதர்.  (திரிசொல்).

புறம்  ஓது  இ  கு  அர். இவை சொல்லுறுப்புகள்.

ஓதிகர் > ஓகிதர். 

இதில் எழுத்து முறைமற்றுத் திரிபு ஏற்பட்டுள்ளது. இது போல எழுத்து முறைமாற்று ஏற்பட்ட சொல் , விசிறி > சிவிறி;  மருதை > மதுரை ( எனப்பல). றகரத்துக்கு ரகரம் வந்த சொற்களைப் பழைய இடுகைகளில் கண்டறிக. ரகர றகர வேறுபாடின்றி வழங்கிய சொற்களும் இப்போது வழங்கும் சொற்களும் உள. அவற்றைச் சில இலக்கண நூல்களில் பட்டியலிட்டிருப்பார்கள். அந்நூல்களில் கண்டறிக.

நம்பிக்கை மிக்குவந்த பிற்காலத்தில், வீடுகள் விரிவாக அமைக்கப்பட்டு புரோகிதர் வீட்டினுள் வரவழைக்கப்பட்டுத் தம் சேவைகளைச் செய்தனர். இதனால் அக + ஓதிகர் = அகோதிகர் என்ற ஒரு புதுச்சொல்லைப் படைத்துக்கொண்டு மகிழ்வுடன் இருங்கள். புதுச்சொல்லை அது வழக்கில் இன்மையால் பிறர் அறியார். இது ஒவ்வொரு மொழிக்கும் உள்ள இயற்கையான வரம்பு ஆகும். புற ஓதிகரென்பது திரிந்தமைந்திருந்தாலும் வழக்குண்மையால் பொருள்தருகிறது. மொழியில் உள்ள எந்தச் சொல்லிலும் சரியும் இல்லை, தவறும் இல்லை. எந்தச் சொல்லிலும் பொருள் உள்ளில் இல்லை; பொருள் இருப்பதாக மனிதன் உணருகிறான். பொருள் என்பது சொல்லின் உள்ளுறைவு என்று நீங்கள் நினைத்தால், " சிங்க் சியாங்க்" என்றவுடன் உங்களுக்குப் பொருள் தெரியவேண்டுமே! அதில் ஒரு சீனன் பொருள் உணர்கிறான், தமிழன் விழிக்கிறான்.  காரணம், தமிழில் அந்தச் சொல் இல்லை என்பது மட்டுமன்று;  சிங்க்சியாங்கில் பொருள் ஏதும் உள்ளுறைந்திருக்கவில்லை. என்பதுதான் உண்மை. அமைந்துவிட்ட ஒரு சொல்லில் ஒலிப்பிறழ்வுகள் ஏற்பட்டு அதுவே வழக்குக்கு (பொதுப்பயன்பாட்டுக்கு ) வந்துவிட்டால், அதுவே பின் சரியென்று கொள்ளப்பட்டுவிடும்.  அப்படி ஆனதுதான் விசிறி > சிவிறி. இது தத்துவம்.

புற+ ஓது + இகு + அர் = புரோxகிதர் எனினுமாம். இகுதல் - தாழ்ந்துவிழுதல் ,  இகுத்தல் - (முழவு முதலிய )  ஒலித்தல்.  சுட்டடிப் பொருள்:  இ - இங்கு; கு - சென்றுசேர்தல்.  இங்கு > இகு. இடைக்குறை. இவற்றைக்கொண்டு ஏற்ப வரையறவு செய்தல் ஆகும். அமையும். 

குறிப்பு:

புரோகிதன்

புறஓதிகன்

புறஓகிதன்  (முறைமாற்று:  திக > கித)  இருகுறில் முறைமாற்று

புறஓகிதன்

புரஓகிதன்  ( றகர ரகரத் திரிபு)

புரஓகிதன்

புரோகிதன் -  பு ர்  அ ஓ ~ கிதன்

பு ர் ஓ கிதன் : ( அகரம்) கெட்டு மிஞ்சிய (ர் ஓ) இணைந்தன. 

அமைவு  நன்று.

பாயசம்:

பய அசம் >  பயாசம் > பாயசம்

( குறில் நெடில் முறைமாற்று)

பயறு  ( பய - கடைக்குறை)

அசித்தல் - வினைச்சொல்  பொருள் : உண்ணுதல்.

அசி + அம் =  அசம் ( இகரம் கெட்டுப் புணர்ந்தது): 

உண்பொருள்.


அறிக மகிழ்க. 


மெய்ப்பு பின்னர்.

கருத்துகள் இல்லை: