வியாழன், 26 நவம்பர், 2020

விந்தை

 இச்சொல்லைப் பார்ப்போம்.

இது ஓர் இடைக்குறை சொல். எனினும் அதன் மூலச்சொல் வழக்கிறந்துவிட்டது. ஒரு செடியில் பூத்தது, உலரத் தொடங்கி விழுந்து மறைந்தபின், புதிய மலர்கள் தோன்றிப் பார்ப்போரை மகிழ்விக்கின்றன. மொழியின் ஒரு நீண்ட உலக ஓட்டத்தில் சொற்களும் இவ்வாறே மறைந்துவிடுகின்றன. இயற்கை ஒலியைத் தன் செயற்கை முயற்சியினால் அமைக்கும் சொற்களும் விதிவிலக்கு ஆகமாட்டா. ஆங்கிலோ செக்சன் மொழியிலிருந்த எத்தனையோ சொற்கள் இன்று வழக்கில் இல்லை.  " மர்ட்ரம்" என்பது ஒரு தண்டத்தின் ( அபராதத்தின்) பெயர். ஒருமனிதனைக் கொன்றுவிட்டால் அரசன் அதைக் கொன்றவன்மேல் விதித்தான். அதிலிருந்து கொலை என்று பொருள்படும் ஆங்கிலச் சொல் " மர்டர்" வந்தது.  ஆனால் இற்றை ஆங்கில மொழியில் " மர்ட்ரம்" இல்லை. அஃது ஒரு வரலாற்றுச் சொல் ஆகிவிட்டது. அறிஞர்தம் வரலாற்று ஆய்வில் இது வெளிப்படுகிறது.

விந்தை என்ற சொல்லின் மூலச்சொல் வியந்தை என்பது.  இந்த வியந்தை என்ற சொல்லின் ஓர் எழுத்து அல்லது ஒலி மறைந்தது.  அது யகரம்தான்.  வியப்புக்குரிய ஒன்றுதான் விந்தை.  வியன் > வியந்தை > விந்தை ஆயிற்று. விந்தை என்பதற்கும் விந்து என்ற சொல்லுக்கும் தொடர்பில்லை. இதை அறியாமல் விந்தை என்ற சொல்லைப் பகுதி, விகுதி என்று பிரித்தால் அது  முட்டாள்தனம் ஆகிவிடும். இத்தகைய சொற்களைத்  தொல்காப்பியப் பேராசான் திரிசொல் என்று வகைப்படுத்தினார்.

இடுக்கண் > இடுக்கண்+து > இடுக்கட்டு > இக்கட்டு என்றானதுபோலவே. இக்கட்டு என்பது திரிசொல் ஆதலின் அதில் பகுதி அல்லது முதனிலை அதன் உருவில் அங்கு இல்லை.

ஆங்கிலம் "வொண்டர்" என்பது ஜெர்மானிய " wundran" என்பதிலிருந்து அறியப்பட்டாலும்,  அதற்கப்பால் எங்கிருந்து வந்ததென்பது மேலை ஆய்வாளர்க்கு எட்டவில்லை. அவர்கள் சுமேரிய, எலு, போனிசிய மொழிகளைத் தேடிப்பார்க்கவில்லை. சுமேரியத் தமிழ்த் தொடர்புகளை அறிந்திருக்கவில்லை. (மயில்)  தோகை என்னும் தமிழ் யூதத்தொன்மத்தில் உள்ளதை டாக்டர் கால்டுவல் கண்டுபிடித்தது பாராட்டுக்குரியது.  பண்டை மயில்தோகை நண்ணிலக் கிழக்குக்கு ( மிடல் ஈஸ்ட் நாடுகட்கு) தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதியானதை இது காட்டுகிறது. நாம் சொல்வதன் உள்ளுறைவு யாதெனின்  விந்தை - வொண்டர் ஒலியணுக்கம் ஆகும்.

ஆங்கில மற்றும் இந்தோ ஐரோப்பியம் தமிழ்ச் சொற்களின் ஒப்பீடு ஏறத்தாழ இருபது ஆண்டுகளின்முன் இணையத்தில் வெளியிடப்பட்டது.  அது இப்போது கிட்டவில்லை. இணையப் பதிவின் இருப்புக்கும் பணம் செலவாகிறது. அச்சிட்டு வெளியிட்டனரா என்பதை அறியோம்.


அறிக மகிழ்க.

தட்டச்சுப் பிறழ்வுகள் - பின்பு கவனம்.


கருத்துகள் இல்லை: