வியாழன், 3 டிசம்பர், 2020

ஏடன், ஏலன் - தோழமைப் பொருள்.

 எடுத்தல் என்பது அன்றாட வழக்கில் உள்ள சொல். எழுதுகோலை எடுத்தல், இலையை எடுத்தல் என்று பொருள்களை எடுத்தலுக்கும் இதை ஆள்வர். பெண் எடுத்தல், மாப்பிள்ளை எடுத்தல், விழா எடுத்தல் என்றும் வழக்கில் வரும். ஒரு நண்பனையும் எடுக்கலாம், நல்லபடியாக எண்ணிப்பார்த்த பின் நண்பனை எடுக்கவேண்டும். " நாடாது நட்டபின் வீடில்லை"  என்பதிலிருந்து நன்கு ஆய்ந்தபின்னரே ஒருவருடன் நட்புக்கொள்ளுதல் வேண்டும் என்பது தெளிவாகிறது.  நட்பும் எடுக்கவும் விடுக்கவும் கூடிய ஒன்றே ஆகும்.

எடுத்தல் என்பது வினைச்சொல்.

எடு + அன் =ஏடன். (தோழனாய் எடுக்கப்பட்டவன்)

இது முதனிலை திரிந்து (நீண்டு)   அன் விகுதி பெற்றது. அன் என்பது ஆண்பால் விகுதி.  தோழன் என்பது பொருள்.

ஏடன் -  ஏடி :  ஏடி என்பது  தோழி என்று பொருள்படும். இன்று பொருள் இழிந்துவிட்டதனால், இதைப் பொருள் வீழ்ச்சி அடைந்த சொல் (இழிபு) என்னலாம். இ என்பது பெண்பால் விகுதி.

ஏடன் என்பது  ஏடே. ஏடா என்றும்  ஏலே. ஏலா என்றும் திரியும்.

ஏல் என்பதற்கும் ஏற்கப்படுதல் என்னும் பொருள் உள்ளது.

ஏலன்( ஏலா) என்பது இதன்படி உரிய பொருள்பெறும்.

எனவே எவ்வாறு நோக்கினும் தோழமைப் பொருள் காண்பது இயலும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


ஏலா - இது விளிவடிவம்


கருத்துகள் இல்லை: