செவ்வாய், 19 செப்டம்பர், 2017

chAsvatham சாஸ்வதம் ( நிலையானது)



ஒரு பொருளைச் சுவைத்தல் என்பது அப்பொருளை நுகர்தல். நுகர்தலெனின் அதனைப் பயன்படுத்திக்கொள்ளுதல். முன் காலத்தில் சுவைத்தலென்பதற்குக் குறுகிய பொருண்மையே இருந்திருக்கக்கூடும்.  அது நாவாற் சுவைத்தலையே குறித்திருத்தல் கூடும்.  எனினும் இதுபோலும் பதங்கள் நாள் செல்லச்செல்ல பேசுவோனின் எண்ண விரிவால் பொதுப்பொருளை உணர்த்தத்தொடங்கிவிடும். இது எம்மொழிக்கும் பொதுவான இயல்பே.  இரசம் ( ராஸ ) என்ற மலாய்க்சொல், நாச்சுவையினைச் சிறப்பாகக் குறிப்பினும் நாளடைவில் மனவுணர்வினையும் குறிக்கத் தொடங்கிற்று. தமிழிலும் இரசம் என்பது உண்ணும் வேவித்த சாற்றைக் குறிப்பதோடு, நவரசம் என்கையில் தொண்சுவைகளையும் குறிக்கின்றது. ரசனை, ரசித்தல், ரசிகன், ரசிகை முதலிய சொற்களையும் அலசுவீர். அரைத்துச் சமைக்கப்பட்ட அரைசம் என்னும் ரசம் எங்கே,  ரசிகமணி எங்கே? பொருள்விரிவு வெகுதொலைவை எட்டிவிட்டது!  அரை(த்தல்)  >  அரைசல் > அரைசம் > அரசம் (  ஐகாரக்குறுக்கம் ) > ரசம் ( தலையிழப்பு ) > இரசம் (பிறதலை பெறுதல் ) .

இப்போது “சாஸ்வதம்” என்பதற்கு வருவோம். ஒருபொருளைச் சுவைப்போன் செத்தபின் அவனால் சுவைக்க இயலாவிடின், அது சாசுவதமில்லை.  அவனும் அழிவோன்.  பொருளும் அழிதக்கது.  நிலையற்றது. என்றுமில்லாதது.  சுவைபொருள் அழியினும் சாஸ்வதமில்லை;  சுவைப்போன் அழியினும் சாஸ்வதமில்லை. இது இருகூர் உடைய கத்தி.

நிலையானதெனின், இறப்பின்பின்னும் சுவைதக்கதாய் இருக்கவேண்டுமே!
சுவை :   ---   சா+ சுவை + தம் =  சா + சுவ + தம் = சாசுவதம்.
தம் அழிவின்பின்னும் தாம் சுவைக்கத் தக்க நிலையுடையது.
சுவை என்பது ஐகாரம் குறுகி சுவ என்றானது.

தம் என்பதைச் சொல் இறுதிநிலையாயும் “தம்” என்ற சொல்லின் சேர்க்கையாயும் கருதலாம்.  தாம் – தம்;  அல்லது து (விகுதி)+ அம்(விகுதி ).= தம்.  எங்ஙனமாயினும் பொருளில் வந்துற்ற மாறுபாடு ஒன்றுமில்லை.
இச்சொல் தமிழ் மூலத்தது.

குறிப்பு:ch
முன் காலம் என்பதைச் சேர்த்தெழுதினால் கணினி அதை “முங்காலம்”  என்று “தன்-திருத்தம்”  செய்துவிடுகிறது.  ஆகவே முன் காலம் என்று இடைவெளி தந்து எழுதவேண்டியுள்ளது. இவைபோல்வன பிறவும் இங்கனம் பாதிக்கப்படுகின்றன.  படிக்கும்போது கவனமாய்ப் படிக்க.  “தன்மாற்று” என்று எழுதின் பொருத்தம் என்று தோன்றுகிறது. இது கவனத்தில் உள்ளது. முன் காலம் – முற்காலம் எனில் மாற்றம் நிகழ்வதில்லை.

கருத்துகள் இல்லை: