புதன், 6 செப்டம்பர், 2017

சங்கம் தமிழ்ச் சொல்லா?



தங்கு-வும் சங்கு-வும்.

இதன் பிறப்பை அறியவிரும்பினால், மிக்க எளிதாகவே அறிந்துகொள்ளலாம். தங்கு  என்பதில் இருக்கும் முதல்   “தம்” என்பதாகும்.  தன் என்பதோ தம் என்று திரிந்து பன்மை காட்டியது. தொடக்கத்தில் பன்மை யாக அமைந்தது பின் பணிவுப் பன்மையாக ( மரியாதை ) மாறியமைந்தது. எவ்வகைப் பன்மையாகினும்  பன்மையே யாகும்.

ஒன்றுடன் இன்னொன்று  சேர்ந்தாலே பன்மை. இதற்குத் “தன்”னுடன் இன்னொரு “தன்”  இணைந்து தம் ஆகவேண்டும்.  மொழிவரலாற்றின் பிற்பகுதி நிகழ்வுகளின் படி "தம்" மரியாதைப் பன்மையாக உருமாறித் தன் முழுப்பன்மைத்தன்மையை இழந்ததனால், "~கள்" விகுதி இணைக்கப்பட்டது.  தங்கள் ஆயிற்று.  ~கள் விகுதி உயர்திணையில் வந்திணைவது பண்டை வழக்கன்று.
தான் (தன் ) ஒரு வீட்டிலிருந்தால் அவ்வீட்டில் இன்னொரு தான் (தன்) வந்திணைந்து,  தம் ஆகிய நிலையிலே,  இவ்வசைவு குறிக்க “கு”  இணைக்கப்பட்டது.  கு என்பது நகர்வும் அடைவும் காட்டும் சொல்.  “சென்னைக்கு”   “மதுரைக்கு”  “பூண்டிக்கு” என்று,  பேச்சு நிகழுமிடத்தினின்று இவ்விடங்களுக்குக் செல்லுதலையும் சென்றடைதலையும் “கு” என்ற சிறு சொல் குறிக்கிறது. இப்பொருளிலேதான், தன்னுடன் இன்னொரு தன் இணையத் தம் ஆகி அவ் வியங்குதல் குறிக்க கு இணைந்து “ தங்கு”  என்ற சொல் அமைந்தது.

தகரத்தில் தொடங்கியது  சகரமாகத் திரியும். இதைப் பல இடுகைகளில் தெரிவித்துள்ளோம்.   தசை > சதை என்பது ஓர் எளிய உதாரணம்.1    சனி கிரகத்துக்கு தனி என்ற சொல்லிலிருந்து பெயர் அமைந்தது.   தனி> சனி.  சனி என்பது பிடித்தால் விடாத தனிச்சிறப்புடையது என்பர் கணியர் (சோதிடர்).  கருப்பு நிறமாதலின் காரி என்பதும் பண்டைப் பெயராகும்.    ஆக,  தனி > சனி என்பதறிக.

இப்பெற்றியினாலே  தங்கு என்பது சங்கு என்று மாறியது.   சங்கு என்பது ஒரு கூடு.  அதில் ஓர் உயிர் கூடி வாழ்கின்றது.   ஆகவே,   தம் > சம் > சங்கு ஆனாது. புலவர் கூடி அரசனுடன் வைகிய இடம் சங்கம்  ஆயிற்று.. சின்னாட்களாவது தங்கி அரசுவிருந்துண்டு பரிசில் பெற்றுச் செல்லும் கூட்டம்  சங்கம்.  புலவர் பலர்  அங்கேயே தங்கிச் செல்ல,  சிலர் நிரந்தரமாகத் தங்கினர்.    மாங்குடி மருதனார் (சங்கப்புலவர்)  போல. உலகமொடு நிலைஇய   பலர்புகழ் சிறப்பின்  புலவர்கள் அவர்களாவர்.
இற்றை நிலையில் "சங்கம்" என்ற்பாலது  தேசிய சேவை செய்துவரும் சொல்.
இது நம் பழம்பெருமையின்  இன்னும் மாறாத அறிகுறியாகும்.

வேறு சொற்களுடன் அடுத்துச் சந்திப்போம்.

----------------------------------------
1. (  உது + ஆர் + அணம்..  உது = முன் நிற்பது;  ஆர்தல் = நிறைதல் ; அணம் = ஓர் தொழிற்பெயர் விகுதி ).  

கள்ள மென்பொருள் நுழைத்த பிழைகள் திருத்தப்பட்டன..
அவை மீண்டும் வந்து இடுகையில் மாற்றங்களை விளைவிக்கலாம்.
இன்று 9.5.2018 

சில மாற்றங்கள் கள்ள மென்பொருளால் உண்டாக்கப்பட்டுள்ளன. அவற்றை திருத்தியமைத்துள்ளோம். இன்று 7.9.2018.   இன்று எம் உலாவி ஓடவில்லை யாதலால் அது பழுதுபார்க்கப்பட்டு "விண்டோஸ்" அமைப்பும் பின்மைத்திருத்தம்  restore  செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: