வியாழன், 21 செப்டம்பர், 2017

வெட்சித் திணை ஆதாரம் ஆதரவு (தலைத்தோற்றம் தொடக்கம்)



ஆதாரம் ஆதரவு என்ற சொற்களை முன் நாம் விளக்கியதுண்டு.
இதை அறிந்து கொள்வதற்கு அப்துல் கலாம் போன்ற அறிவியல் மூளை வேண்டியதில்லை. இயல்பான அறிதிறனால் உணரலாம்.

வெட்சித் திணையில் படைத்தலைவன் பகைவரின் ஆக்களைக் கவர்ந்து வருவான். இதனை அறிந்த அவன் ஊர்மக்கள் மகிழ்வில் துள்ளுவர்.
இதற்குத் தலைத்தோற்றம் என்று பெயர். இந்நிகழ்வைப் புலவன் பாடலாக்கினால் அப்பாடல் வெட்சித் திணையில் தலைத்தோற்றம் என்னும் துறையின் பாட்டாக வரும்.

அதன்பின் படைத்தலைவன் கவர்ந்துவந்த ஆக்களை ஊரம்பலத்தே நிறுத்துவன். அதற்குப் பெயர் தந்துநிறை என்பர். தந்துநிறை நிகழ்கையில் துடி விம்மும்.  அதாவது பறையடித்து ஆரவாரம் செய்வர்.

இந்த ஆக்களெல்லாம் மக்களுக்கு ஆக்கப்பட்டன. விரைவில் அவை “பாதீடு”  செய்யப்படும். யார்யாருக்கு எத்தனை ஆக்கள் என்று பகிர்ந்து அளிக்கப்படும். ஊர்மக்கள் மகிழ்வர்.

இப்போது ஆதரவு கிடைத்துள்ளது.  அது அரசு தரும் ஆதரவு.   ஆ= மாடு.   தரவு = கொடுத்தல். தாரம் = கொடுத்தலே ஆகும்.
தமிழரசு போய் ஆநிரை கவர்தல் இல்லாதொழிந்த காலத்து “ ஆதரவு”  “ஆதாரம்”  எல்லாம் இல்லாமல் போயிற்று.  ஆனால் இச்சொற்கள் ஒரு புதிய பொருட்பொலிவு பெற்று பொதுவான அரவணைப்பை உணர்த்தின.  ஒன்றும் கிடைக்காதவன் ஆதரவில்லை ஆதாரம் இல்லை என்று புதிய பொருளில் இச்சொற்களை வழங்கினான்.

கருத்துகள் இல்லை: