சனி, 30 செப்டம்பர், 2017

புறப்பொருள்: பொருள்மொழிக்காஞ்சித் துறை பொதுவியல் திணை. (சுற்றம் பூட்டும் விலங்கு):

அடுத்து ஒரு சிறு புறநானூற்றுப் பாடலைப் பாடிப் பொருளுணர்வோம்.
நம் முன் இருப்பது 193-வது பாடல். இப்பாடலைப் பாடியவருக்கு இயற்பெயர் யாது என்று தெரியவில்லை. ஆனால் ஓரேருழவர் என்று ஏடுகளில் காணப்படுகிறது. ஓர் ஏர் உழவனின் செய்கையை வரணித்தபடியால் இப்பெயரால் குறிக்கப்பட்டார்.  இவர்பாட்டிலிருந்து இவரது புலமை புலப்படுகின்றது.

இப்பாடலின் திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக்காஞ்சி.
அறிஞர் உரைத்த ஓர் பேருண்மையைப் புலவர் எடுத்துப் பாடுவது பொருள்மொழிக்காஞ்சி என்று கூறப்படும்.  பெரும்புலவர் தாமே அறிஞர் நிலையை எய்தி ஓருண்மையை உலகுக்கு உணர்த்தும் பாடலும் பொருண்மொழிக்காஞ்சி என்றே சொல்லப்படும். இது பொதுவியல் என்னும் திணையின்பாற் படும். பொருளென்பது புரிந்து கண்டது.  எ-டு:
இருளோடு உறவு கொண்டு நில்லாமல் அருளோடு உறவு கொள்வாய் --  என்று பாடினால் அது பொருள்மொழிக்காஞ்சி ஆகிறது.  அஃது ஓர் உலகு போற்றும் உண்மையாம் தகுதி உடைமையினால்.

பிற புறத்திணைகட்கு இது பொதுவாதலால் பொதுவியல் எனப்பட்டது.

இனிப் பாடலைப் பார்ப்போம்.

அதள் எறிந்தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடுமன்;
ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே.

அதள் -  புடைத்துக் கொட்டிய உமி அல்லது தோல்.
எறிந்தன்ன -  வீசியது போல. .
நெடுவெண் – நீண்ட வெண்மையான.
களர் -  களர் நிலம். விளையா நிலம்
ஒருவன் -  வேடன் ஒருவன்
ஆட்டும் = ஓடவைக்கும்;
புல்வாய்  -  மான். (போல)
உய்தலும் கூடுமன் -  ஓடித் தப்பிப் பிழைத்தலும் முடியும்.
ஒக்கல் வாழ்க்கை -  சுற்றத்துடன் வாழும் வாழ்க்கை.
தட்கும் -  கட்டிப்போடும்.  ஆ=  அந்த.
கால் -  நடமாடும் உறுப்பாகிய காலினை.  (ஆ காலே)

பாடலின் பொருள்: புடைத்து எறிந்த தோல் பரப்பியது போலும் காணும்  ஒரு களர் நிலத்தில் தனித்து நிற்கும் ஒரு மான் என்றாலும் அதுவும் ஒரு வேடனிடமிருந்து ஓடித் தப்பிவிடும். யானோ சுற்றத்துடன் கூடி வாழ்கிறேன். இச்சுற்றம் என்னைத் தப்பவும் விடாமல் இங்கு வாழவும் விடாமல்  கால்களைக் கட்டிப்போட்டு   வைத்துவிட்டது. (அதனால் என்னால் இங்கு இருக்கவும் முடியவில்லை; தப்பி ஓடி வாழவும் முடியவில்லை.)

ஒருவனின் சுற்றம் அவன் விரும்பும் வாழ்க்கையை அவனுக்குக் கிடைக்காமற் செய்துவிடுகிறது. இது உலகத்து உண்மையாகும்.  

காதலியை இத்தலைவன் மணக்க இயலவில்லை என்று பாடலிலிருந்து தெரிகிறது. இவனுக்காக இரங்குவதன்றி யாது செய்யலாம்? பொருளாதார ஏற்றத் தாழ்வினாலோ பிற காரணங்களாலோ இத்தகு துன்பமுற்றோர் உலகிற் பலர். சிலரே நினைத்ததை அடைந்து இன்புறுவோர்.  இது உலகினியற்கை.


கருத்துகள் இல்லை: