புதன், 13 செப்டம்பர், 2017

சமஸ்கிருதத்துக்கு முந்திய சந்தாசா மொழி.



சம்ஸ்கிருதம் என்ற சொல்லை மேனாட்டறிஞர் ஆய்ந்துள்ளனர்.  அதன்படி  “ நன்றாகச் செய்யப்பட்டது “ என்பது அதன் பொருள் என்று  கூறினர். இந்தப்பெயரை யார் எப்போது எந்தக் காரணத்தினால் வைத்தார் அல்லது வைத்தனர் என்பதற்கான ஆதாரம் ஒன்றும் யாருக்கும் அகப்படவில்லை. எனவே முன்னரே ஆய்வு செய்யப்பட்டிருந்தாலும் இனி யாராவது ஆய்வு செய்வதற்குத் தடைகள்  எவையும் இல்லை.


தமிழ் என்ற சொல்லும் பழங்காலம் தொட்டு வழங்கி வருகின்றது. தொல்காப்பியப் பாயிரத்திலும் இப்பெயர் வருகின்றது.  தமிழ்வழங்குமிடத்தைத் தமிழ்கூறு நல்லுலகம் என்று தொல்காப்பிய நூல் குறிக்கின்றது. இவ்விடத்தை “ நாடு”  என்னாமல் “  உலகம் “ என்று குறித்தபடியால் இது சிலபல நாடுகளை உள்ளடக்கிய நிலப்பகுதி என்று பொருள்கொள்ளலாம். ( உலகம், நாடு என்பன ஒருபொருளனவாய்த் தோன்றுமிடங்களும் உளவெனினும். ).  

 தமிழ் என்ற சொல் எங்கனம் யாரால் முதலில் பயன்படுத்தப்பட்டது என்பதும் யார் புனைந்தது என்பதும் தெரியவில்லை. தமிழ் என்னும் சொல்லமைப்புக்குப் பலர் பல பொருள் கூறியிருப்பினும், இது  அமிழ் என்ற சொல்லினின்றும் திரிந்தது என்று அறிஞர் சிலர்  கூறுவர்.   அமிழ் > தமிழ்.  அகர வருக்கச் சொற்கள் தகர வருக்கமாகவும் திரியும் என்பது சொன்னூல் முடிபு ஆகும்.  அமிழ்தல்  என்பது தமிழ் நிலப்பகுதி கடலில் அமிழ்ந்து  போனதைக்  குறிக்கும் என்பர். சமஸ்கிருத நூல்களும் தமிழ் நிலப்பகுதி கடலிற் சென்றதைக் குறிக்கின்றன. கடல்கோள்கள் பல நிகழ்ந்துள்ளன.  அண்மைய சுனாமிகள்  இவற்றுக்குச் சான்று பகரும். 

சமஸ்கிருதம் என்ற பெயர் முதன்முதலில் இராமாயணத்தில்தான் கிடைக்கின்றது.  ஆகவே சமஸ்கிருதம் என்ற பெயர் பிற்காலப் பெயராகும். முன்னர் இம்மொழிக்குச் சந்தாசா என்று பெயரிருந்தது.  சந்த மொழியாகச் சமஸ்கிருத மிருந்ததால், இப்பெயர் பொருத்தமானது ஆகும். இது “சந்த  அசை” என்ற தமிழ்ச் சொற்களின் அடிப்படையில் அமைந்தது ஆகும்.

சந்த அசை > சந்தசை > சந்தாசா

சிலவகைச் சந்தங்கள் பலரும் அறிந்தனவாய் உள்ளன. தம்-தம், தாம்-தாம், தன-தன- தனதாம்,  தாம்-தன எனப் பல உள.   தம்-தம் என்ற சந்தங்கள் திரிந்து  சந்தம் ஆயின.   த என்ற முதலுக்கு  ச என்பது ஈடாக நிற்குமிடங்களைப் பல இடுகைகளில் உரைத்துள்ளோம். தம்தம் என்பதே சந்தம் ஆம் என்றுணர்க. ஒரு திரிபைக் கண்டவுடனே மூளை குழம்பி அது வேறே   என்பார்  மொழியின் பல்வேறு திரிபுகளை அறியாதார்.  தசை = சதை:.  மறவாதீர்.

இங்ஙனம் சந்த அசை என்பது சந்தாச ஆகி அகில இந்தியச்  சேவை புரிந்ததும் நம் பாக்கியமே ஆகும்.



கருத்துகள் இல்லை: